எம பயம் போக்கும் தண்டீசுவரர்..

"சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து, அரிய வரங்களைப் பெற்றான் சோமுகன் என்ற அசுரன்.
Thandiswarar
தண்டீசுவரர் கோயில்
Published on
Updated on
2 min read

"சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து, அரிய வரங்களைப் பெற்றான் சோமுகன் என்ற அசுரன். அதனால் அகந்தை கொண்டு உலகை கைப்பற்றி, வானுலகம் சென்று பிரம்மாவின் சத்தியலோகத்தில் இருந்த நான்கு வேதங்களையும் கவர்ந்தான். அவற்றை ஆழ்கடலில் ஒளித்துவைத்தான். இதனால் வேள்விகள் நின்றதால், வருந்திய தேவர்கள் திருமாலிடம் சரணடைந்தனர். உடனே திருமால், மச்ச அவதாரம் (மீன்) எடுத்து, காஞ்சிபுரத்துக்கு வந்தார். அங்கே தீர்த்தக் கரையில் மச்சேசரை நிறுவி வழிபட்டு, சிவனின் திருவருளைப் பெற்றார். மச்ச அவதாரத்திலேயே ஆழ்கடலில் புகுந்த திருமால், சோமுகனையும், துணையாக சங்கு உருவம் கொண்டிருந்த பஞ்சசனையும் கொன்றார். சங்கு வடிவமாகிய பஞ்சசன் எலும்பை, பாஞ்ச

சன்யமாகக் கொண்டு, வேதங்களைப் பிராமணர்களுக்குக் கொடுத்தார்' என காஞ்சிபுராணம் மச்சேசப் படலத்தில் கூறப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் திருமால் வழிபட்ட தலம், "மச்சேசர் கோயில்' என அழைக்கப்படுகிறது.

புனிதம் பெற்ற வேதங்கள் சோமுகனிடம் இருந்ததால் மாசுபட்ட வேதங்கள் தங்களைப் பரிசுத்தப்படுத்திட, பிரம்மனை வேண்டின. அவரின் ஆலோசனைப்படி, சென்னை திருவான்மியூர் அருகே சோலைகள் நிறைந்த இடத்தில் தவக்குடிலை அமைந்து, சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டு வந்தன. அதேபோல, மருந்தீசுவரரையும் வழிபட்டு வந்தன.

தவக்குடில் அமைக்கப்பட்ட இடம்தான் "வேதஸ்சிரேணி'. இந்த இரண்டு தலங்களை வழிபடுவோரின் வேண்டுதல்களை நிறைவேற்றி அருள்வதாக வரம் அளித்து, வேதங்களின் மாசு நீக்கினார் சிவன். வேதஸ்ரே மருவி வெளிச்சேரியாகி, இன்று "வேளச்சேரி' என அழைக்கப்படுகிறது.

துவாபரயுகத்தில் மார்க்கண்டேயன் மீது தன் பாசக் கயிற்றை எமன் வீச, அது தவறுதலாக சிவலிங்கத்தின் மீதும் விழுந்தது. கோபம் கொண்ட இறைவன், தன் காலால் எமனை எட்டி உதைத்தார். எமன் மயங்கி விழ, மார்க்கண்டேயரின் ஆயுள் நீண்டது. இறப்பு இல்லாததால் பூமகள் கலக்கமுற்றாள். இதையறிந்து இறைவனும் எமனை எழுப்பினார். நாரதரின் ஆலோசனைப்படி இத்தலத்தில் (வேளச்சேரி) லிங்கத்தை எமன் நிறுவி வழிபட, தன் இயல்புநிலையைத் திரும்பப் பெற்றார். இத்தல இறைவனை வழிபடுவோருக்கு எம பயம் போக்குவதாக எமனும் உறுதி கூறி, தனது இருப்பிடம் சென்றார், எனத் தலபுராணம் கூறுகிறது.

16 கல்வெட்டுகள் உள்ளன. பல்லவர்கள், சோழர்கள் உள்பட பலரது ஆட்சிக்காலத்தில் நிலக்கொடை, பசுதானம் ஆடு தானம், பொற்காசுகள் காணிக்கை என பல செய்திகள் கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளன. கோயிலின் கட்டட அமைப்பு சோழர் கால அமைப்பைக் காட்டுகிறது. "ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து வெளிச்சேரி' எனும் "ஜின சிந்தாமணி சதுர்வேதிமங்கலம்' என வேளச்சேரி குறிப்பிடப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு, தெற்கு என மூன்று வாயில்கள் அமைந்துள்ளன. தெற்கு வாயிலே பழக்கத்தில் உள்ளது. எளிய ஐந்து நிலை ராஜகோபுரம் தெற்கு வாயிலில் அமைந்துள்ளது. கிழக்கு முகமாய் மூலவர் தண்டீசுவரர் காட்சி தருகிறார். இவரே கல்வெட்டுகளில் "திருத்தண்டீஸ்வரமுடைய மகாதேவர்' என அழைக்கப்படுகிறார். தெற்கு நோக்கி நின்ற கோல அம்மனாக, நான்கு கரங்களுடன் அருளாசி வழங்குபவள் அன்னை கருணாம்பிகை. அப்பைய தீட்சிதர், ஸ்ரீசக்கரத்துடன் நிறுவிய தெய்வமே "கருணாம்பிகை'.

இந்தச் சக்கரத்துக்கு பெüர்ணமி, ஆடி வெள்ளிக்கிழமை, பிறந்த நாள், திருமண நாள்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இதன்மூலம் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com