அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் என்ற சுந்தரர், "சைவ சமயக் குரவர்கள்' என்ற நான்கு முக்கிய சிவனடியார்களில் ஒருவர்.
திருமுனைப்பாடியில் திருநாவலூர் எனும் ஊரில் எட்டாம் நூற்றாண்டில், ஆதி சைவர் குலத்தில் பிறந்த இவரது இயற்பெயர் நம்பியாரூரன். சுந்தரமான அழகுடன் இருந்ததால், "சுந்தரர்' என்று அழைக்கப்பட்டார்.
இவர் சிறுவயதில் சிறுதேர் உருட்டி விளையாடிக் கொண்டிருந்தபோது, அவரை அரசர் நரசிங்கமுனையரையர் கண்டார். சுந்தரரைத் தனது மகனாக்க விரும்பி, அரண்மனைக்கு அழைத்துச் சென்று, அனைத்துக் கலைகளையும் கற்றுத் தந்தார். மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
மணநாளன்று முதியவர் வடிவில் வந்த சிவனும் சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஓலையைக் காட்டி, ""சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் எனக்கு அடிமை. எனது வழக்கைத் தீர்த்து வைத்த பின்னரே திருமணம் செய்யவேண்டும்'' என்றார். திருமணம் தடைப்பட்டது.
கோபமடைந்தார் சுந்தரர், ""நீர் பித்தன்'' என்று முதியவரை திட்டி, அவரது கையில் இருந்த ஓலையைப் பிடுங்கி கிழித்து எறிந்தார். ஆனால் முதியவர் சிரித்தபடியே, ""திருவெண்ணெய் நல்லூருக்கு வாரும். நீர் எனக்கு அடிமை என்பதை அங்கு காட்டுவேன்'' என்றார். அவரை அங்கிருந்தோர் பின்தொடர்ந்தனர். சுந்தரரை அழைத்துக்கொண்டு திருவெண்ணெய்நல்லூர் கோயிலினுள் நுழைந்த முதியவர் திடீரென மறைந்தார். இறைவனே வந்ததை உணர்ந்தார் சுந்தரர், ""பித்தா பிறை சூடி...'' என்ற தனது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடினார்.
பல சிவத்தலங்கள் சென்று, 38 ஆயிரம் தேவாரப் பதிகங்களைப் பாடினார் சுந்தரர். அவற்றுள் 101 பதிகங்கள் கிடைத்துள்ளன.
திருவாரூரில் பரவையார் என்ற பெண் ஒருவரை சுந்தரர் கண்டு, காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டார். சில காலத்துக்குப் பின்பு திருவொற்றியூருக்கு வந்தவர், அங்கு, "சங்கிலியார்' எனும் பெண் மீது காதல்
கொண்டு மணந்ததாகவும் வரலாறு.
"செங்கற்களைப் பொன்னாகப் பெற்றது, சிவன் கொடுத்தருளிய பன்னீராயிரம் பொன்னை விருத்தா
சலத்தில் உள்ள ஆற்றிலே போட்டு திருவாரூர் குளத்தில் எடுத்தது, காவிரியாறு பிரிந்து வழிவிட செய்தது, அவிநாசியில் முதலை விழுங்கிய குழந்தையை அதன் வாயி
லிருந்து மூன்றாண்டு வளர்ச்சியுடன் அழைத்துக் கொடுத்தது, வெள்ளை யானையில் ஏறி திருக்கயிலாயத்துக்கு எழுந்தருளியது...' போன்றவை சுந்தரர் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்கள்.
இவரது குரு பூஜை ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் (ஆகஸ்ட் 1- வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
சென்னை திருவொற்றியூரில் சக்கரபாடித் தெருவில் வணிகராக, செக்குத் தொழில் செய்து வாழ்ந்த கலிய
நாயனார், திருவொற்றியூர் கோயிலில் அன்றாடம்
ஆயிரக்கணக்கில் சிவத் தொண்டை செய்து வந்தார்.
