ஆனித் திருமஞ்சன அற்புதம்

ஆண்டை இரண்டாகப் பிரிப்பார்கள். ஒன்று தட்சிணாயனம். மற்றொன்று உத்தராயணம்.
ஆனித் திருமஞ்சன அற்புதம்
Published on
Updated on
1 min read

ஆண்டை இரண்டாகப் பிரிப்பார்கள். ஒன்று தட்சிணாயனம். மற்றொன்று உத்தராயணம். உத்தராயணம் என்பது தேவர்களின் பகல். தட்சிணாயனம் என்பது அவர்களின் இரவு. மனிதர்களுக்கு ஓர் ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள். உத்தராயணம் தை மாதத்தில் ஆரம்பித்து, ஆனி மாதத்தில் நிறைவு பெறும். தட்சிணாயனம் ஆடியில் தொடங்கி, மார்கழியில் நிறைவு பெறும். உத்தராயணத்தில் கடைசி மாதம் ஆனி. தட்சிணாயனத்தின் கடைசி மாதம் மார்கழி. ஆனியில் ஆனித் திருமஞ்சனமும், மார்கழியில் ஆருத்ரா தரிசனமும் உன்னத விழாக்கள். ஆனித் திருமஞ்சனம் சிதம்பரத்தில் விசேஷம்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்த ஆண்டு ஆனித் திருமஞ்சன வைபவம் ஜூன் 24-இல் விழா தொடங்கி, ஜூலை 4-இல் நிறைவடைகிறது. முக்கியமான விழாவான தேரோட்டம் ஜூலை 1 (செவ்வாய்க்கிழமை) நடைபெறும். பஞ்சமூர்த்திகள் ஐந்து தேர்களில் பவனி வருவார்கள். இரவு ராஜசபையில் நடராஜப் பெருமானுக்குச் சிறப்பு லட்சார்ச்சனை நடைபெறும்.

ஜூலை 2}இல் அதிகாலை 3 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெறும். அங்கிருந்து மதியம் 2 மணியளவில் ஆயிரங்கால் மண்டபம் வழியே ஆடிஆடி அற்புத தரிசனம் தந்து, கீழைக் கோபுரத்தில் அருகிலுள்ள பிரதான வாயில் வழியாக படிக்கட்டுகளில் இறங்கி, பக்தர்களுக்கு தரிசனம் தந்து கொண்டே, ஆஸ்தானம் (ஞானாகாச சித்சபை) அடைவார். அங்கு கடாபிஷேகம் மறுநாள் ஜூலை 3 இரவு முத்துப் பல்லக்கு வைபவம் நடைபெறும். பல வகை குளிர்ந்த பொருள்களைக் கொண்டு ஆனித் திருமஞ்சனம் நடைபெறும்.

ஆனித் திருமஞ்சன விழாவை தொடங்கி வைத்தவர் பதஞ்சலி முனிவர். ஆனியில் உத்திர நட்சத்திரத்தில் நடைபெறும் உற்சவம் இது. அன்றைய தினம் சந்திரமெüலீஸ்வரருக்கு ஆறுகால பூஜைகள் சிறப்பாக நடைபெறும். கனக சபையில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இது முடிந்த பின் சிவகாமி அம்மை சமேத நடராஜருக்கு 16 வகை தீபங்கள் கொண்டு ஆராதனை செய்யப்படும்.

"சுமங்கலிகள் இந்த விழாவில் கலந்து கொண்டால் நீடூழி வாழ்வார்கள். கன்னிப்பெண்கள் பங்கேற்றால் விரைவில் அவர்களுக்கு உரிய இடத்தில் திருமணம் கைகூடும்' என்பது ஐதீகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com