"திருச்செந்தூரில் சூரவதனப் போர் நடக்கும்போதே சூரனின் இரண்டாவது மகன் இரண்யாசுரன் பித்ரு கடன் செய்ய வேண்டி தப்பித்து வந்து, தரங்கம்பாடி அருகே சுறாவின் வடிவெடுத்து மற்ற சுறாக்களுடன் கலந்தான். அவனை சுப்பிரமணியன் காமேஸ்வரியிடம் சக்தி பெற்று, தரங்கம்பாடியில் அழித்தான். இரண்யாசுரனைக் கொன்ற தோஷம் நீங்க, குரா மரத்தடியில் முருகன் அமர்ந்து தவம் செய்தான். சிவன் தோன்றி பாவ விமோசனமும் கொடுத்தார். குமரனை அந்தத் தலத்தில் தன்னுடன் இருக்க தன் முன்புறத்தில் இடம் தர முருகனும் வாயிலுக்கும் இறைவனுக்கும் இடையில் நின்று அருளினார்' என்கிறது தல வரலாறு.
திருவிடைக்கழி அருள்மிகு தெய்வானையுடன் உடனுறையும் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் கருவறை சிவலிங்கத்துக்கு முன்புறம் சுப்பிரமணியர் நின்ற கோலத்தில் அருள் செய்யும் தலம். "திரு' என்பது சிவலிங்கம். நுழைவுவாயிலுக்கும் சிவனுக்கும் இடையில் உள்ள பகுதி "கழி' என்று குறிக்கப்படுகிறது. அவ்விடத்தில் நின்று அருளும் முருகன் உள்ள பகுதி "இடைகழி' என குறிப்பிடப்படுகிறது. தமிழகராதியில் வெளியிடத்தை அடுத்த உள்ளிட்ட பாதை எனக் குறிப்பதும் முருகன் நின்றருளும் இடமே ஆகும்.
திருமுறைகளில் இடம்பெற்றுள்ள முருகன் திருத்தலங்களில் இதுவும் ஒன்று. வள்ளியை மணம் புரிந்த வள்ளிமலைக்குப் பிறகு, பாவ விமோசனத்துக்காக முருகன் தவம் இயற்றிய இடம் "திருவிடைக்கழி'.
இங்கு முருகனை வழிபட்டால் நவக்கிரகத் தோஷங்களும் விலகும் என்பதால், நவக்கிரகங்கள் கிடையாது. குரா மரத்தடியில் அமர்ந்த , நவக்கிரக}ராகு முருகனை வழிபட்டிருக்கிறார். இதனால் ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனை செய்தால் விரைவில் திருமணம் நடந்தேறும். பிரிந்த தம்பதியிடையே ஒற்றுமை பலப்படும்.
இத்தலத்தில் "சகலமும் சுப்ரமணியம்' என்ற வகையில் பிரதோஷ நாயகர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர் ஆகியோர், வலது திருக்கரத்தில் வஜ்ஜிரவேலுடன் சுப்ரமணியர் சொரூபமாகவே எழுந்தருளியுள்ளனர். தனி சந்நிதியில் ஈசனின் சிவசண்டிகேஸ்வரரும், முருகனின் குக சண்டிகேஸ்வரரும் மழுவுக்கு மாறாக, வஜ்ரத்தை ஏந்தியுள்ளனர். ஆருத்ரா அன்று இரண்யாசுர சம்காரமூர்த்தி நடராஜராக உலா வருவார். பிரதோஷத்தின்போது பிரதோஷ நாயகராக வஜ்ஜிரவேல் ஏந்தி, முருகன் மயில் வாகனத்தில் வலம் வரும் அற்புதம் நடக்கும் கோயிலாகும்.
கோயிலில் 16 விநாயகர் மூர்த்தங்கள் இடம்பெற்றுள்ளன. இங்குள்ள கொடி மரத்தின் கீழ் விநாயகருடன் வேலவனும் காட்சி தருகிறார். இத்தலத்தின் நான்கு எல்லைகளிலும் ஐயனார் கோயில்கள் இருப்பதும், முருகனுக்கு வாகனமாக யானை இருப்பதும் இங்கு சிறப்பு.
சேந்தனார் திருவிசைப்பாவில், இத்தல குமரனைக் குறிப்பதால் ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முந்திய கோயிலாகும். கிழக்கு நோக்கிய ஏழு நிலை ராஜகோபுரம், கொடிமரம், பலிபீடம் ஆகியன அடுத்து விநாயகரும் எழுந்தருளியுள்ளார்.
வலதுபுறம் தெய்வானை தனி சந்நிதியில் தவக்கோலத்தில் தரிசனம் அருள்கிறாள். அம்மன் காமேஸ்வரி தரங்கம்பாடிக்கு முருகனுக்கு அருளச் சென்றுள்ளதால் தனி சந்நிதி கிடையாது , பிரகாரத்தில் விநாயகர், தலவிருட்சம்"குராமரம் உள்ளது. முருகன் சிவனை சிந்தையில் வைத்து தவம் செய்த இம்மரத்தடியில் பலிபீடம், பத்ரலிங்கமாக அமைந்துள்ளது. மூலவர் திருக்காமேஸ்வரர் என்ற பெயரோடு சிவலிங்க வடிவில் தரிசனம் தருகிறார். கருவறையைச் சுற்றி முன்புறம் ஸ்படிக லிங்கமும், தெற்கில் தட்சிணாமூர்த்தியும், பின்புறம் பாபநாசப் பெருமானும், வடக்கில் வசிஷ்ட லிங்கமும் காட்சி தரும் அமைப்பை இத்தலத்தில் மட்டுமே தரிசிக்கலாம்.
சந்திரன், அருணகிரிநாதர், சேந்தனார், நவசக்திகள், விநாயகர், நாகநாதலிங்கம், கஜலட்சுமி, வில்லேந்திய முருகர் ஆகியோரும் உள்ளனர்.
காஞ்சி சிதம்பர சுவாமிகள்,மீனாட்சி சுந்தரம் பிள்ளை,வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்,சாதுராம் சுவாமிகள் போன்றோரும் குராவடிக் குமரனைப் பாடியுள்ளனர்.
சேந்தனார் இத்தலத்தில் திருக்குரா மரத்தின் அடியில் முக்தி பெற்ற தைப்பூச நாளில், பூஜைகள் நடைபெறுகின்றன. புரட்டாசி மாதத்தில் சிதம்பரத்தில் இருந்து திருவிடைக்கழி வரை பக்தர்களால் 50 கி.மீ. பாதயாத்திரை, நடைபெறுகிறது.
சிதம்பரத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், திருக்கடவூருக்கு தென்மேற்காக திருவிடைக்கழி அமைந்துள்ளது.
கோயிலில் திருப்பணிகள் நிறைவு பெற்று, செப். 15}இல் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.