வரங்கள் அருளும் தேனுபுரீஸ்வரர்

சித்தர்கள் பூஜிக்கும் கோயில், அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியது...
வரங்கள் அருளும் தேனுபுரீஸ்வரர்
Published on
Updated on
2 min read

கபில மகரிஷி பசுவாக வழிபட்டது, பாம்பணையில் சிவன் காட்சி தரும் கோயில், சித்தர்கள் பூஜிக்கும் கோயில், அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியது... உள்ளிட்ட பெருமைகள் பெற்றது தேனுபுரீஸ்வரர் கோயில். வடமொழியில் "தேனு' என்பதற்கு "பசு' என்று பொருள். தேனு வழிபட்டதால் இறைவன் "தேனுபுரீஸ்வரர்' ஆனார்.

பிரம்மனின் நிழலில் உருவான கர்தம மகரிஷியின் தவப் பயனால், விஷ்ணுவே இவருக்கு கபில மகரிஷி என்ற மகனாக தோன்றினார். இவர் தனது பிறவித் தொடர்பு நீங்கி முக்தி பெற, சிவ வழிபாடு செய்து வந்தார். ஒருமுறை லிங்கத்தை இடது கையால் வைத்து வழிபட்டபோது ஏற்பட்ட தோஷத்தால், முக்தி கிடைக்கவில்லை. இவர் பசுவாக மறுபிறவியை எடுத்து, மாடம்பாக்கம் சிற்றேரியில் பசுக்களுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். ஒரு பசு குறிப்பிட இடத்தில் சுயம்புலிங்கம் இருப்பதை அறிந்து தாமாகவே பால் சொரிந்து வழிபடத் துவங்கியது.

இதையறிந்த மாடு மேய்ப்பவர் கோபம் கொண்டு, பசுவை கடுமையாகத் தாக்கினார். வலி தாங்க முடியாத பசு தன் காலால் அவனை எட்டி உதைக்க அது லிங்கத் திருமேனியில் பட்டு காயம் ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட ரத்தம் ஏரியில் கலந்து, நீர் ரத்த வெள்ளமானது. ஊர் மக்கள் திரண்டனர். அப்போது இறைவன் தோன்றி, ""யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். கபில மகரிஷியின் வழிபாட்டிற்காகவே சுயம்பு மூர்த்தியாக தோன்றினோம்'' என்றார். மகரிஷியும் வருந்தியவாறு வேண்டி நின்றார். அவரை இறைவன் ஜோதியிலே இணைத்துக்கொண்டார்.

இந்த இடத்தில் சுந்தரசோழன் இரண்டாம் பராந்தகன் காலத்தில் (954 }971) கோயில் எழுப்பப்பட்டது. பசுவாக பால் சொரிவது போன்ற சிற்பங்கள் கோயிலில் அமைந்துள்ளன. சோழர்கள், பாண்டியர்கள், விஜய

நகர மன்னர்கள் உள்ளிட்ட மன்னர்கள் திருப்பணிகளை மேற்கொண்டுள்ளனர். ராஜகோபுரம் இல்லை. நுழைவாயிலில் ஒன்பது தமிழ் எழுத்துகள் கொண்ட அதிசய கல்வெட்டு உள்ளது. உயிரோட்டமான சிற்பங்கள் 18 தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன.

இறைவன் "சித்தேரி மகாதேவர்', "சிற்றேரி ஆளுடைய மகாதேவர்', "சிற்றேரியுடைய நாயனார்' என குறிப்பிடப்பட்டுள்ளார். இறைவன் சதுர வடிவ ஆளுடையாரில் எளிய கோலத்தில் காட்சியளிக்கிறார். நர்த்தன கணபதி, வீணை கணபதி , வீணை தட்சணாமூர்த்தி, சங்கரநாராயணர். வீரபத்திர சுவாமி, பத்திரகாளி, லிங்கேஸ்வரர், ஜுரதேவர், ராமர் பட்டாபிஷேகம், நால்வர், உச்சிஷ்ட கணபதி, சரபேஸ்வரர், பஞ்சமுக ஆஞ்சநேயர் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்கள் நிறைந்துள்ளன. வெளிப்புறத்தில் அழகிய குட்டியான சிற்பம் உயிரோட்டமாக அமைந்துள்ளது.

கருவறைக்குள் பசுவின் காலடிபட்ட சிறிய எளிய மூர்த்தமாக சுயம்பு மூர்த்தி கிழக்கு முகமாக காட்சி தருகின்றார். பசுவின் காலடி பட்ட அடையாளத்தை அபிஷேக நேரத்தில் காணலாம். கருவறை பிரகாரத்தில் கணபதி, தட்சிணாமூர்த்தி,நாராயணன், பிரம்மா, விஷ்ணு, துர்க்கை அமைந்துள்ளன. பிரகார சுற்றில் கலந்து சந்நிதிகள் வலஞ்சுழி விநாயகர், மகா கணபதி, ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள், அன்னபூரணி, திருப்புகழ் பாடல் பெற்ற வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் சந்நிதிகள் அமைந்துள்ளன.

"தோடுறுங் குழையாலே கோலவளை...' என்ற தொடங்கும் திருப்புகழ் இத்தலத்தில் பாடப்பட்டதாகும் .

தெற்கு நோக்கிய அன்னை தேனுகாம்பாள் சந்நிதியின் எதிரில் உள்ள மதில் சுவரில் அமைந்துள்ள கல் ஜன்னல் துவாரங்களைக் கடந்து திருக்குளத்தைக் காணும் வகையில் அமைந்துள்ளது. மகா மண்டபத்தை அடுத்து அம்மன் கருவறை சந்நிதி முன் உள்ள தூண்களில் கணபதியும் முருகனும் குடைவுச் சிற்பங்களாகக் காட்சி தருகின்றனர்.

"இங்கு தூணில் உள்ள சரபேஸ்வரரைத் தொடர்ந்து ஆறு வாரங்கள் வழிபட்டால், வேண்டிய வரங்கள் கிடைக்கும்' என்பது ஐதீகம்.

தலமரம் வில்வம். தலத்தின் தீர்த்தமாக கபிலத் தீர்த்தம் அமைந்திருக்கிறது. கோயிலில் ஜூன் 6 (வெள்ளிக்கிழமை) தேர்த் திருவிழா நடைபெறுகிறது.

சென்னையின் புறநகர் பகுதியான தாம்பரத்துக்கு அருகே இந்தக் கோயில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com