குழந்தைப்பேறு அருளும்...

"சோமுகன் என்ற அசுரன் கடும் தவம் மேற்கொண்டு வரங்களையும், அழியாத ஆயுளையும் பெற்றான்.
குழந்தைப்பேறு அருளும்...
Published on
Updated on
2 min read

"சோமுகன் என்ற அசுரன் கடும் தவம் மேற்கொண்டு வரங்களையும், அழியாத ஆயுளையும் பெற்றான். இதனால் பூமியையும், தேவலோகத்தையும் தன்னுடைய ஆட்சியின் கீழ் கொண்டுவர ஆசைப்பட்டான். படைக்கும் தெய்வமான பிரம்மனை சிறைபிடித்து, வேதங்களைப் பறித்தான். தேவர்கள் நாராயணனிடம் சரணடைந்தனர். போர் மூண்டது.

அசுரன் பின்வாங்கி, கடலுக்குள் புகுந்தான். மச்ச அவதாரம் எடுத்த நாராயணன், அசுரனை வதம் செய்தார். பூமிக்கு மேலே வெளிப்பட்ட நாராயணனும் பிரம்மனிடம் வேதங்களை ஒப்படைத்து, உபதேசமும் அருளினார். அந்த இடத்தில் அழகிய சோலையும், வற்றாத நதியும் அருகே ஓடியதைக் கண்டு அங்கேயே தங்க நாராயணன் விருப்பம் கொண்டார். ஆனால், திருப்பாற்கடலுக்குத் திரும்ப வேண்டும் என தேவர்கள் வேண்டினர். உடனே தேவதச்சன் விஸ்வகர்மாவை நாராயணன் அழைத்து, தன்னைப் போன்ற உருவத்தை பள்ளிகொண்ட கோலத்தில் உருவாக்கிட பணித்தார். அதன்பின் தேவர்களும் முனிவர்களும் ஒன்று சேர்ந்து பிரம்மோற்சவத்தை நடத்தினர்' என்கிறது புராணம்.

"பத்தினியின் சாபம் பெற்ற சந்திரன் இந்த ஆதிதிருவரங்கத் தலத்தில் வாழும் ரங்கநாதரை நாள்தோறும் புஷ்கரணியில் நீராடி வணங்கி, தன் நிலையில் இருந்து மீண்டார்', "கிருதாயுகத்தில் வாழ்ந்த சுருதகீர்த்தி என்ற மன்னனுக்கு மகப்பேறு கிடைக்க, அதற்கு நன்றிக்கடனாக உற்சவங்களை நடத்தினார்' என்றெல்லாம் தல புராணம் கூறுகிறது.

இந்தத் தலம் பற்றி ஸ்கந்த புராணம், உத்திரகாண்டம் உள்ளிட்டவற்றில் கூறப்பட்டுள்ளன. ராஜகோபுரம் இன்றி, எளிய நுழைவாயில், அதன் மீது அழகிய சுதைச் சிற்பங்கள், மூன்று ஏக்கரில் உயர்ந்த மதில் சுவர்களைக் கொண்டு, மூன்று பிரகாரங்களோடு கோயில் அமைந்துள்ளது.

உள்ளே சென்றதும், மூன்றாவது பிரகாரத்தின் ஈசான்ய பகுதியில் மிகப் பெரிய நெற்களஞ்சியம் நான்கு தளங்களைக் கொண்டு அமைந்துள்ளது. அதற்கு நேரில் வடமேற்கு மூலையில் ஸ்ரீ கோதண்டராமர் சந்நிதி அமைந்துள்ளது. சீதையோடும், லட்சுமணரோடும், கோதண்டராமர் எளிமையாகக் காட்சியளிக்க, எதிரே அனுமன் பவ்ய கோலத்தில் வணங்கி நிற்பது அழகான காட்சியாகும்.

இரண்டாவது நுழைவு வாயிலின் தென்கிழக்கே, ஸ்ரீ வரதராஜப் பெருமாள் சந்நிதியும், மடப்பள்ளியும், அருகே வற்றாத கிணறும் உள்ளன. இதன் எதிரே தல மரமான மகிழ மரம் செழிப்போடு காட்சி தருகிறது. மூன்றாவது பிரகாரத்தில், மண்டபத்தில் தென்கிழக்கே துர்க்கை, வடக்கே சக்கரத்தாழ்வார் அமைந்துள்ளனர். ஸ்ரீ ரங்கநாத சுவாமி வெளிப்பிரகாரத்தில், தும்பிக்கையாழ்வார், ப்ரத்யும்னன், பரவாசுதேவன், பரமபதவாசன், துர்க்கை காட்சி தருகின்றனர். துவாரபாலகர்களாக மணியன், மணிகர்ணன் காவல் நிற்கின்றனர். கருவறைக்குள் நீர்த்தேங்கும் அமைப்பு உள்ளது. பாம்பணையில் ஸ்ரீரங்கநாதர் பள்ளிகொண்ட திருக்கோலம் மிக பிரம்மாண்டமாய் காட்சி அளிக்கிறது. இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதரைவிட பெரிய வடிவிலானவர். அவருக்கு முந்தையவர் என்பதால் "ஆதி திருவரங்கம்' எனப் பெயர் பெற்றது.

தெற்கே தலை வைத்து, கிழக்கு முகமாய் புன்னகை பூத்து, வலது கையைத் தலையணையாய் வைத்து, இடது கையால் தன் நாபிக் கமலத்தில் தோன்றிய பிரம்மனுக்கு வேதங்களையும், சாஸ்திரங்களையும் உபதேசம் செய்யும் கோலம் அமைந்துள்ளது. ஸ்ரீதேவி மடிமீது சயனித்திருக்க, வடக்கே நீட்டியுள்ள ஒரு திருவடியை பூதேவி தன் மடிமீது வைத்துள்ளாள். மற்றொரு திருவடி ஆதிசேஷனின் வால் நுனி வளைவு சயனத்தில் வைத்தபடி காட்சி அளிக்கிறார். வலது கையைத் தாங்கி மண்டியிட்ட பெரிய திருவடியான கருடாழ்வார் தன் பணிக்காகக் காத்திருக்கிறார்.

கருவறைக் கல்லில் ஒளி மங்கிய வண்ண ஓவியங்கள் எம்பெருமானின் அவதாரங்களை விளக்கும் வண்ணம் அமைந்துள்ளன. ரங்கநாதருக்கு தைலக் காப்பு மட்டும்தான். உற்சவருக்கு நாள்தோறும் அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. ஜெயஸ்ரீ, விஜயஸ்ரீ துவார பாலகிகள் காவல் நிற்க, கருணை வடிவிலான ஸ்ரீரங்கநாயகி அமர்ந்த கோலத்தில் அபய, வரத முத்திரையோடு காட்சி அளிக்கிறார். ஸ்ரீ ஆண்டாள் சந்நிதி இரண்டாவது வெளிப்பிரகாரத்தின் தென்மேற்கே அமைந்துள்ளது .

வேண்டிய வரங்களை அருளும், குழந்தைப் பேறு அளிக்கும் தலம் இது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உள்பட்ட சங்கராபுரம் வட்டத்தில் ஆதிதிருவரங்கம் அமைந்துள்ளது.

}பனையபுரம் அதியமான்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com