சங்கடம் தீர்க்கும் சக்திவேலன்

பக்தர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் சக்திவேலன்
சங்கடம் தீர்க்கும் சக்திவேலன்
Published on
Updated on
1 min read

எண்பது ஆண்டுகளுக்கு முன்னர், பாலம்பாளையத்தைச் சேர்ந்த பாலகனின் கனவில் தோன்றிய பாலமுருகன், தான் குடிகொண்டுள்ள பாலகிரி மலைக்கு வருமாறு அவனிடம் கூறியுள்ளார்.

காலையில் எழுந்தவுடன் இந்த நிகழ்வை அவன் தன் பெற்றோரிடம் கூற, அவர்கள் ஊர் மக்களுடன் பாலகிரி மலையில் பல மணி நேரம் தேடி, ஓரிடத்தில் அமர்ந்துள்ளனர். சற்று நேரத்திலேயே மலையின் உச்சியில் மயில் ஒன்று நின்றிருந்தது. அவர்கள் அங்குச் சென்று பார்த்த

போது, சுயம்பு வடிவிலான முருகன் சிலை ஒன்று காணப்பட்டது. உடனே அங்கே பச்சைப் பந்தல் போட்டு ஊர் மக்கள் அந்த முருகன் சிலையை வழிபடத் துவங்கினர். நாளடைவில் கருவறை அமைத்தனர்.

இங்கு வந்து வேண்டிய பக்தர்கள் வாழ்வில் ஏற்றம் பெற, கோயில் மேலும் விரிவடைந்தது. முருகனுக்குப் புதியதாக அழகிய சிலை வடித்து, பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினர்.

35 ஆண்டுகளுக்கு முன்னர் படிக்கட்டுப் பாதை அமைக்கப்பட்டது. நான்கு சக்கர வாகனங்கள் செல்ல மண் பாதையும் உள்ளது. மலைக்குச் செல்லும் வழியில் அழகிய தோரண வாயில் உள்ளது. அடிவாரத்தில் விநாயகப்பெருமான் வீற்றிருக்க, படிக்கட்டுகள் வழியாக மலையேறும்போது முருகனும், எதிரே

ஒளவையாரும் நின்றுள்ள நிலையில் தரிசனம் தருகின்றனர்.

கிழக்கு நோக்கிய கோயிலின் முன்பு பலிபீடம், கொடிமரம் அமைந்துள்ளன. மகாமண்டபத்தில் பலிபீடமும், அலகில் நாகத்துடன் மயிலும் இருக்க, விநாயகர் தனது இரு பக்கமும் நாகருடன் காட்சிதர, எதிரே மூஷிக வாகனம் உள்ளது. நவநாயகர்கள் சந்நிதி தனியாக உள்ளது.

கருவறையில் பாலகனாகவும், அழகனாகவும் முருகன் காட்சியளிக்கிறார். வேலவன் மீது வேல் சாத்தப்பட்டுள்ளது. இவருக்கு முன்னால் சுயம்பு வடிவ முருகனின் தரிசனமும் கிடைக்கிறது. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, பிரம்மன், துர்கை ஆகியோரை தரிசிக்கலாம். வெளிச் சுற்றில் பைரவர் தெற்கு நோக்கி தனிச் சந்நிதியில் அருள்கிறார்.

திருமணத் தடை உள்ளவர்கள் பங்குனி உத்திர நாளில் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்றால் பலன் உண்டு. ஆறு வளர்பிறை சஷ்டி வழிபாட்டில் வணங்கினால் சங்கடங்கள் அனைத்தும் தீரும், எதிர்ப்புகள் நீங்கும், வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும், வேதனையெல்லாம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தினமும் ஒரு கால பூஜை நடைபெறுகிறது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடும், பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி நாளில் மாலை 6 மணியளவில் சிறப்பு பூஜையும் நடைபெறுகின்றன. விசேஷ நாள்களில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். ஐப்பசி மாதம் கந்த சஷ்டி நாளில் காலை சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் விமரிசையாக நடைபெறும்.

ஈரோடு மாவட்டத்துக்கு உள்பட்ட அந்தியூரிலிருந்து பருவாச்சி வழியாகச் சென்று 10 கி.மீ. தொலைவிலுள்ள பாலம்பாளையம் அடையலாம்.

காரமடை செ.சு.சரவணகுமார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com