கார்கோடீஸ்வரம், ரதிவரம், ரதிவாபுரம், சதுர்வேதிமங்கலம்... என்றெல்லாம் அழைக்கப்பட்டு, தற்போது "காமரசவல்லி' என்ற சிறப்பு வாய்ந்த ஊர் உள்ளது.
"சதுர்வேதிமங்கலம்' என்னும் பெயரே நான்கு வேதங்களிலும் சிறந்தோர் வாழ்ந்த ஆன்மிகத் தலம்.
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்தப் பெயரில் ஊர்கள் உள்ளன. குறிப்பாக, சிவகங்கை மாவட்டத்துக்கு உள்பட்ட சதுர்வேதிமங்கலம் என்ற ஊரில் உருத்திரகோடீஸ்வரர் என்ற புகழ்பெற்ற சிவன் கோயில் உள்ளது.
இதுபோன்ற புகழ்பெற்று திகழும் காமரசவல்லி கிராமத்தில் ஸ்ரீகார்கோடேசுவரர், செüந்தரேசுவரர் ஆகிய திருநாமம் கொண்ட சிவனும், ஸ்ரீபாலாம்பிகா திருநாமம் கொண்ட அம்பாளும் காட்சி அளித்து பெருமை சேர்க்கும் வகையில் இவ்வூர் உள்ளது.
சிவனின் கோபத்துக்கு ஆளாகி நெற்றிக்கண் நெருப்பால் எரித்து அழிக்கப்பட்ட காமனின் (மன்மதன்) மனைவி ரதிதேவி தன் கணவனை மீட்டுத் தருமாறு மகாவிஷ்ணுவிடம் முறையிட்டார். அவர் ரதியை இத்தலத்தில் உள்ள "சுந்தரதீர்த்தம்' என்ற குளத்தில் நீராடி சிவலிங்க பிரதிஷ்டை செய்து, தவம் செய்யுமாறு கூறினார். அதேபோல் ரதியின் தவத்துக்கு மனம் மகிழ்ந்த இறைவன் மன்மதனை மீண்டும் உயிர் பெறச் செய்து அருளினார். அவ்வாறு காமனும் ரதியும் ஒன்று சேர்ந்த தலம் இது.
இன்றைய காலங்களிலும் சில வீடுகளில் மாசி மாதத்தில் காமன் கதையை விளக்கிக் கூறி, இரண்டாக வெட்டிய ஆமணக்குச் செடியை நட்டு வைப்பார்கள். இது சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு, எட்டு நாள்களுக்குள் உயிர்ப்பித்து மீண்டும் தழைத்து வருவதாக நம்பிக்கை நிலவுகிறது.
கடக ராசி, கடக லக்கினம் கொண்டவர்கள் செüந்தரேசுவரர் என்கிற கார்க்கோடசுவரரை வழிபடுவது மிகவும் சிறப்பு. திருமணப்பேறு, குழந்தைப் பேறு வேண்டுவோர், இல்லறம் செழிக்க விரும்புவோர், நாகதோஷம் உள்ளவர்கள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி, பரிகாரம் செய்து கொள்ளும் கோயிலாகும்.
கோயில் அலங்கார மண்டபத்தில் சோழர் கலைப்பாணியில் சிற்ப கல்பலகையொன்று நான்கு அடி நீளமும், ஓரடி அகலத்திலும் உள்ளது. இதில் சிவலிங்கத்தை கார்கோடகன் பாம்பு வழிபடுவது போலவும், தேவர்கள், முனிவர்கள், அரசன், அரசியார் வழிபட்டு நிற்பது போலவும் செதுக்கப்பட்டுள்ளது.
பரீட்சித்து மகாராஜா நாகம் தீண்டி இறந்துவிட அவனுடைய மகன் உலகில் உள்ள எல்லா பாம்புகளும், யாகத்தீயில் விழுந்து மடிந்துவிட, பாம்புகளின் தலைவனான கார்கோடன் மட்டும் மகா விஷ்ணுவை நோக்கி தவமிருந்து, சிவனை வழிபட்டு தன்னுடைய குலம் தழைக்க வரத்தை கடக லக்கினம், கடக ராசியில் பெற்றார்.
கார்கோடன் வரம் பெற்றதால், "ஸ்ரீகார்கோடேசுவரர் சுவாமி' என காரணப் பெயருடன் அருள்பாலிக்கிறார்.
" தன்னை யார் வந்து வணங்கினாலும், அவர்களுக்கு கால, சர்ப்ப தோஷ விளைவுகள் இருக்கக் கூடாது. யாரும் பாம்பு தீண்டி இறக்கக் கூடாது' என்று ஸ்ரீகார்கோடேசுவரர் இரு கட்டளைகளைப் பிறப்பித்தார் என்பது செவிவழிச் செய்தி.
இந்தக் கோயிலில் நாற்பதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் மிகவும் பழைமையானது ராஜகேசரிவர்மன் என்ற பட்டம் கொண்ட சுந்தரசோழனின் ஐந்தாம் ஆண்டில் எழுதப் பெற்றதாகும்.
வெளிப்புற சுவர்களில் அற்புத சிற்பங்கள் நிறைந்துள்ளன. தாங்குதளத்தில் புராணக் காட்சிகள் கண்டபாத குறுஞ்சிற்பங்கள், சிவனின் ஆடல் காட்சி, கோஷ்டத்தில் அமைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர், லிங்கோத்பவர். பிரம்மன், துர்க்கை அனைத்தும் பெருமை சேர்க்கும் பேரழகு. இறைவி பாலாம்பிகா ஈசனை வணங்கியபடி தெற்கு நோக்கி தனி சந்நிதியில் அருள்பாலித்து வருகிறார்.
அரியலூர், திருவையாறு, திருமானூர் ஆகிய ஊர்களில் இருந்து காமரசவல்லிக்கு எளிதில் செல்லலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.