
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்கத் தலங்களுள் ஒன்று, குன்றாண்டார் கோயில். பல்லவர் காலத்தில் திருக்குன்றாக்குடி என்று அழைக்கப்பட்ட இவ்வூர் சோழர், பாண்டிய, விஜயநகர மன்னர் காலங்களில் பெயர் மருவி வந்திருப்பதை இங்குள்ள கல்வெட்டுகளில் காணமுடிகிறது.
இறைவன் பர்வதகிரீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். அம்பாள் உமையாம்பிகை எனப் போற்றப்படுகிறாள். வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. சந்தனக்காப்புத் திருவிழாவைப் போன்று மஞ்சள் காப்புத் திருவிழா இங்கு நடத்தப்படுகிறது. விழாவின்போது பல்வேறு பிரார்த்தனையாக பெண்கள் மஞ்சளைக் கொண்டு வந்து ஆலயத்தின் வாயில் பகுதியில் அமைந்துள்ள கல்தொட்டியில் கொட்டி, அம்மனுக்குப் படைக்கின்றனர். திருமணமாகாத பெண்கள் திருமணம் நடக்க வேண்டியும், திருமணமான பெண்கள் குழந்தை வரம் வேண்டியும் மஞ்சளை காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.
குகைக் கோயில் கருவறையின் வெளிப்புறம் உள்ள சிறிய மண்டபத்தின் தெற்குச் சுவரில் வலம்புரி விநாயகரின் சிற்பம் குடையப்பட்டுள்ளது. வடக்குப் பகுதியில் சிவன், பார்வதியின் புடைப்புச் சிற்பம் உள்ளது. நூற்றுக்கால் மண்டபத்தில் தேர் போன்ற அமைப்பில் சக்கரங்களுடன் கூடிய ஒரு ரதத்தை இரண்டு குதிரைகள் இழுத்துச் செல்வது போன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கோயிலில் பல கல்வெட்டுகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு செய்தியைச் சொல்கின்றன.
குன்றாண்டார் கோயிலில் ஒரு தூண் கல்வெட்டு கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அக்கல்வெட்டு கோதை மைந்தன் என்பவன் திருவாதிரைக்கு 120 கலம் அரிசி கொடுத்ததைத் தெரிவிக்கிறது. இதே குடவரைக் கோயிலின் மண்டப தெற்குப் பாதையிலுள்ள பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மனின் மூன்றாவது ஆட்சியாண்டுக் கல்வெட்டு புழை நாட்டு வடுவூர் கணபதி பகைச் சந்திர விசைய அரையன் திருவாதிரையன்று 200 நாழி அரிசி வழங்கியதைக் குறிப்பிடுகின்றது.
கோயிலின் இரண்டாம் கோபுர வாசலிலுள்ள கல்வெட்டு மூன்றாம் குலோத்துங்கனின் 39- ஆவது ஆட்சியாண்டில் செயசிங்கு குலகால வளநாட்டு பெரும்புலியூர் அங்கயராயன் கீழ்செங்களிநாட்டு குத்தங்குடியில் பட்ட மகன் சோழனுக்கு உதிரப்பட்டி நிலம் வழங்கியதைத் தெரிவிக்கிறது. இன்னொரு கல்வெட்டு இதே மன்னனின் 40-ஆவது ஆட்சியாண்டில் திருவழுந்தூர் நாடு என்ற சோழமண்டலத்து ஊருடைய விழிஞ்தரையர் இக்கோயில் வழிபாட்டிற்கு முக்கால் காசு கொடுத்து வைக்கச்சொல்லி, அதற்கு வரும் வட்டியின் மூலம் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்தமைக்கானது. கோயிலிலுள்ள கோநேரின்னமை கொண்டான் என்ற சுந்தரபாண்டியனின் கல்வெட்டு ஒன்று மேற்படி கோயில் பூசை செலவிற்குரிய அமுதுபடி, சாத்துப்படி ஆகியவைகளுக்காக நூறு பொன் வரி நீக்கி கொடுத்தமைக்கானது.
பராக்கிரம பாண்டியனின் 9}ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டு வடபனங்காட்டு தென்மலை நாட்டு பொன்னன் என்பவர் தன் காணி வத்தல்படி நிலத்தினை பணம் இருபதுக்கு விற்றுக் கொடுத்தமைக்கானது. இக்கோயிலிலுள்ள சடையவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டு ஒன்று காவல் உரிமையான ஆசிரிய பிரமாணம் நிலம் கொடுத்ததற்குரியது. இக்கோயிலில் இதே மன்னன் காலத்து கல்வெட்டில் இரண்டுமலை நாட்டு அரையர்கள் தங்கள் காவலிலுள்ள ஊர்களில் வழிப்போக்கர்கள், இடைக்குடி மக்கள் ஆகியோரை அழிவு செய்வதில்லை என்றும், அழிவு செய்தால் ஐந்நூறு பணம் தண்டம் கோயிலுக்கு செலுத்துவதாக உறுதி கூறியதற்கானது.
புதுக்கோட்டையிலிருந்து 28.கி.மீ. தொலைவில் குன்றாண்டார் கோயில் என்ற ஊர் அமைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.