
ஆதிசங்கரர் அருளிய ஆறு வகையான வழிபாட்டில் விநாயகர் வழிபாடும் ஒன்றாகும். இந்து சமயத்தில் எந்த ஒரு பூஜையைச் செய்தாலும் விநாயகரை வழிபட்டே தொடங்குகிறோம். எந்த ஒரு விஷலியத்தை எழுதினாலும் பிள்ளையார் சுழி போட்டே எழுதுகிறோம். அத்தகைய விநாயகருக்கு அந்தக் காலம் தொட்டு இந்நாள் வரை எல்லா இடங்களிலும் கோயில்கள் உள்ளன.
விநாயகரை வழிபாடு செய்வதில் பெரும் உறுதுணையாக இருப்பது ஒளவையார் அருளிய "விநாயகர் அகவல்' ஆகும். இது ஒரு தியான வழிபாட்டு தோத்திரப் பாடலாகும். மனிதன் உள்ளே இருக்கும் ஆற்றலை உணர்ந்து வாழ்வாங்கு வாழும் அற்புதக் கலையை அளிக்கும் பாடலாகும். வழிபாடு என்பது வெறும் புறச்சடங்கல்ல. மனிதனின் மனத்தைச் செம்மைப்படுத்தும் அருமையான வழிமுறை என்பதை உணர்த்துகின்ற உன்னத நிலையாகும். இதனைக் கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டுள்ள ஓர் கோயிலே "ஓம் ஸ்ரீ மஹா கணபதி கோயில்' ஆகும்.
சிவகங்கை மாவட்டத்துக்கு உள்பட்ட தேவகோட்டை சருகணி சாலையில் அமைந்துள்ள திருமணவயல் உடையார் குடியிருப்பில் உள்ள கோயில் இதுவாகும். இந்தக் கோயிலை கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் உள்ள தியான மண்டபத்தை வடிவமைத்த ஸ்தபதி எஸ்.கே. ஆச்சாரி வடிவமைத்தார்.
கோயில் இரண்டு அடுக்காக உள்ளது. கீழ்பகுதியில் தியான மண்டபம், தியான மண்டபத்தின் மையப் பகுதியில் சாஸ்திர முறைப்படி ஒரு மைய மண்டபமும் உள்ளது. அதன் நடுவே கீழே ஆமை தாங்கிய வண்ணம் யானை, சிம்மம், பத்மம் ஆசிய அழகிய வேலைப்பாடுகளுடன் அடங்கிய தூண் உள்ளது. தூணின் நடுவே தாமிரத்திலான குழாய் ஒன்று பொருத்தப் பெற்று அது மேல் தளத்திலுள்ள கருவறையில் நிறைவு பெறுகிறது. அது நிறைவு பெறும் இடத்தில் விநாயகரை பிரதிஷ்டை செய்துள்ளனர்.
கீழ்ப்பகுதியில் தியானம் செய்பவர்களின் அதிர்வலைகள் மேல் பகுதி கருவறையில் அதிர்வலைகளைக் கூட்டவும், மேல்பகுதி கருவறையில் பூஜைகள், அபிஷேக, ஆராதனைகள், ஹோமங்கள் ஆகியவற்றின் மூலம் வெளிவரும் அருளலைகள் கீழ்ப்பகுதிக்குப் பரவும் வகையிலும் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பாகும். சத்தத்தின் உள்ள சதாசிவம் காட்டி சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி என்ற விநாயகர் அகவலின் பாடல் வரியை ஒவ்வொருவரும் உணரும் வகையில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் "ஐயா சைவர் சேவுகப்பெருமாள்' என்னும் அடியாரை ஒரு மௌனசாமி வந்து சந்தித்து, இருவரும் இங்கு அடியவரின் ஓலைக் குடிசையில் அமைந்திருத்த விநாயகர் முன்பு தியானம் பழகியதாக வரலாறு உள்ளது. அதனைத் தொடர்ந்து அவர்களது பரம்பரையினர் தற்போது உள்ள கோயில் திருப்பணியை 2012}இல் தொடங்கி, 2019}இல் பூர்த்தி செய்தனர். முழுதும் கல் திருப்பணியாகப் பலகோடிகளைச் செலவு செய்து கும்பாபிஷேகம் நடத்தி வழிபாடு செய்து வருகின்றனர்.
தினசரி காலை 7 மணிக்கு பூஜைகள் நடைபெறுகின்றன. தனிப்பட்ட முறையில் தீபமோ, அர்ச்சனையோ கிடையாது. வழிபாடு செய்ய வருபவர்கள் விநாயகரை வழிபட்டு தியானம் செய்ய வேண்டும் என்பதே குறிக்கோளாகும்.
மாதம்தோறும் சங்கடஹர சதுர்த்தி நாளில் திருவாசக முற்றோதுதலும், அமாவாசைதோறும் "அபிராமி அந்தாதி' முற்றோதுதலும், மார்கழி மாத சங்கடஹர சதுர்த்தி நாளில் திருவாசக சங்கமமும் நடைபெறுகின்றன.
சதுர்த்தி விழா இரண்டு நாள்களாக நடைபெறுகிறது. முதல் நாள் அபிஷேக, ஆராதனை சொற்பொழிவுகளும், மறுநாள் காலை தியான திருவிளக்கு பூஜையும் நடைபெறுகின்றன. அன்று மாலை பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிக்கான பரிசும், ஒவ்வொரு பள்ளியிலும், சிறந்த மாணவர் ஒருவருக்கு ரூபாய் பத்தாயிரம் வைப்பு நிதிச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி விழாவை சமுதாய முன்னேற்ற விழாவாகக் கொண்டாடும் இந்தக் கோயிலை "அருள்மிகு மஹாகணபதி ஆலய அறக்கட்டளையினர்' நிறுவி, சிறப்புறப் பராமரித்து வருகின்றனர். இங்கு பக்தர்களுக்கும் அதிரசம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
தொடர்புக்கு : 94484 70236.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.