நோய்கள் தீர்க்கும் இறைவன்!

சோழர் காலத்தின் தொன்மை மிளிரும், நோய்களை தீர்க்கும் வைத்தீஸ்வரர் அருள்தலம்.
நோய்கள் தீர்க்கும் இறைவன்!
Updated on
2 min read

கலைநயமிக்க சிற்பங்கள் நிறைந்தது, அம்மனின் பாதங்கள் கொண்டது, சோழ மன்னர்கள் காலத்தில் முக்கியத்துவம் பெற்றது, சித்தர் சமாதி அமைந்தது எனப் பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்கிறது, விழுப்புரம் மாவட்டம் , விக்கிரவாண்டி வட்டத்தில் அமைந்த சிந்தாமணி சிவாலயம்.

அக்காலத்தில் இவ்வூர் இராஜராஜ வளநாட்டின் பனையூர் நாட்டு தினசிந்தாமணிநல்லூர் என வழங்கப்பட, இத்தலத்து இறைவன் குலோத்துங்க சோழீஸ்வரமுடைய மகாதேவன் என்று அழைக்கப்பட்டார். கோயிலின் வடக்குச் சுவரில்

1922} ஆம் ஆண்டு இந்தியத் தொல்லியல் ஆய்வில் கண்டறியப்பட்ட இரண்டு கல்வெட்டுகள் மூலம் இக்கோயிலின் தொன்மையை அறியலாம்.

பரகேசரிவர்மன் எனும் விக்கிரம சோழதேவன் கால கல்வெட்டுகளில் (1118 மற்றும் 1124) இவ்வாலயத்துக்குத் திருவிழாக்கள் நடத்துவதற்கு களஅளவு, கோற்குழி, அங்காடிப் பாட்டம் உள்ளிட்ட வரிகள் வசூலிக்கப்பட்ட விவரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதேபோல, இராஜராஜ வளநாட்டு திருமுனைப்பாடி நாட்டில் ஒக்கூர் பள்ளியில் வாழ்ந்த அடியார் கொடை அளித்த செய்தியும் கூறப்பட்டுள்ளது.

தினசிந்தாமணி என்ற பேரரசியின் பெயரால் அழைக்கப்பட்ட இவ்வூர், இன்று சிந்தாமணி என வழங்கப்படுகிறது. அருகேயுள்ள அகரம் என்ற ஊரின் துணைப் பகுதியாக இது விளங்கியது. முதலாம் குலோத்துங்க சோழனின் பேரரசி மதுராந்தகி. இவளுக்கு தினசிந்தாமணி என்ற பட்டப்பெயர் வழங்கப்பட்டது. இவளின் பெயரால் சோழமன்னன் உருவாக்கிய திருத்தலமே இன்றைய சிந்தாமணி.

ஊரின் கடைக்கோடியில் வயல்வெளிகள் சூழ இயற்கையான சூழலில் விசாலமான இடத்தில் கோயில் அமைந்துள்ளது. கிராம சாலையையொட்டி, தெற்கு நோக்கி நுழைந்ததும், இடது

புறம் வேம்பும், அரசும் காணப்படுகின்றன. அருகே வணங்கிய நிலையில் விஸ்வரூப அனுமன் காட்சி தருகின்றார். அருகே நவகிரக சந்நிதி அமைந்துள்ளது. சற்று நடந்ததும், அம்மன் தையல்நாயகி தனி சந்நிதியில் கிழக்கு முகமாய்க் காட்சியளிக்கின்றார். எதிரில் அம்பிகையின் பாதக் கமலங்கள் தனிபீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளன.

இதனைக் கடந்தபின் சுவாமி சந்நிதி வருகிறது. பெரிய நந்திதேவர் இறைவனை நோக்குகிறார். மகாமண்டபம் கடந்ததும் கருவறையில் வட்ட வடிவ ஆவுடையாரில் நீண்ட லிங்கத் திருமேனியராக இறைவன் காட்சி தருகின்றார். குலோத்துங்க சோழீஸ்வரமுடைய மகாதேவரின் இன்றைய பெயர் வைத்தீஸ்வரர். இங்கு வரும் பக்தர்களின் பிணிகளைத் தீர்ப்பதால் இந்தத் திருநாமத்தைப் பெற்றுள்ளார். தலமரம் மகிழம், தீர்த்தம் ஊறல் குளம்.

நர்த்தன விநாயகர், ஊர்த்துவத் தாண்டவர், தட்சிணாமூர்த்தி, பிட்சாடனர், பிரம்மன், அம்மையப்பன், துர்கை, காலபைரவர் என இங்கு வடிக்கப்பட்டுள்ள சிலை வடிவங்கள் அனைத்தும் கலைநயத்தை வெகு நேர்த்தியாக வெளிப்படுத்துவதாகும். இவை சோழ மன்னர்களின் காலத்தை உறுதி செய்கின்றன. இது தவிர விநாயகர், செவ்வாய் தோஷம் போக்கும் வள்ளி } தெய்வயானை சமேத முருகப் பெருமான் சந்நிதிகளும் அமைந்துள்ளன. சித்திரகுப்தர், விசித்திரகுப்தர் சந்நிதி சிறிய அளவில் உள்ளது. இவர்கள் எமபயம் போக்கி, ஆரோக்கியம் தருபவர்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

கோயிலின் ஈசான்ய மூலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கே ஐக்கியமான சித்தரின் சமாதி அமைந்துள்ளது. இவரை பெüர்ணமியில் வழிபட்டால் நற்பலன் கிடைக்கும் என்கிறார்கள். சிவாலயத்துக்குரிய அனைத்து விழாக்களும் சிறப்புடன் நடத்தப்படுகின்றன.

விழுப்புரம் - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரத்துக்கு தெற்கே 6 கி.மீ. தொலைவில் சாலையோர ஊராக, சிந்தாமணி அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com