தோஷங்கள் போக்கும் தேவர் மலை

நெற்றியில் மூன்றாவது கண் அமைந்துள்ளது..
தோஷங்கள் போக்கும் தேவர் மலை
Published on
Updated on
2 min read

பிரகலாதனுக்கு இடர்களைத் தந்தார் தந்தை இரணியன். ஒருநாள் இரணியன், ""உன் ஹரி எங்கிருக்கிறான்'' எனக் கேட்டு, பதில் இல்லை. ""இந்தத் தூணில் இருக்கின்றானா?'' எனக் கேட்டார் இரணியன். ""தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் எனப் பதில் தந்தார் பிரகலாதன். சினத்தோடு தூணைப் பிளக்க அதனிலிருந்து மனிதனும் சிங்கமும் கொண்ட உருவோடு வெளிவந்து உக்ர நரசிம்மராக அருளினார். இரணியனை வதம் செய்ததால் நரசிம்மருக்கு பிரம்மஹத்தி தோஷம் பீடித்தது.

தன்னிலை மறந்து ஆக்ரோஷப்பட்டு மகா ஜுவாலையுடன் உக்கிரம் தணியாமல் இருந்த பெருமாளைச் சாந்தப்படுத்த தேவர்கள், முனிவர்கள் ஒன்றுசேர்ந்து சிவனிடமும், பிரம்மனிடமும் வேண்டினர். பின்னர், நரசிம்மரை வழிமறித்து தேவர்கள் வணங்கிய இடத்தில் "பிரம்மத் தீர்த்தம்' என்ற தீர்த்தத்தைக் கையால் தோண்டி உண்டாக்கி, அந்த நீரால் அவருக்கு அபிஷேகம் செய்து சாந்தப்படுத்தினர். அவ்வாறு சாந்தப்படுத்தி அமர்ந்த தலமே "தேவர் மலை' எனப்படுகிறது.

மலை எதுவும் கிடையாது. வனத்தில் தேவர்கள் மறித்து வழிபட்டதனால் "தேவர் மறி' என வழங்கத் துவங்கி "தேவர் மலை' என மருவியது. தேவர்களின் தலைவனான நரசிம்மனின் வெப்பம் (கதிர்) குறைந்து சாந்தமுற்ற இடம், தேவரின் கதிர் மறைந்த இடம் "மறி' எனவும் அழைக்கப்பட்டது. இவ்விடத்தில் நரசிம்மரை சாந்தப்படுத்தி இயல்பு நிலைக்கு கொண்டு வந்ததால் "தேவர்மறி'யானது என்றும் கூறுகின்றனர்.

மூலவராக கதிர் நரசிங்க பெருமாள் என்ற பெயரோடு வீராசனத்தில் இடதுகாலை மடித்து வலது கால் பத்மத்தில் தாங்கி அமர்ந்த நிலையில் இடது கை அழைத்து அருளுமாறும் வலது கை அபய முத்திரையிலும் உள்ளது. மேல் இரண்டு கைகள் சங்கு, சக்கரங்கள் உள்ளன. நெற்றியில் மூன்றாவது கண் அமைந்துள்ளது . நெற்றியில் மூன்றாவது கண் இருப்பதால் "உக்கிர நரசிம்மர்' என்று அழைக்கப்படுகிறார் .

இறைவி கமலவல்லித் தாயார் தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ளார். ஆஞ்சநேயர், கருடன் ஷேத்ரபாலர் ஸ்வர்ணாகர்ஷண பைரவர் உப சந்நிதிகளும் உள்ளன, லட்சுமி நாராயண பெருமாள், மகாவிஷ்ணு, கருடாழ்வார், ராமானுஜர், தனித்தனி சந்நிதிகளில் எழுந்தருளியுள்ளனர். வில்வ மரம் தல விருட்சம்.

"கோயிலில் வழிபட்டால் துன்பங்கள், பிரச்னைகள் நீங்கும். 11 பிரதோஷ நாள்களில் வணங்குவதால் வேண்டுதல்கள் நிறைவேறும். கடன் பிரச்னைகள் தீரும். மன அச்சம் அகலும். திருமணப் பாக்கியம் கிடைக்கும். தோஷங்கள் விலகும். தீர்த்தம் தெளித்துக்கொண்டால் சனி தொல்லைகள் அகலும்' என்பது ஐதீகம்.

இந்தப் பகுதியின் சுற்று வட்டாரத்திலிருக்கும் எந்தக் கோயிலிலோ, வீட்டிலோ விசேஷம் என்றால், நரசிம்மரை வழிபட்டு, பிரம்மத் தீர்த்தத்திலிருந்து புனித நீர் சிறிதளவு எடுத்துச் செல்வது வழக்கம் என குறிக்கின்றனர்.

பிரம்ம தீர்த்தம் அருகில் ராமர், சீதாதேவி, லட்சுமணன், அனுமன் சிற்பங்கள் அருகில் உள்ளன. இதனை ஆகாச தீர்த்தம் என்றும் மோட்ச தீர்த்தம் என்றும் அழைக்கின்றனர்.

இக்கோயில் 700 ஆண்டுகளுக்கு முன்பு விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது என்று கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது.

சுவாதி நட்சத்திர நாள்களில் பெருமாள்} கமலவல்லி தாயார் சிறப்புத் திருமஞ்சனம், தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், வைகுண்ட ஏகாதசி உற்சவம், வைகாசி பிரம்மோற்சவம் உள்ளிட்டவை இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கோயிலில் காலை 8.30 முதல் 11 மணி வரையும் மாலை 5 முதல் 6 வரையும் தரிசன நேரமாகும்.

கரூர்} திண்டுக்கல் சாலையில் 30 கி.மீ. தொலைவில் உள்ள பாளையத்தில் இருந்து கிழக்கில் 3 கி.மீ. தொலைவில் குருணி குளத்துப்பட்டி உள்ளது. இதிலிருந்து 2 கி.மீ தொலைவில் தேவர்மலை உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com