வணிகர் கனவில் வந்த விநாயகர்

கொல்லங்கோடு மகாராஜாவிடம் இதே குலத்தைச் சேர்ந்தவர் அமைச்சராக இருந்ததால், அவர் மூலமாகவே போருக்குத் தேவையான நிதி கிடைத்துள்ளது.
வணிகர் கனவில் வந்த விநாயகர்

கேரள மாநிலத்துக்கு உள்பட்ட பாலக்காட்டில் உள்ள வித்தூணியார் கோயில் வளாகத்தில் 17-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வணிகத்தில் சிறந்து விளங்கிய ஐநூற்றுச்செட்டியார் குலத்தைச் சார்ந்த முத்துக்குமாரசாமி, அவருடைய உறவினர்கள் சிலர் அவ்வப்போது வந்து தங்குவர். அவ்வாறு ஒருநாள் தங்கியபோது முத்துக்குமாரசாமியின் கனவில், கோயில் அருகே உள்ள குளத்தில் தான் இருப்பதாகவும், தனக்கு கோயில் அமைக்குமாறும் தெய்வ உத்தரவு வந்துள்ளது.

அடுத்த நாள் காலையில் குளத்தில் சுவாமியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அன்றிரவும் கனவில் வந்த தெய்வம் தன்னைக் கண்டுபிடிக்குமாறு உத்தரவிட்டது. மீண்டும் முயற்சித்தபோது, ஆலமரத்தருகே இருந்த யோகீஸ்வரர் ஒருவர், ""அந்தப் பைத்தியக்காரன் இன்றும் உன்னைத் தூங்கவிடவில்லையா?'' என்று கேட்டுள்ளார். அவரே ஒரு கல்லைக் குளத்தில் வீசி அங்கு சென்று பார்க்கச் சொன்னார். அந்த இடத்தில் தெய்வச் சிலைகள் இருந்ததால் ஆச்சரியப்பட்ட முத்துக்குமாரசாமி, அவற்றைப் பாதுகாத்து கோயில் சீரமைக்கும் பணியைத் தொடங்கிவைத்தார். அப்போது மலையப்பாளையத்துக்குத் திரும்பிச் செல்லுமாறு யோகீஸ்வரர் உத்தரவிட்டார். அங்கு சென்றபோது, தனது சகோதரரால் தொடங்கப்பட்ட மலையப்பாளையம் உதயகிரி முத்து வேலாயுதசாமி கோயில் கும்பாபிஷேகத் திருப்பணியைப் பூர்த்தி செய்யும் புண்ணியப் பணியிலும் ஈடுபட்டார்.

இதற்காக யானை வாங்க மைசூரு மகாராஜாவிடம் சென்ற சகோதரர் சிவபதம் அடைந்த தகவலைத் தெரிந்து வருந்தி, மலையப்பாளையம் கோயிலில் கீழ்ப்பகுதியில் குகையில் ஜீவசமாதி அடைந்தார் முத்துக்குமாரசாமி. இதற்கான ஆவணங்களும் ஜீவசமாதியும் இன்றும் மலையப்பாளையம் கோயிலில் இருப்பதைக் காணமுடியும். முத்துக்குமாரசாமி தொடங்கி வைத்த பாலக்காடு வித்தூணியார் கோயில் கும்பாபிஷேகப் பணிகளை அவருடைய புதல்வர்கள் முன்னின்று சிறப்பாக நடத்தினர்.

இத்தருணத்தில் மைசூரு மகாராஜா போருக்காக நிதியுதவி தேடியதாகவும், முத்துக்குமாரசாமி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நிதியுதவியளித்ததாகவும் தெரியவருகிறது. மைசூர் மகாராஜா, "போருக்காக எவ்வளவு நிதி தரமுடியும்'' என்று கேட்டாராம். முத்துக்குமாரசாமியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், ""எவ்வளவு தேவை என்று கடன் வாங்குவோர்தான் கேட்க வேண்டும்'' என்று பதிலளித்துள்ளனர். "" உங்களால் எவ்வளவு தர முடியும்'' என்ற மன்னனின் கேள்விக்கு, ""செம்பு, வெள்ளி, தங்கத்தில் உங்களுடைய அரண்மனை வரை சால்விடுவேன்'' என்று பதிலளித்துத் தேவையான உதவிகளையும் செய்துள்ளனர்.

கொல்லங்கோடு மகாராஜாவிடம் இதே குலத்தைச் சேர்ந்தவர் அமைச்சராக இருந்ததால், அவர் மூலமாகவே போருக்குத் தேவையான நிதி கிடைத்துள்ளது. பாலக்காடு கோயில் அமைத்த பிறகு மைசூரு மகாராஜாவுக்குத் தகவல் கொடுக்கச் சென்றபோது, கொடுத்த நிதியைக் கேட்கத்தான் வந்ததாக நினைத்து அதே குலத்தைச் சேர்ந்த அமைச்சரிடம் மகாராஜா கேட்டுள்ளார். கும்பாபிஷேகத்துக்கு அழைக்க வந்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். அப்போது கோயிலுக்குத் தேவையான இடத்தைத் தருமாறு மகாராஜா உத்தரவிட்டுள்ளார். மிகப் பெரிய இடத்தை அளித்து, அதற்கான செம்புப் பட்டயத்தையும் மகாராஜா கொடுத்துள்ளார்.

இன்று வரை சுமார் 350 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தக் கோயிலுக்கு எம்மாம்பூண்டி வகை ஐநூற்றுச் செட்டியார் சமூகத்தினர் திருப்பணிகளைச் செய்து பராமரித்து வருகின்றனர்.

இந்தக் கோயிலில் யோகீஸ்வரனுடன் கூடிய வித்தூணி விநாயகர், நால்வர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, முருகன் வள்ளி, தெய்வயானை, சண்டிகேஸ்வரர், ஆஞ்சநேயர், கால பைரவர், நவகிரகங்கள் உள்ளன. சனீஸ்வரருக்கு தனி கோயில் உள்ளது.

புகழ் பெற்ற இந்தக் கோயில் கும்பாபிஷேகம் மார்ச் 20}ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான யாக சாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை (மார்ச் 15) கணபதி ஹோமத்துடன் தொடங்குகின்றன. கூனம்பட்டி ஆதீனம் ராஜ சரவணமாணிக்க வாசக சுவாமிகள், உள்ளிட்ட தமிழகத்தின் ஆதினகர்த்தர்கள் பலரும் விழாவில் பங்கேற்கின்றனர். பாலக்காடு பேருந்து நிறுத்தத்தில் இருந்து மிக அருகில் இக்கோயில் அமைந்துள்ளது.

தொடர்புக்கு- 98954 26580.

ஆர்.வேல்முருகன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com