தமிழகத்தின் தனிச்சிறப்பு கிராமங்களைப் பாதுகாக்கும் சிறு தெய்வங்கள். அந்த வகையில் அன்றைய கிராமமாகத் திகழ்ந்த சென்னையை அடுத்த பாலவாக்கத்தின் கிராம தேவதைகளில் ஒன்றாக விளங்குபவள் வேம்புலி அம்மன்.
இன்றைக்கு நான்கு வழிச்சாலையாக மாறியுள்ள கிழக்குக் கடற்கரைச் சாலை, பழங்காலத்தில் வண்டிப் பாதையாக இருந்தது. சென்னையில் இருந்து மகாபலிபுரம் செல்லும் மக்களுக்கு இதுவே முக்கியப் பாதை. இதில் எண்ணற்ற வாகனங்கள் சென்று வந்தன. இதனால் இச்சாலையைக் கடப்பவர்கள் பலரும் விபத்துக்குள்ளானார்கள்.
இதைத் தடுப்பதற்கான வழி தெரியாமல் மக்கள் தவித்து வந்த நிலையில், ஒருநாள் இப்பகுதியில் மக்கள் கூடியிருந்தபோது, "நான் தான் வேம்புலி அம்மன். முச்சந்தியில் உள்ள வேப்பமரத்து அடியில் நான் சுயம்புவாக உள்ளேன். என்னை நீங்கள் முறைப்படி வழிபட்டு வந்தால், இப்பகுதியில் உள்ள மக்களையும், இங்கே சாலையைக் கடப்போரையும் எவ்வித ஆபத்துமின்றி காத்தருள்வேன்' என அசரீரியாக ஒரு குரல் ஒலித்தது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள், அந்த இடத்திற்குச் சென்று பார்த்தபோது சிறிய சுயம்புக் கல் ஒன்று தென்பட்டது. அதற்கு பூஜைகள் செய்து வழிபட்டனர் . அதன்பின் அதற்கு வடிவம் கொடுக்கும் நோக்கில் அன்னையை கருங்கல் சிலையாக வடித்தனர். வேப்ப மரத்தடியில் தோன்றியவள் என்பதால் வேம்புலி
அம்மன் எனப் பெயரிட்டு மக்கள் வழிபடத் தொடங்கினர். அன்றிலிருந்து அப்பகுதி செழிப்புற்று விளங்கியது. அது மட்டுமன்றி அங்கே பாதையைக் கடப்பவர்களுக்கு எவ்வித ஆபத்தும் நேராமல் வேம்புலி அம்மன் காத்து வருகிறாள்.
அன்னை கிழக்கு முகமாக அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகிறாள். வேம்புலி அம்மனின் மூர்த்தி சிறிதானாலும், கீர்த்தி பெரிது.
வலது மேல் கரம் சக்கரமும், இடது மேல் கரம் சங்கும் ஏந்தியிருக்க, கீழ்க்கரங்கள் அபய வரத முத்திரைகளுடன் காட்சி தருகின்றன. அனைத்துப் பலன்களையும் அருளும் பெரும் வரப்பிரசாதி. கருவறை முகப்பில் வலதுபுறம் கற்பக விநாயகர், இடது புறம் பாலமுருகர், தெற்கே தட்சிணாமூர்த்தி, மேற்கே மகாவிஷ்ணு, வடக்கில் துர்கை மற்றும் ஆஞ்சனேயர் ஆகியோருக்கு சிறு சிறு சந்நிதிகள் அமைந்துள்ளன.
தன்னை வழிபடுவோருக்கு வேண்டிய வரங்களைத் தரும் தெய்வமான அன்னையின் புகழ் பல்வேறு பகுதிகளுக்கும் பரவத் தொடங்க, சென்னை மட்டுமல்லாது, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்வது அன்னையின் அருளுக்குச் சாட்சியாக விளங்குகிறது.
ஆலய விரிவாக்கத்தின்போது வேப்ப மரத்தை அகற்றினர். மரத்தின் பாகங்களைக் கொண்டு தலைவாசல் அமைக்கப்பட்டது. இதன் பிறகு ஆலயப் புனரமைப்பின் போது இந்த வேப்பமர வாசலையும் எடுத்துவிட்டு, கருங்கல்லினால் தற்போது நிலைவாசல் அமைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அந்த வேப்ப மரத்தின் ஒரு பகுதியை அதன் புனிதத்தைப் போற்றும் வகையில் இன்றும் கருவறைக்குள் வைத்துப் பாதுகாத்து வருகின்றனர்.
பாலவாக்கம், அண்ணா சாலையில் மூத்தவளான பாலவாக்கத்து அம்மன், அவளின் தங்கைகளான வேம்புலி அம்மன் மற்றும் செங்கேணி அம்மன் ஆகிய மூன்று அம்மன்கள் கிராம தேவதைகளாகக் கோயில் கொண்டு அருளாசி புரிந்துவருகின்றனர்.
சிறப்பு மிகு வேம்புலி அம்மன் ஆலயத்தின் திருப்பணி முடிந்து திருக்குட நன்னீராட்டுப்பெருவிழா வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி அளவில் குகயோகி ஸ்ரீலஸ்ரீ மதுரை முத்துசுவாமிகள் தலைமையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை பாலவாக்கம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் அண்ணா சாலையும், வேம்புலி அம்மன் கோயில் தெருவும் சந்திக்கும் இடத்தில், கிழக்கு முகமாக வங்கக் கடலை நோக்கியபடி வேம்புலி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.