திருமால் - திருமகளின் பரிபூரண அருள் கிடைக்கும் தலமாக அரசர் கோயில் விளங்குகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் படாளம் அருகே பாலாற்றின் கரையில் அமைந்துள்ள இந்தத் தலத்தில், பெருமாள் கமலவரதராஜர் என்றும் தாயார் சுந்தர மகாலட்சுமி என்றும் திருநாமம் கொண்டுள்ளார்கள்.
பிரம்மா இத்தலத்தில் தவமிருந்தபோது, மகாவிஷ்ணு தனது இரு தேவியருடன் வரதராஜப் பெருமாளாக காட்சி தந்தருளினார் என்கிறது தல வரலாறு.
கிழக்கு நோக்கிய கருவறையில் பெருமாள் தனது தேவியர்களுடன் காட்சி தருகிறார். பெருமாள் தனது மேலிரு கரங்களில் சங்கு}சக்கரம் தாங்கியும், வலது முன் கரம் அபய ஹஸ்தமாகவும் - அதில் தாமரை மலரைப் பிடித்து கொண்டிருக்கும் கோலம் அற்புதமாக விளங்குகிறது. இதனால் "கமலவரதராஜர்' என அழைக்கப்படுகிறார்.
கருவறை முன் மண்டபத்தில் தேசிகன், ராமானுஜர், நம்மாழ்வார், பெரியாழ்வார் ஆகியோரையும் தரிசிக்கலாம். கருவறைக்கு எதிரில் அமைந்துள்ள கருடன் சந்நிதியில் விமானம் ஐந்து கலசங்களுடன் காட்சி தருகிறது.
இந்த ஊர் "திருவரசூர்' என்றும் "எம்பெருமான் கோயில்' என்றும் அறியமுடிகிறது. தற்போது "அரசர் கோயில்' என்று அழைக்கப்
படுகிறது. சுந்தரபாண்டியன், மூன்றாம் ராஜராஜ சோழன், சம்புவராயர், கிருஷ்ணதேவராயர் போன்ற மன்னர்கள் கோயிலைப் போற்றி வழிபாட்டுக்காகத் தானம் அளித்துள்ளனர்.
அதியமான் தேவன், சொக்கதேவன் போன்றோர் 13}ஆம் நூற்றாண்டில் நிலம் தானமளித்துள்ளனர். ராஜநாராயண சம்புவராயர் வரிகளை நீக்கி நிலம் தானம் அளித்துள்ளார். 16}ஆம் நூற்றாண்டில் கிருஷ்ணதேவராயர் கோயிலில் தாயார் சந்நிதியை எழுப்பியுள்ளார்.
கோயில் திருச்சுற்றில் (மேற்கு நோக்கி) பெருமாளை நோக்கியவாறு தனி சந்நிதியில் எழுந்தருளி அருள்புரியும் அருள்கோலமாகும். இச்சந்நிதி கலையழகு மிக்க சிற்பங்களுடன் - தூண்களுடன் விஜயநகர கால கட்டடக்கலை சிறப்பாக விளங்குகிறது.
ஆவுடையார் போன்று சிவலிங்க பீடத்தில் எழுந்தருளி, பத்மாசனத்தில் வீற்றிருக்கும் அற்புத கோலம். மேலிரு கரங்களில் தாமரை மலர்கள், முன்னிரு கரங்கள் அபய } வரத கோலம். தாயார் பாதங்களில் ஆறு விரல்கள் காணப்படுவது சிறப்பு. சுக்கிரன் அம்சத்தோடு தாயார் அருள்புரிந்து செல்வச் செழிப்பை வழங்குவது குறிப்பிடத்தக்கது. சந்நிதி வாயிலில் அட்சயப் பாத்திர விநாயகர் காட்சி தந்தருளுகிறார்.
-கி. ஸ்ரீதரன்
தொல்லியல் துறை (பணி நிறைவு)