"மாதங்களில் மார்கழியாகவும், நாள்களில் திருவாதிரையாகவும் விளங்குகிறேன்' என்று பகவத் கீதையில் கிருஷ்ணன் கூறுகிறார்.
சிவனுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை. "ஆதிரை நாளுகந்தான்', "ஆதிரை நாளாய் அமர்ந்தோர்', "ஆதிரை நன்னாளானை", "திருவாதிரையானை' என்றெல்லாம் திருமுறைகள் புகழ்கின்றன. ஆண்டில் நடராஜருக்கு ஆறு அபிஷேகங்கள் சிறப்பாக நடைபெறும். அதில், திருவாதிரை நாள் அபிஷேகம் மிகச் சிறப்பானதாகும்.
சிவன் ஆடவல்லானாக திருநடனம் ஆடிய தலங்களாக சிதம்பரம் } கனக சபை, மதுரை } வெள்ளி சபை, திருநெல்வேலி } தாமிர சபை, திருக்குற்றாலம் } சித்திர சபை, திருவாலங்காடு } ரத்தின சபை என்ற ஐந்து சபைகள் போற்றப்படுகின்றன
சென்னை } திருத்தணி செல்லும் பாதையில் அமைந்துள்ள திருவாலங்காடு, "வடாரண்யம்' என்று அழைக்கப்படுகிறது. உலகம் உய்ய இறைவன் இங்கு ஆடிய "ஊர்த்துவ தாண்டவமே' முதன்மையானதாக விளங்குகிறது.
இறைவனின் ஐந்து செயல்களில் "அருளல்' என்னும் செயலை இத்தாண்டவம் குறிக்கிறது. காளியின் கர்வத்தைப் போக்குவதற்காக மிக வேகமாக சுழன்று ஆடியதால் "சண்டதாண்டவம்' என்றும், "அணுக்கிரக தாண்டவம்' என்றும் அழைக்கப்படுகிறது. "ஆடினார் காளி காண ஆலங்காட்டிகளாரே' என்று திருநாவுக்கரசர் போற்று
கின்றார். ஊர்த்துவ தாண்டவத்தை "பெருங்கூத்து' எனவும் "செயற்கரிய நடனம்' எனவும் ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரும் போற்றுகின்றனர்.
திருவாலங்காடு ஆடவல்லான் பெருமானிடத்தில் காரைக்கால் அம்மையார் ஈடுபாடு கொண்டு விளங்கினார். "வீசி எடுத்து பாதம் அண்டமுற நிமிர்ந்தாடும் எங்கள் அப்பனிடம் திருவாலங்காடே', "காலுயர் வட்டணை இட்டு நட்டம் அழல் உமிழ்ந்து ஒரிகதிக்க ஆடும் அப்பன் இடம் ஆலங்காடே' என்றெல்லாம் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்களில் அம்மையார் வியந்து போற்றுகிறார்.
துத்தம், கைக்கிளை, விளரி, தாரம், உழை, இளி, ஓசை என்ற ஏழு பண்களையும் இசைத்து, சச்சரி கொக்கரை, தக்கை, தகுணி, துந்துபி, தாளம், வீணை, மத்தளம், கரடிகை, தமருகம், குடமுழா, மொந்தை முதலிய இசைக்கருவிகளுடன் ஆலங்காட்டு அழகன் ஆடும் நடனம் எத்தகைய சிறப்பானதாக அமைந்திருக்கும் என காரைக்கால் அம்மையார் குறிப்பிடுகிறார்.
அவர் பாடலில் குறிப்பிடும் "அண்டமுற நிமிர்ந்தாடும்' என்ற குறிப்பைக் கொண்டு, கோயிலில் வழிபாட்டில் உள்ள ஆடவல்லான் திருமேனியை "அரங்கில் அண்டமுற நிமிர்ந்தருளிய நாயனார்' என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது.
காரைக்கால் அம்மையாரின் இறைபக்தியைக் கண்ட இறைவன் "அம்மையே" என அவரை போற்றியதை பெரியபுராணம் கூறுகிறது. மகிழ்ந்த இறைவனிடம் "நீ ஆடும்பொழுது உனது திருவடியின் கீழ் இருக்கும் பேறு வேண்டும்' என வேண்டினார். இறைவன் ஆடவல்லானாகக் காட்சியளிக்கும் சிற்பங்களின் காலின் கீழே காரைக்கால் அம்மையார் கைகளில் தாளத்துடன் காட்சி அளிப்பார்.
மார்கழி திருவாதிரை நாளில் அனைத்து சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடைபெறும். தில்லை சிதம்பரம் திருத்தலத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசன காட்சி மிகவும் சிறப்பானது.
(தொல்லியல் துறை } பணி நிறைவு).