

அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணிக்கு மேற்கே 8 கி.மீ. தொலைவில், தாடூரில் யோகீஸ்வரி சமேதராக கடலீஸ்வர சுவாமி கோயில் கொண்டுள்ளார். கடலில் தோன்றிய ஆலகால விஷத்தை உண்ட இறைவன் "கடலீஸ்வரர்' என அழைக்கப்படு
கிறார். அவர் சிவதாண்டவம் புரிந்த இந்த இடம் தாண்டவபுரம் என வழங்கப்பட்டு, அதுவே பின்னர் "தாடூர்' ஆனது.
பல்லவர்களின் கடைசி மன்னரான அபராஜிதனால் கட்டப்பட்ட கோயில். அவரது மகன் பாம்பு தீண்டி உயிருக்குப் போராடிய நேரத்தில், அவரது கனவில் சிவன் தோன்றி பரிகாரங்களைக் கூறி மறைந்தார். மன்னர் அவற்றை நிறைவேற்றியதால், அவரது மகன் உயிர் பிழைத்தார். இதனால் மன்னர் ராமேசுவரம் சென்று நீராடுவதற்கு மூழ்கியபோது சிவன் லிங்க வடிவில் கடலில் தோன்றியதால், தாடூர் இறைவன் "கடலீஸ்வரர்' என்ற பெயர் பெற்றதாக சுவாமி திருநாமம் குறித்து இன்னொரு காரணமும் கூறப்படுகிறது.
1,500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கடலீஸ்வரர் கோயில் அந்நியப் படையெடுப்பால் சிதிலமடைந்தது. பிற்காலத்தில் மார்த்தாண்ட மன்னரால் கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இறைவி யோகீஸ்வரி தேவி, நவகிரகங்கள், கணபதி, வள்ளி} தெய்வானை சமேத முருகன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்கை, சண்டிகேஸ்வரர், நாகதேவதை உள்ளிட்ட சந்நிதிகள் உள்ளன. ஈசான்ய மூலையில் லிங்கேஷ்வரர் பெரிய நீர்த்தொட்டியில் வைக்கப்பட்டுள்ளது சிறப்பு.
மழை பொய்த்த காலங்களில் சிவனுக்கு 101 குடம் அல்லது சங்கினால் அபிஷேகம் செய்த சில நாள்களிலேயே மழை பொழிந்துள்ள அதிசயமும் இத்தலத்தில் நிகழ்ந்துள்ளது.
திருவண்ணாமலை கோயிலை ஒரு முறை சுற்றி வந்தால் கிடைக்கும் பலன் கடலீஸ்வரர் கோயிலை 27 முறை சுற்றிவந்தால் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கோயிலின் ஈசான்ய மூலையில் தீர்த்தம் உள்ளது. கோயில் மண்டபத்தில் சந்திரன், சூரியன், பாம்பு, பல்லி, தேள் சின்னங்கள் இருப்பதால், விஷ ஜந்துக்களின் கடிகளில் இருந்து விடுபடும் பரிகாரத் தலமிது. இங்கு சூரிய பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்தால், கிரக தோஷங்கள் விலகிவிடுமாம்.
இத்தல வழிபாடு திருமணத் தடை, நோய்களை நீக்குகிறது. ஞாயிறுதோறும் மாலை 4 மணிக்கு நடைபெறும் அன்னாபிஷேகத்தில் பங்கேற்று பிரசாதத்தைச் சாப்பிட , குழந்தைப்பேறு கிடைப்பதாக நம்பிக்கை. இந்தக் கோயிலில் தற்போது திருப்பணிகள் நிறைவு பெற்று, டிசம்பர் 1 (திங்கள்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள்ளாக மகா கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.