

இயற்கை எழில் சூழ்ந்த கல்லாவி என்ற கிராமத்துக்கு அருகே வனப்பகுதியில் கிராம தெய்வமாக எழுந்தருளியுள்ளார் வேடியப்பன். பலருக்குக் குலதெய்வமாகவும் விளங்கும் இவர் ஐயப்பன் அம்சமாகக் கருதப்படுகிறார்.
விவசாய பூமியான இங்கு பல வருடங்களுக்கு முன் வேளாண் குடியினர் காட்டு வள்ளிக்கிழங்கைப் பறிக்கக் கடப்பாரையால் பூமியைக் குத்தியபோது ஓர் இடத்தில் வித்தியாசமான ஒலி கேட்க, அந்த இடத்தைக் கவனமாகக் கையால் தோண்ட, அங்கே ரத்தம் வழிந்த நிலையில் கற்பலகை ஒன்று கிடைத்தது. அதில் வேடன் உருவமும் தென்பட்டது.
அப்போது அங்கிருந்த பெண்மணி ஒருவரை ஆட்கொண்ட இறைவன், ""நான்தான் வேடியப்பன். வேடன் கோலத்தில், ஐயப்பன் அம்சமாக இருக்கும் என்னை வழிபடுவோருக்கு வேண்டும் வரங்களை அருள்வேன்'' என்று அருள்வாக்காகக் கூறினார்.
மகிழ்ந்த அவர்கள் ஊர் மக்களிடம் விஷயத்தைத் தெரிவிக்க, அவர்கள் சிறிய ஓலைக் கொட்டகை அமைத்து, அங்கு சுவாமியை பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினர்.
கிராம மக்களின் சகல கோரிக்கைகளையும் விரைவில் நிறைவேற்றி வைத்ததால் வேடியப்பனின் புகழ் சுற்றுவட்டாரத்தில் பரவத் தொடங்கியது. நாளடைவில் பல சந்நிதிகள் ஏற்படுத்தப்பட்டு ஆலயம் விரிவுபடுத்தப்பட்டது.
இங்கு காவல் தெய்வமாக திருப்பதி முனீஸ்வரர், ராஜ முனீஸ்வரர், ரிஷி முனீஸ்வரர் அருகருகே சுதைத் திருமேனியராக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
வேடியப்பன் மட்டும் தனியே அருள்பாலித்த சமயம், தனக்குக் காவலாக ஒருவர் வேண்டுமென்று திருப்பதி சென்று வேங்கடவனிடம் வேண்டினாராம். அவர்தான் வேடியப்பனுக்குக் காவலாக அங்கிருந்து முனீஸ்வரரை கல்லாவிக்கு அனுப்பி வைத்தாராம். அப்படி வந்து சேர்ந்தவர், "திருப்பதி முனீஸ்வரர்' என்றே அழைக்கப்படுகிறார். முதலில் அவர் மட்டுமே இங்கே காவல் தெய்வமாக இருந்தாராம். பின்னர் ராஜ முனீஸ்வரரும் ரிஷி முனீஸ்வரரும் அவருக்குத் துணையாக வந்து சேர்ந்தார்களாம்.
கருவறையில் வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டு வேடியப்பர் ஜொலிக்கிறார். கவசம் நீக்கிப் பார்த்தால் அவர் தலை உச்சியில் கடப்பாரை பட்ட தழும்பை இன்றும் காணலாம். அருகில் உற்சவர் தரிசனம் தருகிறார்.
வேடியப்பனை வழிபடுவோருக்கு செய்வினைக் கோளாறுகளால் ஏற்பட்ட பாதிப்புகள் விலகி, குடும்பத்தில் நல்லது நடக்கும் என்பது நம்பிக்கை. அப்படிப்பட்ட பாதிப்புக்குள்ளான கிராம மக்கள் வேடியப்பனுக்கு முன் பூ போட்டு உத்தரவு கேட்டு உற்சவ விக்கிரகத்தை சிறப்பு அனுமதியின் பேரில் பெற்று நரி வாகனத்தில் அமர்த்தி மேளதாளம் முழங்க வீட்டிற்கு எடுத்துச் சென்று தினமும் மூன்று வேளை பூஜை செய்வர்.
இந்நிலையில் 15 நாள்களுக்குள் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை வேடியப்பன் ஆட்கொண்டு அந்த வீட்டிலிருந்து துர்சக்திகள் விரட்டப்பட்ட செய்தியை அருள் வாக்காகச் சொல்வார். பின்னர் மீண்டும் மேளதாளம் முழங்க உற்சவர் கோயில் திரும்புவார்.
சுவாமி கோயில் வந்து சேர்ந்ததும் அவருக்கு பொங்கல் வைத்து நன்றி தெரிவித்துவிட்டு கோயிலுக்கு வெளியே உள்ள முனீஸ்வரருக்கும் உரிய காணிக்கைக் கொடுத்து சமையல் செய்து சாப்பிட்டு மனநிறைவோடு வீடு திரும்புவர். இப்படிச் செய்வதால் துர்சக்திகள் விரட்டப்பட்டு அவர்கள் குடும்பத்தில் விரைவில் சுபகாரியங்கள் நடக்கிறதாம்.
முன் மண்டபத்தில் வேடியம்மன் தரிசனம் தருகிறாள். அவரை "முத்து வேடியம்மன்' என்றும் அழைக்கிறார்கள். அவர் வேடியப்பனுக்குச் சகோதரியாம்.
வேடியப்பனை வேண்டிக் கொண்டு குழந்தைப்பேறு பெற்றவர்கள் இப்பகுதியில் ஏராளம். அதற்கு நன்றிக் கடனாக தங்கள் குழந்தைகளுக்கு வேடியப்பன், வேடியம்மன் என்ற பெயர்களைச் சூட்டுகிறார்கள். அவருக்கு சைவ முறைப்படியே எந்த வேண்டுதலும் நிறைவேற்றப்படுகிறது. மொட்டை போடுவது, காது குத்துவது போன்ற நேர்த்திக்கடன்களையும் செய்கிறார்கள்.
விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகன், அனுமன், நாகர், நவகிரகங்களையும் இத்தலத்தில் தரிசிக்கலாம்.
கார்த்திகை மாதத்தில் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து மாலை அணிந்து சபரிமலைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
கோயிலில் குதிரையின் கடிவாளத்தை இருபுறமும் சிப்பாய்கள் பிடித்து இருப்பது போல் சிலை ஒன்று காணப்படுகிறது. இரவு நேரங்களில் வேடியப்பன் அந்தக் குதிரை மீது கிராமத்தை வலம் வந்து மக்களைக் காப்பதாக ஐதீகம். அது தவிர நேர்த்திக்காக வைக்கப்பட்ட வேல், சூலாயுதம், குதிரைச் சிலைகள் ஆங்காங்கே காணப்படுகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் கல்லாவி என்ற கிராமத்தில் வேடியப்பன் கோயில் அமைந்துள்ளது.
மு.வெங்கடேசன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.