மனக்குறை நீக்கும் மச்சபுரி...

தினமும் நீராட பூஜை செய்ய மச்ச அவதாரத்திலிருந்து சுயவுருவை மீட்டுக் கொடுத்தார்..
மனக்குறை நீக்கும் மச்சபுரி...
Published on
Updated on
2 min read

பூவுலகைக் காக்க, தீயவற்றை அழிக்க விஷ்ணு பல அவதாரங்களை எடுத்தார். அவற்றில் குறிப்பிடப்படும் தசாவதாரங்களில் முதன்மையானது மச்சாவதாரம்.

படைப்பு அசதியில் பிரம்மா அயர்ந்தபோது, அவர் வாயிலிருந்து தாமே வெளிவந்த வேதங்களை ஹயக்கிரீவன் என்ற அசுரன் திருடிச் சென்றார். மறைக்கப்பட்ட வேதங்களை மீட்க, விஷ்ணு மீனாக அவதரித்தார். கிருதமாலா நதிக்கரையில் மன்னர் சத்யவிரதன் வழிபட கையில் எடுத்த நீரில் மீன் குஞ்சு இருந்தது. அந்த மீன் தன்னை தண்ணீரில் விட வேண்டாம் என வேண்ட, அவர் தனது கமண்டலத்துக்குள் போட்டு எடுத்துச் சென்றார். அன்றிரவு அந்த மீன் வளர, சத்தியவிரதனோ வேறு பாத்திரத்தில் போட்டார். அங்கும் வளர்ந்தது. வெவ்வேறு நீர்நிலைகளில் விடும்போதும் மீன் வளர, இறுதியில் கடலில் கொண்டுவிட்டார் சத்யவிரதன். அப்போது மீனோ, "பெரிய உயிரினங்கள் வாழும் இங்கு என்னை விட்டு போகாதே' என்று அலறியது. அப்போது விஷ்ணுவே மீனாக வந்ததை உணர்ந்த சத்யவிரதன் அதற்கான காரணம் கேட்டார்.

"மன்னா... விரைவில் ஊழி ஒன்று வரப் போகிறது. ஏழாம் நாள் பூமியும், விண்ணும், வெளியும், கடலுக்குள் மூழ்கும்போது இந்த உலகில் அவசியமானவற்றை தேர்ந்தெடுத்து காப்பாற்ற வேண்டிய கடமை எனக்கு உள்ளது. அசுரனிடம் வேதத்தை மீட்டு உலக இயக்கம் தொடர லேண்டும். மூலிகைகள், வித்துக்கள், சப்தரிஷிகளுடன் ஏறி வாயு தேவனால் பாதிக்கப்படாதவாறு தோணியை வாசுகிப் பாம்பினால் பிணைத்து என் கொம்பில் கட்டிவிடு. பிரம்மன் விழிக்கும்வரை,நான் பொன் திமிங்கல வடிவில் ஓடத்தோடு சென்று கொண்டிருப்பேன்'' என்றார் மீன் வடிவில் இருந்த விஷ்ணு. இதன்படி, சத்யவிரதனும் செய்தார். பிரம்மன் விழித்து விஷ்ணுவை நினைத்து தியானம் செய்தார்.

மச்சமூர்த்தி இடுப்பின்கீழ் மீன் உருவமும், இடுப்பின் மேற்புறம் ஆயுதங்களோடு கூடிய நான்கு கைகளுடனும் உருவெடுத்து, கடலில் புகுந்து, ஹயக்கிரீவனுடன் போர் புரிந்து, வேதங்களை கைப்பற்றி பிரம்மாவிடம் அளித்தார். மச்சாவதாரத்தில் அசுரனை விஷ்ணு வதம் செய்த தோஷம் தீண்டியிருந்தது.

இதற்காக, சிவலிங்கத்தை நிறுவி, அருகில் சிவகங்கை திருக்குளம் எடுத்து, தினமும் நீராட பூஜை செய்ய மச்ச அவதாரத்திலிருந்து சுயவுருவை மீட்டுக் கொடுத்தார். இந்த இடம் மீனுக்குரிய தமிழ்ப் பெயரான சேல் உறையும் " சேலூர்' எனப்பட்டது. விஷ்ணு வழிபட்ட இந்த இடத்தில் சிவன் குடிகொண்டுள்ளதால் "தேவராயன்பேட்டை' எனப்படுகிறது.

இது தேவார வைப்புத் தலமாகும். திருஞானசம்பந்தர் திருப்புள்ளமங்கையிலிருந்து திருப்பாலைத்துறைக்குச் செல்லும்போது இன்னிசைத் தமிழ்புனைந் திறைவர் சேலூருடன் வணங்கிச்சென்றதை, சேக்கிழார் தனது பெரிய புராணத்தில் குறிப்பிடுகிறார்.

தஞ்சை பெரிய கோயிலுக்கு முற்பட்ட இந்தக் கோயிலில் 55 கல்வெட்டுகள் உள்ளன. விஷ்ணு மச்ச அவதார வடிவில் சிவனை வழிபட்ட கருங்கல் புடைப்பு சிற்பம் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய கருவறையில் லிங்க வடிவில் மச்சபுரீஸ்வரர், அந்தராளம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், முகமண்டபம், நந்தி, பலிபீடம், கொடி மரம் என நேர்கோட்டில் அமைந்துள்ளன. உள், வெளித் திருச்சுற்றுகளில் விநாயகர், துர்க்கை, தட்சணாமூர்த்தி, நால்வர், வள்ளி தெய்வானை துணையுடன் சண்முகர் சங்கு சக்கரமேந்தியவாறும், சரஸ்வதி, கஜலட்சுமி, ஐயப்பன், சண்டிகேஸ்வரர், பைரவர், சூரியன் உள்ளிட்ட சந்நிதிகள் உள்ளன. வெளித்திருச்சுற்றில் இறைவி சுகந்த குந்தளாம்பிகை அருளுகிறாள்.

திங்கள்கிழமை, பிரதோஷம், உச்சிக் காலத்தில் மச்சபுரீஸ்வரை வழிபட்டு பிரார்த்தனை செய்தால் வேண்டியவை நிறைவேறும். குழந்தை பாக்கியம் கல்வி முன்னேற்றம், பார்வைக் குறைபாடு, செவித்திறன் அதிகரித்தல் ஆகியவற்றுக்காக பிரார்த்தனைகளைச் செய்கின்றனர். மீன ராசிக்காரர்கள், வேதம் ஓதுவோர், ஜோதிடர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் வழிபட உகந்தது. பாபநாசத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் பண்டாரவாடை ஊரினுள்ளே உள்

கிராமமான தேவராயன்பேட்டையில் கோயில் உள்ளது.

}இரா. இரகுநாதன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com