கடற்கரை அருகே வடசபரி

கடற்கரை அருகே வடசபரி

மனிதன் தனது விலங்குக் குணங்களில் இருந்து விடுபட்டு பூரண மனித நிலையை அடைதலே நோக்கமாகும்.

"தத்வமஸி' என்பது சபரிமலை கொடிமரத்தின் முகப்பில் உள்ள வாசகம். "எந்தக் கடவுளை நீ தேடி வந்திருக்கின்றாயோ, அந்தக் கடவுளே நீதான்' என்பதுதான் அதற்கான அர்த்தம். "நீதான் அது' என்பது அத்வைத வாக்கியம். மனிதன் தனது விலங்குக் குணங்களில் இருந்து விடுபட்டு பூரண மனித நிலையை அடைதலே நோக்கமாகும். பூரண மனிதன் புனிதன் ஆகிறான்; புனிதன் தெய்வம் ஆகிறான். "வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வம்' என்பது வள்ளுவம். எனவேதான் மாலை போட்ட அனைவரையும் "சாமி' என்கிறோம். நாற்பத்தெட்டு நாள்கள் முழுமையாக விரதம் இருந்து, தன்னையே கட்டுப்படுத்தி, தீய பழக்கங்களை உதறி, மனிதன் தன்னை மேம்படுத்திக் கொள்வதற்கான யாத்திரையே சபரிமலை யாத்திரையாகும்.

சக்திமிக்க சிவன், மஹா}விஷ்ணு இருவரின் பேரருளும், ஓரருளாக இணைந்த மஹா சக்தியே ஐயப்பன் ஆவார். குளிர்ச்சிமிக்க மலையில் வாழும் அவருக்கு குளிர்ச்சி தரும் நெய்யினால் தொடர்ந்து அபிஷேகம். அவரால் மட்டுமே அதனைத் தாங்க இயலும். ஏனெனில் அது ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெரும் ஜோதி. அந்த நெருப்பில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நெய்யை அபிஷேகம் செய்கிறோம். ஆண்டு முழுவதும் நெய்யை ஏற்கும் அந்த அருட்

பெரும்ஜோதி ஆண்டுக்கொருமுறை தன்னையே மகர ஜோதியாகக் காட்சி தருகிறது. பந்தளமன்னன் பெற்ற பரம்பொருளைக் காண தொழிலதிபர் எம்.ஏ.எம்.

ராமசாமி 1973}ஆம் ஆண்டு முதல் முதலில் சென்று வழிபட்டார். அதைத் தொடர்ந்து, சென்னையில் கடற்கரையோரம் மூன்று தளங்களாக பதினெட்டு படிகளும், இராஜா அண்ணாமலைபுரத்தில் "வடசபரி' அமைக்கப் பெற்று 1982}ஆம் ஆண்டு ஜனவரி 25}ஆம் தேதி முதல் கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது.

இருமுடி தாங்கிய ஆண்களும், பத்து வயதிற்குக் கீழான, ஐம்பது வயதிற்கு மேலான பெண்களும் ஒரு மண்டலம் விரதம் இருந்து பதினெட்டு படிகளில் ஏறி ஐயப்பனை வழிபாடு செய்கின்றனர். கார்த்திகை முதல் தேதி முதல் ஒரு மண்டலமும், பின்னர் மகரபூஜை, தமிழ் மாதத்தில் முதல் ஐந்து நாள்கள் என சபரிமலை பாரம்பரிய வழக்கப்படியே இங்கும் பதினெட்டாம்படி திறக்கப்பெற்று, இருமுடி தாங்கியவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இருமுடி தாங்காதவர்களுக்குத் தனிப்பாதை வழியே தரிசனத்துக்கு வழி உள்ளது.

கேரள ஆலய அமைப்பிலேயே கட்டப்பெற்ற கோயில். ஒளிரும் தீப ஜோதிகளுக்கு இடையே மகர ஜோதியான மணிகண்டன், ஐயப்பன் அழகுத் திருமேனியாக அருளை வாரி வழங்குகிறார். கேட்பவர்களுக்குக் கேட்ட வரம் தரும் கற்பக விருட்சமாக அருளை வாரி வழங்குவதால் பக்தர்கள் கூட்டம் பல்லாயிரமாகப் பெருகி வருகிறது. இங்கேயும் கன்னிமூலை கணபதி, மஞ்சள் மாதா, மாளிகைபுரத்தம்மன், நாகராஜா சந்நிதிகள் மலையாள ஆகம விதிப்படி உள்ளன.

நாற்பது அடி உயரமுள்ள பிரம்மாண்டமான கொடிமரம் ஐயப்பன் அருளுக்குக் கட்டியம் கூறுகிறது. 1,500 பக்தர்கள் தங்குவதற்கேற்ப பிரம்மாண்டமான தியான மண்டபம் உள்ளது. கார்த்திகை முதல் நாள் முதல் மண்டல பூஜையும், பிரம்மோற்சவமும் சிறப்பாகும்.

ஐயப்பன் அருள்வலம் வருவதற்கு தங்கரதம், வெள்ளி ரதங்கள் உள்ளன. திருவிழா நாள்களில் ஐயப்பன் ரதம் ஏறி வலம் வரும் காட்சி மெய்சிலிர்க்கும் அனுபவமாகும். தற்போது தெய்வ உத்தரவுப்படி ஸ்ரீவிநாயகர், நவகிரகங்கள், ஸ்ரீஆஞ்சனேயர் சந்நிதிகளும் அமைக்கப் பெற்றுள்ளன.

இந்தக் கோயிலுக்கு டாக்டர் ஏ.சி.முத்தையா தலைமையில், கும்பாபிஷேகம் மார்ச் 27-இல் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com