நினைத்தவை நடந்தேற...

தஞ்சாவூரின் மூலை அனுமன் கோயிலின் வரலாறும், அரிய சிற்பங்களும் பக்தர்களை கவரும் ஆன்மிகத் தலம்
நினைத்தவை நடந்தேற...
Updated on
2 min read

அனுமனுக்கு எண்ணற்ற கோயில்கள் இருந்தாலும், அவற்றுள் அருள்மிகு பிரதாப வீர ஆஞ்சநேயர் கோயில் தனிச் சிறப்புமிக்கது. தஞ்சாவூரில் மேல வீதியும் வடக்கு வீதியும் சேரும் இடத்தில், வாயு மூலையில் இக்கோயில் அமைந்துள்ளதால், இங்குள்ள மூலவரை "மூலை அனுமார்' என்றே அழைக்கின்றனர். அரண்மனை தேவஸ்தானத்தைச் சார்ந்த 88 கோயில்களுள் ஒன்று.

மராட்டிய மன்னன் ஸ்ரீ பிரதாபசிம்மன் (1739}69) இந்தக் கோயிலைக் கட்டினார். ஆதி பீம ராஜ கோஸ்வாமி சமகாலத்தில் வாழ்ந்த சேதுபாவா சுவாமிகள் மூலை அனுமரை பிரதிஷ்டை செய்தார். மூலவர் திருமேனி கற்பலகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மூன்றடுக்கு ராஜகோபுரம் கிழக்கு நோக்கிய வகையில் அமைந்துள்ளது. அதில் ஆஞ்சநேயர் தான் குழந்தையாக இருந்தபோது, தன் தாயின் மடியில் அமர்ந்துள்ள வகையில் சிற்பம், பட்டாபிஷேக ராமர், பாமா } ருக்மணி சமேதராக கிருஷ்ண பகவான் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.

உள்ளே கொடி மரம், 18 தூண்கள் கொண்ட அலங்கார மண்டபம் போன்றவையும் உள்ளன. மேல்புறத்தில் சூரிய கிரகணம், சந்திர கிரகணத்தைக் குறிக்கும் வகையில், ராகுவும் கேதுவும் சூரியனைக் கவ்விப்பிடிக்கும் சிற்பங்களும், மூலஸ்தானத்துக்குச் செல்லும் வழியில் இரண்டு வானர சேனைகளின் தளபதிகள் சிற்பங்களும் காணப்படுகின்றன. அடுத்து ராசி மண்டல சிற்பங்கள் மேல்புறத்தில் அமைந்துள்ளன.

தலவிருட்சம் வேப்பமரம். இங்கு பங்காரு காமாட்சி அம்மன் சூட்சும ரூபத்தில் இருப்பதாக ஐதீகம். வேப்ப மரத்தடியில் நாகர்

சிலைகள் காணப்படுகின்றன. வடக்கு பிரகாரத்தில் இரண்டு பிறைகளில் ஒன்றில் யோக ஆஞ்சநேயரை பிரதாப சிம்மன் வழிபடுவதைப் போலவும், மற்றொரு பிறையில் யோக ஆஞ்சநேயரை அவரது மகன் இரண்டாம் துளஜா துதிப்பது போலவும் உள்ளது. கொடி மரத்தின் வடக்கு புறத்தில் ஐயப்பன் சந்நிதி உள்ளது.

மூலஸ்தானத்தில் உள்ள அனுமன் கிழக்கு நோக்கிய வண்ணமும் முகம், இரு கால்களும் வடக்கு நோக்கியும் அமைந்துள்ளது. இடக்கரத்தில் செüகந்திகா மலரை மார்பில் அணைத்த மாதிரி உள்ளது. வலது கரம் தோளைவிட உயர்ந்து "அனுமன் இருக்க பயம் ஏன்?' என்பதாக அபய முத்திரை காட்டுகிறது. தலைக்கு மேல் உள்ள அற்புதமான வாலில் சனீஸ்வரபகவான் உள்பட நவகிரகங்கள் வாசம் செய்வதாகவும், இதய கமலத்தில் ராமன் வாசம் செய்வதாகவும் ஐதீகம். வாலின் நுனியில் மணியும் காணப்படுகிறது. இவர் நினைத்ததை நிறைவேற்றும் பெரும் வரப்பிரசாதி.

பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்து இருப்பவர்கள் மட்டுமே அமாவாசை அன்று மூலை அனுமாரை தரிசனம் செய்ய இயலுமாம். அமாவாசை நாளன்று காலையில் அனுமனுக்கு 18 தேங்காய்த் துருவல் அபிஷேகம் செய்தால் வறுமை, கடன் தொல்லை நிவர்த்தியாகும், கிரக தோஷங்கள் நீங்கும் என்பதும்; மார்கழி மாதத்தில் ராம நாமம் ஜெபம் செய்து இவரை 108 வலம் வந்தால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பதும் நம்பிக்கை. 1008 ராம நாமம் எழுதி சமர்ப்பித்து வழிபடுவது சிறப்பாகும்.

கோயிலில் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. டிசம்பர் 19}ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அனுமன் ஜெயந்தியன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற விருக்கின்றன.

தஞ்சை இரா.சுரேஷ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com