தீபமே தெய்வம்..!

தமிழ்க் கலாசாரத்துடன் கலந்தது தீப வழிபாடு.
தீபமே தெய்வம்..!
Published on
Updated on
1 min read

தீபவழிபாடு என்பது மிகவும் தொன்மையானது. தமிழ்க் கலாசாரத்துடன் கலந்தது. தீப வழிபாடு குறித்து சங்க இலக்கியங்களில் இருந்து திருஞான சம்பந்தர் தேவாரம் வரை பல குறிப்புகள் காணப்படுகின்றன. இந்த வழிபாட்டுக்காகப் பயன்படுத்தப்படும் விளக்கு வகைகளில் காமாட்சி விளக்கு புனிதமானது. கை விளக்குகள் ஏழினில் ஒன்று. பெண்களுக்கு அளிக்கப்படும் சீர்வரிசைகளில் காமாட்சி விளக்கு அவசியம் இடம்பெறும்.

இவ்வாறு வீடுகளில் பயன்படுத்தப்படும் புனிதமான மங்கலப் பொருளாகிய காமாட்சி விளக்கு ஓர் கோயிலின் கருவறையில் பிரதிஷ்டையாகியுள்ள அம்பாள் சொரூபமாக வழிபடப்படுகிறது.

தேவக்கோட்டையில் தீனாசாமி வீட்டு வேல்முருகன் கோயிலில் மூலவர் சந்நிதியில் விளக்கே முருகன் அம்சமாகவும், லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் ஓர் அம்மன் கோயிலில் மூலவர் சந்நிதியில் விளக்கே பிரும்மஸ்வரூபிணி என்ற பெயரில் அம்பாள் ரூபமாகவும் வழிபடப்படுகிறது.

அந்த வகையில், சென்னையில் கோயில்கள் நிறைந்த பகுதியாக விளங்கும் நங்கநல்லூரில் டி.என்.ஜி.ஓ. காலனி முதல் தெருவில் (சுதந்திர தினப் பூங்கா அருகே) அமைந்துள்ள சக்தி விநாயகர் கோயிலில் காமாட்சி விளக்கு பிரதிஷ்டையாகி அம்பாள் சொரூபமாக வழிபடப்படுகிறது.

தற்போது, இந்தக் கோயிலில் ஒரே சந்நிதியில் விநாயகரையும் அவருக்கு இடதுபுறம் மேருவுடன் காமாட்சி விளக்கில் அம்பாளையும் (திரிபுரசுந்தரி), நர்மதா நதிக்கரையில் இருந்து கொண்டுவரப்பட்ட சிறிய பாண லிங்கத்தையும் (காஞ்சி மகான் கொடுத்தருளியதால் சந்திர மௌலீஸ்வரர் என்ற திருநாமம்) தரிசிக்கலாம்.

விநாயகருக்கு இடதுபுறம் மற்றொரு சந்நிதியில் பாலமுருகன் வேலுடன் சந்நிதி கொண்டுள்ளதையும் காணலாம். தனியாக ஒரு சந்நிதியில் வராஹி அம்மனை சுதைரூபமாகவும், மற்றொன்றில் சிறிய சண்டிகேஸ்வரரையும் தரிசிக்கலாம்.

மொத்தத்தில் பஞ்சமூர்த்திகளும் அமையப் பெற்று ஒரு சிறிய சிவன் கோயிலாகவே காட்சியளிக்கிறது இந்தக் கோயில். காஞ்சி மடாதிபதி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இந்தக் கோயிலுக்கு விஜயம் செய்து, அருளாசி அளித்துள்ளார்.

இங்கு நடைபெறும் சங்கடஹர சதுர்த்தி, வளர்பிறை சஷ்டி, பிரதோஷம், சிவராத்திரி வழிபாடுகள், பஞ்சமி திதியில் நடைபெறும் வராஹி பூஜையில் பக்தர்கள் பெருமளவு பங்கேற்கின்றனர்.

இந்தக் கோயிலில் வாழைத் தாரை அளித்து வேல் வழிபாடு செய்தால் நினைத்தது கைகூடும் என்பது ஐதீகம்.

இந்த ஊரில் காலனி உருவானபோதே அமைக்கப்பட்டு, முதல் கும்பாபிஷேகமே பிள்ளையார் சதுர்த்தியன்று நடைபெற்ற பெருமையுடையது இந்தக் கோயில். காலப்போக்கில் சந்நிதிகள் விரிவுப்படுத்தப்பட்டன. இந்தக் கோயில் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் ஸ்ரீசிவசக்தி விநாயகர் சத்சங்கம் என்ற அமைப்பின் மூலம் 2016}ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்துக்குப் பின்னர் பல திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. புதுப்பொலிவுடன் திகழும் இந்தக் கோயிலில் மார்ச் 27}இல் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com