ஊரும், பெருமையும் பாடல் பெற்ற கொங்கேழுத் தலங்களில் ஒன்று "வெஞ்சமாக்கூடல்'. இவ்வூர் "வெஞ்சமாங்கூடலூர்' என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள சிவன் கோயில் பழங்கால பெருமையுடையது.
சிற்றாறு நதி அமராவதியுடன் கூடும் துறையில் அமைந்துள்ளதே வெஞ்சமாக்கூடல். சாதம் இல்லாத உண்ணக் கூடிய பொருள்களுக்கு "வெஞ்சனப் பொருள்' என்று பெயர் உண்டு. அருகில் உள்ள மலையில் விளையும் வாசனை திரவியங்களும் ஆற்றின் வழி வந்து இறைவனின் காலை தொட்டுத் தடவிச் செல்வதால் "வெஞ்சனம் கூடும் ஊர்' என்றும் ஊருக்குப் பெயர் காரணம் சொல்வார்கள்.
"விகிர்தன்' என்றால் மேன்மையைப் பெற்றவன். சுயம்புவாய் உருவான இறைவன். மங்கலத்தையும், நன்மையும் தரவல்லவன் என்ற பொருளில் "கல்யாண' என்ற அடைமொழி சேர்த்து "கல்யாண விகிர்தேசுவரர்' என அழைக்கப்படுகிறார். அம்பாள் விகிர்தேசுவரி, விகிர்தநாயகி, மதுரபாஷிணி என்ற திருப்பெயர்களால், தனி சந்நிதியில் நின்றக் கோலத்தில் அமைந்திருக்கிறாள்.
கௌதம முனிவரின் மனைவி அகலிகையின் அழகில் மயங்கினான் இந்திரன். ஒரு நாள் இந்திரனின் மாயச் செய்கையால் கௌதம முனிவர் பொழுதுக்கு முன்னரே தவறாக ஆற்றுக்குக் கிளம்பி, தவ வேள்வி முடிக்கச் சென்றார். இந்திரனோ கௌதம முனிவரின் பர்ண சாலைக்குள் அவர் உருவில் நுழைந்து அகலிகையை நோக்கிச் சென்றார். ஆற்றுக்குச் சென்ற கௌதம முனிவர் தனது தவ வலிமையால் இதை உணர்ந்தார்.
காம வயத்தால் தவறு செய்த இந்திரனின் உடல் முழுவதும் குறிக்கண் பெறவும், கூடலில் அமர்ந்து அருள் செய்யும் இறைவனைக் குறிப்பிட்ட கால அளவுக்குப் பிறகு துதித்து சாபவிமோசனம் பெறவும், தன்னிலை மறந்து செய்தத் தவறுக்காக அகலிகை கல்லாகி ராமன் பாதம் பட்டு விமோசனம் பெறுவாள் எனவும் கௌதமர் தண்டனையையும் விமோசனத்தையும் அளித்தார்.
அதன்படி இந்திரன் சில காலம் மறைந்துத் திரிந்து இங்குள்ள சுயம்பு லிங்கத்தை வணங்கி, தன் சாபம் தீர்த்தான் என்பது தல வரலாறு. இந்தக் கோயிலுக்கு சுந்தரமூர்த்தி நாயனார் வருகை தந்ததாக, பெரிய புராணத்தில் சேக்கிழார் குறிப்பிடுகிறார்.
ஐந்து நிலை ராஜகோபுரம், துவஜஸ்தம்பம், மகாமண்டபம், அறுபத்து மூவர், விநாயகர் சந்நிதிகள், பஞ்சலிங்கங்கள், ஆறுமுகப் பெருமான், சண்டிகேஸ்வரர், நடராஜர், பைரவர், நவக்கிரகங்கள், உள்ளிட்டவை கோயிலில் உள்ளன. கரூர்-திண்டுக்கல் சாலையில் இந்த ஊர் உள்ளது.
பொ.ஜெயச்சந்திரன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.