முருகன் வழிபட்ட முக்கண்ணன்!

சிவபெருமானின் திருவிளையாடலால் புகழ்பெற்ற தலம்
முருகன் வழிபட்ட முக்கண்ணன்!
Published on
Updated on
2 min read

வளங்கள் ஏராளம் நிறைந்த கொங்கு நாட்டில் நாயன்மார்களால் சிறப்பிக்கப்பட்ட ஏழு தலங்களில் மிகவும் தொன்மை வாய்ந்தது திருமுருகன்பூண்டி. இவ்வூர் முன்பு கந்தமாபுரி, காஞ்சிமாநகர், முல்லைவனம், மாதவனம் என்றும், "மாநகர்' என்றும், அருணகிரிநாதரால் கொங்குராஜபுரம் என்றும் அழைக்கப்பட்டது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்கிற முச்சிறப்பும் பெற்ற இவ்வூர் சிற்பம் செதுக்குவதிலும் சிறந்து விளங்குகிறது.

"திருமுருகன்பூண்டி பெருமாளே' என்று வரும் அருணகிரிநாதர் திருப்புகழும் இவ்வூருக்கு உண்டு. பட்டினத்தார், தண்டபாணி சுவாமிகளும் இத்தலத்தைச் சிறப்பித்துப் பாடியுள்ளனர்.

முருகனே வழிபாடு செய்யும் பேறு பெற்ற முழு முதல் மூர்த்தி ஈஸ்வரனே இங்கு திருமுருகநாதசுவாமி என வழங்கப்படுகிறார். இது பற்றிய புராண வரலாறு உண்டு.

சூரபத்மனின் கொடுமைகளால் மனம் நொந்த தேவர்கள், சிவபெருமானிடம் சென்று தமது துயரங்களை நீக்கக் கோரினர். தந்தையின் ஆணைப்படி முருகன் சூரபத்மனையும் அசுரர்களையும் அழித்து, தேவர்களின் துயர் துடைத்தார். அதனால் அவர் பிரம்மஹத்தி தோஷத்திற்கு ஆளானார்.

இந்நிலையில் அத்தோஷம் நீங்குவதற்காக இத்தலத்திற்கு வந்த திருமுருகன், ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வணங்கினார். முருகனைப் பிடித்த தோஷம் நீங்கியது. முருகனால் பூஜிக்கப்பட்ட சிவபெருமான் திருமுருகநாதர் என்ற சிறப்புப் பெயர் பெற்றார்.

அகத்தியர், மார்க்கண்டேயர், துர்வாசர் ஆகியோர் வழிபட்ட தலம். துர்வாசர் கற்பக உலகிலிருந்து மாதவி மரத்தை (குருக்கத்தி) இங்கு கொண்டு வந்தார் என்பர். "முல்லைத்தாது மணங்கமழ் முருகன்பூண்டி' என்று சுந்தரர் தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சுந்தரர் சேரநாட்டிற்கு வந்து திரும்பும்போது அவருக்கு பொன்னும் பொருளும் கொடுத்து அனுப்பினார் சேரமான் பெருமான் நாயனார். இத்தலத்தின் வழியாக அவர் வரும்போது, ஈசன் அவர்பால்

திருவிளையாடல் ஒன்றை நிகழ்த்தினார்.

சுந்தரர் பாடல்களைக் கேட்கும் பெரும் விருப்பத்தால் வேடுவராய் வில்லேந்திய சிவபெருமான், தமது சிவகணங்களுடன் தோன்றி, அவர் கொண்டு வந்த பொருள்களைப் பறித்துக் கொண்டு மறைந்தார்.

துயரமும், ஏமாற்றமும் அடைந்த சுந்தரர் இறைவனை நோக்கி, ஆள்களை விரட்டி வழிப்பறி செய்யும் இடமாகிய முருகன் பூண்டியில் ஏன் இருக்கிறான் என்று பொருள்பட "கொடுகு வெஞ்சிலை' என்று தொடங்கி, "எல்லைக் காப்பது ஒன்று இல்லையாகில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானாரே' எனக் கேட்டு திருப்பதிகம் பாடினார். பாட்டுக்கு உவந்த எம்பெருமான், பூதகணங்களை ஏவி, கவர்ந்த பொருள்களையெல்லாம் குவிக்கச் செய்து, சுந்தரரை பெரும் மகிழ்ச்சியடையச் செய்தார்.

கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. நுழைவு வாயிலில் வில்லும், அம்பும் ஏந்திய ஈசனின் வேட உருவம், இரண்டு சுந்தரர் உருவங்கள் என மூன்று திருவுருவங்கள் உள்ளன. அடுத்து ஆறுமுகன் சந்நிதி. தெற்கு நோக்கி சிவலிங்கம் ஒன்று உள்ளது. ஆறுமுகக் கடவுள் அழகு மூர்த்தியாக விளங்குகிறார். ஐந்து முகங்கள் முன்பக்கமும், ஆறாவது முகம் பின்பக்கமாகவும் அமைந்துள்ளது. இத்தகைய அமைப்பு அரிது!

மூலஸ்தான மூர்த்தி முருகநாத சுவாமி எனப் போற்றப்படுகிறார். இறைவி ஸ்ரீமுயங்குபூண்முலை நாயகி. அம்பாள் சந்நிதி இறைவனின் இடப்பாகத்தின் வெளிபிரகாரத்தில் அமைந்துள்ளது. இவ்வம்மைக்கு ஆவுடைநாயகி என்ற பெயரும் உண்டு.

பிரகாரத்தில் பைரவர் சந்நிதி முன் ஒரு குழி இருக்கிறது. சுந்தரரிடமிருந்து பறித்த பொருள் இங்கே வைக்கப்பட்டிருந்ததாம். பிரம்ம தாண்டவ நடராஜர் சந்நிதி சிறப்பு பெற்றது. நவகிரகங்கள் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர்.

திருப்பூர் } அவிநாசி சாலையில் சுமார் 5 கி.மீ. தொலைவில் திருமுருகன் பூண்டி ஊர் அமைந்துள்ளது,

- பொ.ஜெயச்சந்திரன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com