நம்மாழ்வாரின் நவகருட சேவை

ஆதியிலேயே தோன்றிய நாதன்' என்பதால் பெருமாளுக்கு "ஆதிநாதன்' என திருநாமம்.
நம்மாழ்வாரின் நவகருட சேவை
Published on
Updated on
2 min read

பிரம்மா ஒருமுறை தவம் செய்ய உரிய இடம் குறித்து திருமாலிடமே வேண்ட அவர், "நான்முகனாகிய உன்னை படைக்கும் முன்பே பூவுலகில் தாமிரவருணி ஆற்றங்கரையில் சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளியுள்ள இடமே ஏற்றது' என்றார். பிரம்மனும் இங்கு தவம் செய்ய விஷ்ணு காட்சியளித்தார். சங்கன் எனும் சங்குகளின் தலைவனும் வழிபட்டார். இதனால் இத்தலம் "குருகூர்' எனப்பட்டது. "ஆதியிலேயே தோன்றிய நாதன்' என்பதால் பெருமாளுக்கு "ஆதிநாதன்' என திருநாமம்.

கோயிலில் கோவிந்த விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலமும் அருளும் மூலவரும், உ ற்சவர் பெருமாளுக்கு "பொலிந்து நின்ற பிரான்' எனவும் திருநாமம். ஆதிநாதவல்லி குருகூர்வல்லி என இரண்டு தாயார்கள் தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

பிரளய காலம் முடிந்தவுடன் தோன்றிய முதல் தலம் என்பதால் "ஆதிஷேத்ரம்' எனப்படுகிறது. லட்சுமணன் ராமாயண காலத்துக்கு சிறு தவறுக்கு ஆள்பட்டதால் ராமனின் கட்டளைப்படி திருபுளி ஆழ்வாராக இங்கு அவதரித்ததால் "சேஷ ஷேத்ரம்' எனப்படுகிறது.

இத்திருக்குருகூரின் மாறன்காரிக்கும் சேரநாட்டு திருவண்பரிசாரத்தின் மன்னன் மகள் உடைய நங்கையும் குழந்தைப் பேறு வேண்டி ஆதிநாதரை வழிபட, பலனாக வைகாசி விசாக நட்சத்திரத்தில் கடக லக்னத்தில், கலி பிறந்த 43}ஆவது நாளில் விஷ்வக்சேனரின் அம்சமாக சடகோபன் என்கிற நம்மாழ்வார் அவதரித்தார். குழந்தையாக அவர் இருந்தபோது, உண்ணாமல், உறங்காமல், இமைக்காமல், தும்மாமல், அழாமல், அசையாமல் இருந்தார். பெற்றோர் குழந்தையை சந்நிதியில் கிடத்தி வேண்ட, குழந்தை தவழ்ந்து சென்று புளிய மரத்தினடியில் அமர்ந்தது. அதன்பின்னர், 16 ஆண்டுகள் குழந்தை மரத்தின் அடியில் அமர்ந்தபடியே யோக நிஷ்டையில் இருந்தது.

வடதிசை யாத்திரை மேற்கொண்டிருந்த மதுரகவி அயோத்தியில் இருந்தபோது, தெற்கு திசையில் ஒளி தெரிவதைக் கண்டு இங்கு வந்தார். மரத்தடியில் சென்று சிறு கல் எறிய நம்மாழ்வார் கண்விழித்தவுடன் மதுரகவி ஆழ்வார் கேட்ட "செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?" என்ற கேள்விக்கு, "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்று பதில் அளித்தார். நம்மாழ்வாரின் ஞானத்தாலும், பக்தியாலும் கவரப்பெற்று அவருக்கே மதுரகவிகள் அடிமை செய்தார்.

பன்னிரு ஆழ்வார்களில் பெருமாளைப் பாடியவர்கள் 11 பேர். மதுரகவிகளோ வைணவ தத்துவப் பேராசான் நம்மாழ்வார் மீது 11 பாசுரங்களைப் பாடியதோடு, எந்தப் பெருமாளையும் பாடாதவர்.

புளியமரப் பொந்தின் அடியில் நம்மாழ்வார் சந்நிதி அமைந்துள்ளது. தாமிரவருணி நீரை காய்ச்ச முதலில் உடையவர் விக்ரகமும், பின்னர் நம்மாழ்வார் விக்ரகமும் வெளிவந்தன.

36 திவ்ய தேச பெருமாள்களும் எழுந்தருளியுள்ளனர். 5,100 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த மரத்தில் பூக்கும், காய்க்கும். ஆனால், பழுக்காது. இரவில் இதன் இலைகள் உறங்குவதில்லை.

குழந்தை பாக்கியம், கல்வி மேன்மை, குழந்தைகளின் சிறு குறைபாடுகள் நீங்க வேண்டி பெருமாளையும் ஆழ்வாரையும் வழிபடுவதும் பழக்கத்தில் உள்ளது. குறைதீர்க்கும் ,பரிகாரமும் மேற்கொள்ளப்படுகிறது.

நான்கு வேதத்தின் சாரமாக திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி திருவாய்மொழி என நான்கு பிரபந்தங்களில் 1296 பாசுரங்களை நம்மாழ்வார் இசைத்துள்ளார். இத்தலத்தினருகில் மங்களாசாசனமான எட்டு திருப்பதிகள் உள்ளதோடு, இதனையும் சேர்த்து "நவதிருப்பதி' என இந்தத் தலம் அழைக்கப்படுகிறது.

ஆழ்வார்திருநகரி ஆதிநாதன் கோயில் 108 வைணவத் திவ்யத் தேசங்களில் ஒன்றாகும்.

நம்மாழ்வார் அவதரித்த வைகாசி விசாகம் பெருந்திரு

விழாவாக நடைபெறுகிறது. இந்த ஆண்டு மே 31}இல் கொடியேற்றம் நடைபெறுகிறது.

அன்றுமுதல் நாள்தோறும் விழாக்கோலம்தான். ஜூன் 4}இல் மங்களாசாசன உற்சவத்தில் ஒன்பது கருட சேவைகள் நடைபெறுகின்றன. அன்று மற்ற 8 பெருமாள்கள் பல்லக்கில் ஆழ்வார்திருநகரி வருவார்கள். ஆதிநாதர் கோயில் முற்றத்தில் நவதிருப்பதி பெருமாள்களுக்கும் திருமஞ்சனம், திருவாராதனம் நடைபெறும். இரவு 9 மணிக்கு பெருமாள் கருட வாகனத்தில் நம்மாழ்வருக்குக் காட்சி தருவார். ஜூன் 8}இல் கோரத திருத்தேரும் , 9}இல் தாமிரவருணியில் தீர்த்தவாரியும் நடைபெறுகின்றன.

"கருவிலே திருவுடையாரான நம்மாழ்வாருடன் நவகருட சேவை தரிசிக்கும் போது, நலமே கிடைக்கும்' என்பது ஐதீகம்.

}இரா.இரகுநாதன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com