அறுபடை வீடு கொண்ட திருமுருகா...

சூரபத்மனை அழித்து சேவற்கொடியோனாக மாறிய முருகன்..
அறுபடை வீடு கொண்ட திருமுருகா...
Published on
Updated on
1 min read

முன்பொரு காலத்தில் தேவர்களுக்கு அசுரர்கள் பல தொல்லைகளை அளித்து வந்தனர். அசுரர்களில் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து வரம் பெற்றவன். எனவே தேவர்கள் சிவனை வேண்டினர். பிரார்த்தனையை ஏற்ற சிவனும், சூரபத்மனை அழிக்கத் தனது மூன்றாவது கண்ணில் இருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகளில் இருந்து முருகனை அவதரிக்கச் செய்தார்.

குழந்தையான முருகனை கார்த்திகை பெண்கள் சீரும் சிறப்புமாக வளர்த்தனர். பின்பு சூரபத்மனை அழிக்க முருகனுக்கு உத்தரவிட்டார்.

சூரபத்மனை அழிக்க முருகன் திருச்செந்தூருக்கு வருகிறார். அப்போது தேவர்களின் குரு வியாழன் முருகனின் அருளாசி பெற தவத்தில் இருந்தார். முருகனும் அவருக்கு தரிசனம் தந்து அருள் அளித்துவிட்டு, திருச்செந்தூரை படை வீடாகக் கொண்டு தனது படையுடன் தங்கி சூரபத்மனை அழிக்க வியூகம் வகுத்தார். அசுரர்களின் வரலாற்றை அவர் வியாழனிடமிருந்து அறிந்து கொண்டார். பின்னர் முருகன் தனது நவ வீரர்களில் ஒருவரான வீரபாகுவை சூரபத்மனிடம் தூதுவனாக அனுப்பி, "தேவர்களுக்குக் கொடுக்கும் தொல்லையை நிறுத்த வேண்டும்' என்று தெரிவித்தார். சமாதானக் கோரிக்கையை சூரபத்மன் ஏற்கவில்லை. கடைசியாக, சூரபத்மன் மீது முருகன் போர் தொடுத்தார். சிவபெருமானிடம் வரம் பெற்ற மாமரமாக உரு மாறிய சூரபத்மனை வதம் செய்யாமல் அவனது ஆணவத்தை அழித்து சேவற்கொடியாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுள் ஆட்கொண்டு வைத்துக் கொண்டார் . அதனால் முருகன் "சேவற்கொடியோன்' என்றும் அழைக்கப்பட்டார். இந்த நிகழ்வுக்குப் பிறகு, வியாழன் முருகனை திருச்செந்தூரில் தங்கி அருள் புரியும்படி வேண்டுகோள் விடுத்தார். பின்னர், வியாழன் உத்தரவின்படி விஸ்வகர்மா இந்த திருக்கோயிலை கட்டினார். சூரபத்மனை அழித்ததில் முருகனின் வெற்றியின் காரணமாக, முருகன், "ஜெயந்திநாதர்' என்று அழைக்கப்படுகிறார். பிற்காலத்தில் "செந்தில்நாதன்' என்றும் அழைக்கப்பட்டார். இத்தலமும் திருஜெயந்திபுரம் என அழைக்கப் பெற்று காலப்போக்கில் மருவி "திருச்செந்தூர்' என்று அழைக்கப்படுகிறது. இதற்கு "திருச்சீரலைவாய்' என்ற மறு பெயரும் உண்டு

முருகனின் அறுபடைவீடுகளில் இரண்டாம் படை வீடு திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமிகோயில், கடற்கரை கோயிலாக அமைந்துள்ளது.

பிற அறுபடை வீடுகள் மலைகளில் அமைந்திருக்க இத்திருத்தலம் வங்கக் கடலின் அருகில் அமைந்துள்ளது தனிச்சிறப்பு. இந்தக் கோயில் ஆதிகாலங்களில் இருந்து சந்தனமலையின் ஒரு பகுதியாக அமைந்திருக்கிறது. தமிழரின் பண்டைய நூல்களில் குறிப்பிடுவது போல், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான கட்டமைப்பு உடையது.

திருமுருகாற்றுப்படையில் திருச்செந்தூர் இரண்டாவது தலமாக அமையப் பெற்றுள்ளது. அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்களிலும் குமரகுருபர சுவாமிகள் கந்தர் கலிவெண்பாவிலும் திருச்செந்தூரை போற்றி உள்ளனர்.

சிறப்புடைய இந்தக் கோயில் குடமுழுக்கு விழா 15 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூலை 7 (திங்கள்கிழமை) காலை 6.15 மணி முதல் காலை 6.50 மணிக்குள் நடைபெறுகிறது.

க. சுப்பிரமணியன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com