அற்புதம் நிகழ்த்தும் சித்தநாதர்!

சித்தநாதர் கோயிலின் மர்மங்கள்: குகையூர் சித்தரின் அஷ்டமாசித்திகள்
அற்புதம் நிகழ்த்தும் சித்தநாதர்!
Published on
Updated on
1 min read

ஐந்து பழம்பெரும் சிவன் கோயில்கள், ஸ்ரீராஜநாராயண விண்ணகரப் பெருமாள் கோயில், வீரபயங்கரம் அய்யனார் கோயில் உள்ளிட்ட கோயில்கள் நிறைந்த பழம்பெரும் ஊர்தான் குகையூர். வசிஷ்டர் நிறுவிய பஞ்ச பூதத் தலங்களில் ஆகாயத் தலமான சொர்ணபுரீஸ்வரர் கோயிலும் இங்குள்ளது.

பஞ்சாட்சரநாதர் கோயிலில் சித்தநாதர் என்ற சித்தர், குகை எனும் யோக மடத்தை நிறுவினார். நிவா என்ற வெள்ளாற்றின் பாறையில் அவர் சிவயோகம் செய்தார். இதனால் இவர் "குகையூர் சித்தர்' என்றும், இவ்வூரை "குகையூர்' என்றும் அழைக்கின்றனர். இந்த ஊர் பேச்சு வழக்கில் "கூகையூர்' எனப்படுகிறது.

பஞ்சாட்சரநாதர் கோயிலின் தென் மேற்கு மூலையில் சித்தநாதர் சந்நிதி அமைந்துள்ளது. இங்கு சிவன் பிரதான தெய்வமாக விளங்கினாலும், "சித்தநாதர் கோயில்' என்றே அழைக்கப்படுகிறது. சித்தரின் காலம் அறிய முடியாததாக உள்ளது.

குறுநில மன்னனான மாலாங்கனையும், அவரது மனைவியையும் இளமையாக மாற்றி, இல்லற வாழ்வில் அவர்களை ஒழுகச் செய்து புத்திரப் பேற்றை அருளியவர், திருநீற்றை வழங்கி பக்தர்களின் துன்பத்தை நீக்கியவர், கல் யானைக்குக் கரும்பைக் கொடுத்துத் தின்னச் செய்தவர், பார்வை இல்லாதோருக்குக் கண்ணொளி வழங்கியவர், வளைந்த முதுகை நிமிரச் செய்தவர், திருமணத் தடையை நீக்கியவர் உள்ளிட்ட சிறப்புகளைக் கொண்ட குகையூர் சித்தரின் அஷ்டமாசித்திகள் எண்ணற்றவை என "குகையூர் சித்தர் பதிகம்' கூறுகிறது.

இத்தலம் குறித்து 130 ஆண்டுகளுக்கு முன்பு ஆத்தூரை அடுத்துள்ள ஆனையாம்பட்டி அப்பாவு சுவாமிகள் இயற்றிய 1,531 பாடல்கள் கொண்ட "குகையூர் தலபுராணம்' ஓலைச் சுவடியில் உள்ளதை பேராசிரியர் அ. சிவபெருமான் கண்டெடுத்து, இலக்கண முறைப்படி சீர் பிரித்து அச்சிட முயன்று வருகிறார்.

கோயில் விழாக்கள், சித்திரை மாதத்தில் மூல நட்சத்திரத்தில் சித்தரின் குருபூஜையை மன்னன் மாலாங்கனின் பரம்பரையினரான சித்தநாதீஸ்வரர் ஆதீனத்தாருடன் ஊர் மக்கள் ஒன்றுகூடி செய்து வருகின்றனர். சித்தநாதரை வேண்டிக்கொண்டு பலன் பெற்றவர்கள் அவர் சந்நிதியை தங்கள் வேண்டுதலுக்கேற்ப 108, 48 முறை சுற்றி வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.

கள்ளக்குறிச்சியில் இருந்து 54 கி.மீ. தொலைவிலும், சின்ன சேலத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவிலும் குகையூர் உள்ளது.

} பனையபுரம் அதியமான்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com