நினைத்தது நிறைவேறும்...

தனது தங்கை தேவகியை வசுதேவருக்கு திருமணம் செய்துவித்து, காலநேமி தேரை ஓட்டிச் சென்றார் கம்சன்.
நினைத்தது நிறைவேறும்...
Published on
Updated on
1 min read

தனது தங்கை தேவகியை வசுதேவருக்கு திருமணம் செய்துவித்து, காலநேமி தேரை ஓட்டிச் சென்றார் கம்சன். அப்போது, "உன் தங்கை வயிற்றில் உதிக்கும் எட்டாவது சிசு உன்னைக் கொல்லும்' என அசரீரி ஒலித்தது. உடனே வசுதேவரையும், தேவகியையும் சிறையில் அடைத்தார் கம்சன். ஏழு சிசுக்களை அழித்தார் கம்சன். எட்டாவது சிசுவாய் கண்ணன் அவதரித்தார். விதிவலிமையால் மாயாதேவி சிறைக்கு வந்தாள். கம்சனும் தேவகி கையணைத்திருந்த குழந்தையைப் பறித்து, பெண் சிசுவாக இருந்ததால் வாளால் வெட்டாமல் ஆகாயத்தில் எறிந்து பாறையில் மோதும்படி செய்தார்.

குழந்தையும் கம்சன் கையைவிட்டு நீங்கி மேலே சென்று, "உன்னைக் கொல்ல உதித்தவனோ பேராற்றல் மிக்கவன். ஆயர்பாடியில் நந்தகோபன் மனைவி வளர்த்து வருகிறாள். உன் தவறுகளை அழித்தே தீருவான்'' எனக் கூறிய மாயை, அவ்விடம் விட்டு அகன்று ஆரண்ய ஆற்றங்கரையில் மேற்குப் பகுதியில் வந்து அமர்ந்தாள்.

தீயவர்களை அழித்து, நல்லவர்களைக் காக்க கண்ணனுக்கு மாறாக "பவானி' என்ற பெயரில் அமர்ந்த இடமே பெரியபாளையம்.

தன் கீழ் வசிக்கும் மக்கள் அனைவரையும் காத்து ரட்சிக்க ஓரிடத்தில் அமர்ந்து உலகையே ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து, ஆட்சி செய்வதற்காக உலகை ஒரு பெரிய பாளையமாகக் கருதி ஆட்சி செய்பவள் என்பதால், பவானி அமர்ந்த இடம் பெரியபாளையம் என அழைக்கப்பட்டது.

இங்கு குடிகொண்டுள்ள பவானி அம்மன் அரை உருவோடு வலது மேல் கையில் சக்கரமும், இடப்புறம் சங்கும் ஏந்தி சக்கரதாரியாகவும் ஒரு கையில் வாளும், இடது கரத்தில் அமுத கலசமும், கொண்டு சுயம்பு வடிவாயக் காட்சித் தருகிறாள். ஐந்து தலை நாகம் சிரசை அலங்கரிக்க, காண்போருக்கு அச்சத்தையும், வேண்டுவோருக்கு அருளையும் வழங்கும் வகையில் திருவுருவம் அமைந்துள்ளது.

முடிக் காணிக்கை, காதுக் குத்திக் கொள்ளுதல், பொங்கலிட்டு வழிபாடு, அங்கப்பிரதட்சிணம், வேப்பிலை ஆடை கட்டி வழிபாடு உள்ளிட்ட பிரார்த்தனைகளை வேண்டுதல் நிறைவேறியவர்கள் மேற்கொள்கின்றனர். பெண்கள் தனது கணவர் நலம் வேண்டி, தங்கள் குடும்பத்துடன் தாலியை அன்னைக்குக் காணிக்கையாக்கி புதுத் தாலியை கணவர் கையால் அணிந்து கொள்வதை பெரும் பாக்கியமாகக் கருதுகின்றனர்.

ஆடி முதல் ஞாயிறு தொடங்கி, அடுத்துவரும் 14 ஞாயிற்றுக்கிழமைகள் சிறப்பான விசேஷ நாள்களாக கருதப்படுகின்றன. பத்தாவது ஞாயிற்றுக்கிழமையில் சூரியன் இந்த சுயம்பு மூர்த்தியின் கேசம் முதல் பாதம் வரை பூஜை செய்கிறார்.

திருவள்ளூருக்கு வடக்கே சுமார் 20 கி.மீ. தொலைவில் பெரிய பாளையம் அமைந்துள்ளது.

பொ.ஜெயச்சந்திரன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com