தமிழ் சித்த மருத்துவ மரபில் முக்கியமானவர்களாகக் கருதப்படுபவர்கள் பதினெண் சித்தர்கள். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் இடைக்காடர். அவர் வழிபட்ட சிவாலயம், கடப்பாக்கம் அருணாசலேஸ்வரர் கோயில்.
இது கிழக்கே பக்கிங்காம் கால்வாய், மேற்கே உப்பங்கழி என இரு நீர்வழிப் பாதைகளுக்கு இடைப்பட்ட பகுதி என்பதால் "இடைக்கழி நாடு' என்றும், இடைக்காட்டு சித்தர் வழிபட்டதால் "இடைக்காடு' என்றும் அழைக்கப்படுவதாக கூறப்படுகின்றது. இடைக்காட்டு சித்தர் இன்றும் அருகில் உள்ள வங்கக் கடலில் காணப்படும் "இடையன் திட்டு' என்ற இடத்தில் வாழ்ந்து வருவதாகவும், பெüர்ணமி தோறும் இந்தச் சிவாலயத்திற்கு வந்து பூஜை செய்வதாகவும் நம்பப்படுகின்றது. ஆலயத்தின் எதிரில் திருக்குளம் உள்ளது.
கிழக்கு நோக்கி கடற்கரை அருகில் ஆலயம் அமைந்துள்ளது. ராஜகோபுரம் இல்லை. உள்ளே நுழைந்ததும் பலிபீடம், நந்தி தேவர் மண்டபம் அமைந்துள்ளது. நந்தியம் பெருமான், மூலவரை தரிசித்தவண்ணம் கம்பீரமாகக் காட்சி தருகிறார். இறைவன் அருணாசலேஸ்வரர் தரிசனம் மனதுக்கு நிறைவு தருகிறது. சிவராத்திரிக்கு மறுநாள் காலை சூரிய ஒளியும், மாசி, பங்குனி மாதங்களில் பெüர்ணமியன்று நிலவொளியும் இறைவன் மீது படர்வது சிறப்பு.
கருவறைச் சுற்றில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா மற்றும் சண்டிகேஸ்வரர் சந்நிதிகள் அமைந்துள்ளன. இவை தவிர உரலில் கட்டிய கண்ணன், பாம்பணையில் உறங்கும் அரங்கநாதர், திருவாலங்காட்டுக் காளி, நடராஜரின் ஊர்த்துவ நடனம் என அற்புதமான புடைப்புச் சிற்பங்களும் ஆங்காங்கே காணப்படுகின்றன.
சிவாலயத்தின் தென்மேற்கே விநாயகர் சந்நிதியும், அதன் இடப்புறம் வள்ளி, தெய்வானை உடனுறை முருகன் சந்நிதியும், அதனருகே உண்ணாமுலை அம்மன் எனப்படும் அபித குஜாம்பாள் சந்நிதியும் அமைந்துள்ளன. இறைவனைப் போலவே இறைவியின் உருவமும் அழகுறக் காட்சி தருகின்றது. அம்மன் சந்நிதிக்கும் முருகன் சந்நிதிக்கும் இடையே விஜய
ராகவப் பெருமாள் சந்நிதியும், அம்மன் சந்நிதியின் எதிரில் வட்ட வடிவில் நவகிரக சந்நிதியும் அமைந்துள்ளன.
ஆலயத்தின் தலவிருட்சமாக அரசும், வேம்பும் விளங்குகின்றன. இந்த இரண்டு மரங்களும் பின்னிப் பிணைந்து ஓங்கி வளர்ந்துள்ளன. பெüர்ணமி, பிரதோஷம், மாசி தீர்த்தவாரி என சிவாலயத்திற்குரிய பல்வேறு விழாக்கள் இங்கு சிறப்புடன் கொண்டாடப்படுகின்றன.
கடப்பாக்கம் கடற்கரையோரம் அமைந்துள்ள ஊர் ஆலம்பரைக் குப்பம் ஆகும். இங்கே தமிழகத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 18}ஆம் நூற்றாண்டைச் சார்ந்த "ஆலம்பரைக் கோட்டை' அமைந்துள்ளது. இது ஓர் அழகிய சுற்றுலாத்தலமாகும். கி.பி.1753}இல் நவாப் தோஸ்த் அலிகான் என்பவர் இக்கோட்டையிலிருந்து ஆட்சிபுரிந்துள்ளார். இதன் நாணயச் சாலையின் பொறுப்பாளராகப் பணியாற்றிய "பொட்டிப்பத்தன்' என்பவர் கிழக்குக் கடற்கரை வழியாக காசி, ராமேசுவரத்துக்கு தீர்த்தயாத்திரை செல்லும் பக்தர்களுக்காக ஒரு சிவன் கோயிலையும், குளத்தையும், தங்குவதற்கு சத்திரத்தையும் ஏற்படுத்தினார். அதுவே காசி விசுவநாதர் ஆலயம் எனப்படுகிறது.
ஆலம்பரைக்கோட்டைக்கு மேற்கே 2 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. இந்தக்கோயிலில் உள்ள கல்வெட்டில் இவ்விவரம் காணப்படுகின்றது. இக்கோயிலைவிட பழைமை வாய்ந்தது, அருணாசலேஸ்வரர் ஆலயமாகும். இவ்விரண்டு ஆலயங்களுமே காசிப்பாட்டை என்ற சாலையில் அமைந்துள்ளன.
இடைக்காட்டு சித்தர் வணங்கும் கடப்பாக்கத்து அருணாசலேஸ்வரரை அனைவரும் வந்து தரிசித்து வியாபார வெற்றியும், குடும்ப விருத்தியும், அனைத்துக் காரியங்களிலும் சாதகமான போக்கையும், நோயற்ற வாழ்வையும், குறைவற்ற செல்வத்தையும் பெறலாமே!
சென்னை } புதுச்சேரி கிழக்குக் கடற்கரை சாலையில் கடப்பாக்கம் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து தெற்கே 105 கி.மீ., புதுவையிலிருந்து வடக்கே 45 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது.
இவ்வாலயம் காலை 6 மணி முதல் 9.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.