சித்தர்களின் தாயகமாக, தோரணமலை முருகன் கோயில் விளங்குகிறது. தூரத்திலிருந்து பார்க்கும் போது ஒரு யானை கம்பீரமாக அமர்ந்து இருப்பதுபோல தோன்றும். யானைக்கு வாரணம் என்ற பெயரும் உண்டு. இதனால், வாரணம் மலையாக இருந்து மருவி, தோரணமலையாக இருக்கலாம் என்கின்றனர். இந்த மலைக்கு தென்புறம் ராமநதியும், வடக்கு பக்கம் ஜம்பு நதியும் தோரணம் போல சுற்றி ஓடுவதால் "தோரணமலை' என்றும் கூறுகின்றனர்.
தோரணமலை விலக்கு என்ற இடத்தில் மலைக்குச் செல்லும் பாதை பிரிகிறது, அங்கு பக்தர்களை வரவேற்கும் விதமாக, பெரிய தோரண வாயில் அமைக்கப்பட்டிருக்கிறது.அங்கிருந்து மேற்கு நோக்கி சென்றால் மலையடிவாரத்தை அடையலாம். மலையடிவாரத்தில் வல்லப விநாயகர் பாலமுருகன், குரு பகவான், நவக்கிரகங்கள், சப்த கன்னியர், கன்னி மாரியம்மன் சந்நிதிகள் உள்ளன. அவர்களைத் தரிசித்துவிட்டு படி ஏற வேண்டும். 1193 படிகள் ஏறிச் சென்றால் மலை உச்சியில் இருக்கும் முருகன் கோயிலை அடையலாம். மலையின் உச்சிப்பகுதியில் அமைந்துள்ள ஒரு குகைக் கோயிலில் முருகன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
முருகன் கோயிலுக்கு சற்று தள்ளி சிறிய பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. மயில்வாகனனைத் தரிசிக்க வரும் பக்தர்கள் இந்த அம்மனையும் தரிசித்துவிட்டு செல்கிறார்கள். மலைஅடிவாரத்திலிருந்து படியேறிச் சென்று குகைக் கோயிலை அடைய சுமார் ஒரு மணி நேரமாகும்.
வழியில் பக்தர்கள் இளைப்பாறிச் செல்ல வசதியாக ஆங்காங்கே அகத்தியர், தேரையர், அருணகிரிநாதர், பாலன் தேவராயர், அவ்வையார், நக்கீரர் ஆகியோரின் பெயர்களில் ஆறு மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன.இருட்டுவதற்குள் திரும்பி வருவது சிரமம் என்பதால் பிற்பகல் 3 மணிக்கு மேல் மலை ஏற அனுமதி கிடையாது.
குகை கோயிலில் தினமும் அதிகாலையில் 5.30 மணிக்கு பூஜை நடைபெறுகிறது.சிவன், பார்வதி திருமணம் கைலாய மலையில் நடைபெற்றபோது, வடபகுதி தாழ்ந்து தென்பகுதி உயர்ந்தது. இதை சரி செய்ய சிவபெருமானால் அனுப்பப்பட்ட அகத்தியர் பொதிகை மலை வந்து உலகை சமப்படுத்தினார். அவர் வந்த வழியில் அவரை கவர்ந்த இந்தப் பொதிகை மலை தோரண மலையில் அகத்தியர் தங்கிவிட்டார்.இங்கு ஆயிரக்கணக்கான மூலிகைகளைக் கண்ட அகத்தியர் முருகனின் வழிகாட்டலின்படி மருத்துவச் சாலையை உருவாக்கி பல சீடர்களை உருவாக்கினார்.
அகத்தியரோடு அவரது சீடரான தேரையரும் இங்கு தங்கியிருந்து மருத்துவ ஆய்வுகள் பல செய்து புதிய மருந்துகளைக் கண்டறிந்தார். தேரையர் இங்கேயே ஜீவ சமாதி அடைந்தார் என்றும் கூறப்படுகிறது. இந்த மலை காலப்போக்கில் யாராலும் அறியப்படாமலும், வழிபாடும் இன்றி இருந்துள்ளது. 1930}இல் முத்துமாலைபுரத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரது கனவில் முருகன் தோன்றி தான் தோரணமலையின் உச்சியில் உள்ள சுனையில் கிடப்பதாகவும் தன்னை எடுத்து வழிபடுமாறும் கூறினாராம். மறுநாள் பெருமாள் தன்னுடைய வேலையாள்களுடன் அங்கு வந்து சுனைத் தண்ணீரை இறைத்தபோது அங்கே முருகன் சிலை கிடந்ததாம். அதை மீட்டு இந்தக் குகைக்குள் வைத்து வழிபட்டார். அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வழிவழியாகக் கோயிலை நிர்வகித்துவருகிறார். தற்போது நிர்வகித்து வருவது செண்பகராமன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத கடைசி வெள்ளியன்றும் விவசாயம் செழிக்க வருண கலச பூஜை நடைபெற்று வருகிறது. இதே போல ஒவ்வொரு பெüர்ணமி நாளிலும் கிரிவலம் நடைபெறுகிறது.
தோரணமலை அடிவாரத்தில் அமைந்துள்ள விநாயகர் சந்நிதி நடை அதிகாலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். மதியம் 12 மணி முதல் 3 மணி வரை சாத்தப்படும். மலை ஏறும் பக்தர்களுக்கு அதிகாலை 5 மணி முதல் மாலை 3 மணி வரை அனுமதியளிக்கப்படுகிறது.தென்காசியில் இருந்து கடையம் அம்பாசமுத்திரம், பாபநாசம், நாகர்கோவில், மணிமுத்தாறு ஆகிய ஊர்களுக்கு இந்த விலக்கு வழியாக பேருந்துகள் செல்லும்.
தொடர்புக்கு-99657 62002.
பா.பிரகாஷ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.