

வந்தவினை மட்டுமல்ல; வரப்போகும் வினையையும், முன்கூட்டியே தீர்க்கின்ற ஆற்றல் வேலன் வழிபாட்டுக்கு உண்டு. அதற்காக வடிவேலனுக்கு கோயில் அமைந்த தலங்களுள் ஒன்று, பொன்நாகமலை.
சுப்பிரமணியசுவாமி என்ற திருநாமம் கொண்ட இந்த முருகப்பெருமானின் சிலையை சித்தர்களும் முனிவர்களும் பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளனர்.
இம்மலை மீதுள்ள மத்தாப்பூப் பாறையில் காணப்படுகின்ற வற்றாத சுனையில் உள்ள நீரினை தீர்த்தமாக எடுத்து முருகப்பெருமானுக்கு அபிஷேக பூஜைகள் செய்து வழிபட்டதாக தங்களது முன்னோர் இத்தலம் குறித்து சொல்லிய தகவல்களை தற்போதுள்ள பெரியவர்கள் இப்போதும் கூறி வருகின்றனர்.
முருகப்பெருமான் அருள்பாலிக்கின்ற இந்த மலையில் பொன்னிறமான பாறைகள் அதிகம் உள்ளதாலும், இம்மலையில் இருந்து வெளிவரும் நாகம் ஒன்று பக்தர்கள் கண்ணில் அவ்வப்போது தென்பட்டதாலும் இது பொன்நாகமலை என வழங்கப்படுகிறது.
அரிய வகை மூலிகைகள் அதிகம் கொண்ட இம்மலை ஏறிட சுமார் 700 படிக்கட்டுகளை கொண்ட படிக்கட்டுப் பாதை உள்ளது. பாதை ஆரம்பமாகும் இடத்தில் கற்பக விநாயகர் தனி ஆலயத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இங்கு தரிசனம் முடித்து படியேற ஆரம்பித்தால், அடிவார மண்டபத் தூண்களில் ஆறுபடை முருகன்களையும் தரிசிக்கலாம். பாதி மலையை அடைந்ததும், உச்சிப் பிள்ளையார் தரிசனமும், வடக்கு நோக்கி காட்சி தருகின்ற சுதை வடிவிலான முருகப்பெருமானின் தரிசனமும் கிடைக்கின்றது. மீண்டும் மலையேறினால் மூலவர் குடிகொண்டுள்ள கோயிலை அடையலாம்.
கிழக்கு நோக்கிய ஆலயத்தின் அர்த்த மண்டபத்தில் விநாயகர், ஆறுமுக சுப்பிரமணியர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். கருவறையில் தன்னை நாடி வரும் பக்தர்களின் வாட்டங்களைப் போக்கி, வாழ்வில் அனைத்து நலன்களும் அளித்துக் காப்பவராக மூலவர் சுப்பிரமணிய சுவாமி அருள்பாலிக்கிறார். வெளிப் பிரகாரத்தில் வலம் வந்தால் சிவபெருமான், நந்தியம்பெருமான், கன்னிமூல கணபதி ஆகிய தெய்வங்களின் தரிசனம் கிடைக்கின்றன. தல விருட்சமாக கிளுவை மரம் உள்ளது.
மலை அடிவாரத்தில் ஒரு பாறையில் பழைமையான ஆஞ்சநேயர் திருவுருவம் காணப்படுகின்றது. இங்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. வீர ஆஞ்சநேயர் என்ற திருநாமத்துடன் அஞ்சனை மைந்தன் சேவை சாதிக்கிறார்.
செவ்வாய்க்கிழமைகளில் காலையில் சிறப்பு அபிஷேகம் முடிந்து அலங்காரத்துடன் பொன்நாகமலை சுப்பிரமணிய சுவாமி அருள்பாலிக்கிறார். கிருத்திகை நாளில் காலை 9 மணியிலிருந்து மதியம் 3 மணி வரை சிறப்பு வழிபாடும், வீர ஆஞ்சநேயருக்கு ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் சனிக்கிழமை விசேஷ வழிபாடும், புரட்டாசி மாதம் ஐந்து சனிக்கிழமையும், அனுமன் ஜெயந்தி நாளிலும் சிறப்பு வழிபாடும் செய்யப்படுகின்றது.
வளர்பிறை சஷ்டி நாளில் இத்தலத்தில் சிறப்பு ஹோமம் நடைபெறுகின்றது. இதில் கலந்து கொள்பவர்களுக்கு தொழில் விருத்தி, குழந்தைப்பேறு, குடும்ப ஒற்றுமை, தீய சக்திகளின் பிடியிலிருந்து விடுபடுதல் போன்ற நற்பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
தைப்பூசத் திருநாள் பெருவிழாவாக இத்தலத்தில் கொண்டாடப்படுகின்றது. அன்று முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு முடிந்ததும் பக்தர்கள் காவடிகள் எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.
ஆண்டுதோறும் ஐப்பசி கந்த சஷ்டி விழாவையொட்டி இத்தலத்தில் சிறப்பு ஹோம பூஜை நடைபெறுகின்றது. எண்ணற்ற பக்தர்கள் இந்த வழிபாட்டில் கலந்துகொண்டு வேலனை வணங்குகின்றனர். பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை ஆகிய வருட முக்கிய விரத தினங்களில் விமரிசையாக வழிபாடுகள் நடைபெறுகின்றன.
ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே எலத்தூர் கண்ணாங்காட்டுப்பாளையம் பகுதியில் பொன்நாகமலை உள்ளது.
-காரமடை செ.சு.சரவணகுமார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.