இவரின் செல்வத்தைக் கரைத்து இறைவன், தனது திருவிளையாடலை மேற்கொண்டார். தினமும் கூலி வேலைக்குச் சென்று, வரும் வருவாயைக் கொண்டு விளக்கேற்றினார். தனது வீட்டில் இருந்த பொருள்களை விற்று, கிடைத்த வருவாயில் விளக்கேற்றினார். இறுதியில் தனது வீடு, சொத்துகளை விற்றும் விளக்கேற்றி வந்தார்.
தற்போது விற்பதற்கு எதுவும் இல்லை. தவித்த அவர் தனது மனைவியை அழைத்துக்கொண்டு தான் விளக்கேற்றும் படம்பக்கநாதர் கோயிலுக்குச் சென்றார். அங்கு சிவனை வழிபட்டு, ""இறைவா.. நான் உனக்காகச் செய்யும் இந்த விளக்கேற்றும் திருப்பணி நின்று
விடாமல் என் உயிரையே மாய்த்துக்கொள்ளவும் தயாராக இருக்கிறேன். விளக்கில் எண்ணெய் குறைந்து விளக்குகள் எரியாமல் இருக்குமானால், நான் என் ரத்தத்தைக் கொண்டு விளக்கேற்றவும் தயங்க மாட்டேன்'' என்றார்.
பின்னர், அரிவாளைக் கொண்டு தனது கழுத்தை அறுத்து ரத்தத்தை விளக்கில் கொட்ட முயற்சித்தார். அப்போது எழுந்தருளிய சிவன், கலிய நாயனாரின் கைகளைப் பிடித்து நிறுத்தினார். கோயிலில் இருந்த விளக்குகளில் எண்ணெய் நிரம்பி, விளக்குகள் பிரகாசமாக எரிந்தன. பின்னர், கலிய நாயனாருக்கு பேரின்ப பெருவாழ்வை அளித்த சிவன், இறுதியில் தனது திருவடியில் சேர்த்து அருளை வழங்கினார். ஆடி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் இவரது குரு பூஜை (ஆகஸ்ட் 4 }திங்கள்கிழமை ) கொண்டாடப்படுகிறது.
நாட்டியத்தான்குடி என்ற ஊரில் பிறந்த கோட்புலி நாயனார், சோழப் படையின் தளபதியாவார். அவர்
தனது செல்வம், மூன்று நகரங்களையும் சிவன் கோயில்
களில் உணவு தயாரிப்பதற்காக வழங்கினார்.
ஒருமுறை, கோட்புலியரை போருக்குச் செல்லும்படி மன்னர் கேட்டுக் கொண்டார். அவர் திரும்பி வரும் வரை சேவை செய்யக் கூடிய அரிசி தானியங்களைக் குவியலாகச் சேகரித்தார். புறப்படுவதற்கு முன், அவர் தனது உறவினர்களை அழைத்து, ""அரிசி இறைவனின் சேவைக்காக மட்டும்தான்'' என்றார். ஊரில் வறட்சி ஏற்பட்டது. உணவு கிடைக்காததால், உறவினர்கள் பட்டினி கிடப்பதற்குப் பதிலாக, இறைவனுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த தானியங்களைப் பயன்படுத்தினர். நாயனார் திரும்பியபோது, அவர் கோபமடைந்தார். தனது உறவினர்களை அரண்மனைக்கு விருந்துக்கு அழைத்து, ஆயுதங்களால் கொன்றார்.
மூன்று கண்களைக் கொண்ட சிவன் பார்வதியுடன் புனித காளையின் மீது தோன்றி, கோட்புலி நாயன்மாருக்கு காட்சி அளித்தனர். அவரது உறவினர்கள் அனைவருக்கும் சொர்க்கத்தில் இடம் வழங்கப்பட்டதாக இறைவன் அவருக்குத் தெரிவித்து, அழைத்துச் சென்றார் சிவன். ஆடி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் இவரது குருபூஜை (ஆகஸ்ட் 4 }திங்கள்கிழமை) கொண்டாடப்படுகிறது.
-மு. கீதா குமரவேலன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.