

ஊழிக்காலம் எனப்படும் மகாபிரளயத்துக்குப் பிறகு பிரம்மன் தனது படைப்புத் தொழிலைத் தொடங்குவதற்காக தவம் செய்தது, பிரம்மனது வேண்டுதலுக்கிணங்க சிவன் தந்த அமுதக்கலசமானது தங்கியது, பிரளய காலத்து வெள்ளத்தில் மிதந்து வந்த கும்பத்தின் மூக்கின் வழியே அமுதமானது பரவிய காரணத்தினால் "குடமூக்கு' என்று பெயர் பெற்றது எனப் பலவாறாகப் போற்றப்படும் தலம், கும்பகோணம்.
இறைவனின் சிறப்பு: ஆதியும் அந்தமும் இல்லாத அநாதியான இறைவன் சிருஷ்டியின் தொடக்கமாக கும்பத்திலிருந்து தன்னை வெளிப்படுத்திக் கொண்டதால் இத்தல இறைவன் "கும்பேஸ்வரர்', " ஆதிகும்பேஸ்வரர்' என்றும், அமுதத்திலிருந்து உதித்ததால் "அமுதீசர்' என்றும் போற்றப்படுகிறார். இவரது திருமேனி மணலால் ஆனது. இந்த பாணலிங்கத்தின் உச்சி கும்பத்தின் வாய் போன்று அமைந்திருக்கிறது. இந்த பாணத்தைக் கவசமிட்டு மூடியிருப்பர். இதற்கு திருமஞ்சனம் நிகழ்த்தப்படுவது இல்லை. புனுகுச் சட்டம் சாத்தப் பெறுவதே வழமை. இத்தகு லிங்கங்களை வணங்குவதால் அபாரமான ஞானமும் கல்வியும், முடிவில் மோட்சமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இறைவியின் சிறப்பு: மங்களேஸ்வரி, மங்கள நாயகி, வளர்மங்கை என்றும், சக்தி பீடங்களில் ஆதிபீடம் என்ற சிறப்புடைய மந்திர பீடத்தில் உறைந்து அருளுவதால் மந்திரபீடேஸ்வரி என்றும் பல்வேறு திருநாமங்களால் இறைவி போற்றப்படுகிறாள். ஆதிசிவன் தம்முடைய சரிபாதி உரிமையுடைய 36,000 கோடி மந்திர சக்திகளையும் இத்தலத்தில் அம்பாளுக்கு அருளியிருக்கிறார். அத்துடன் தமக்கும் உரிய சக்திகளுடன் சேர்த்து மொத்தம் 72,000 மந்திர சக்திகளுக்கும் ஏகாதிபதியாக விளங்குகிறாள் மங்களாம்பிகை.
இத்தலத்து அம்மை கேசாதி பாதம் வரை 51 சக்தி பாகங்களாகக் காட்சியளிப்பது வேறெங்கிலும் காண இயலாத சிறப்பு. இவ்வம்மையை அந்தி நேரத்தில் தரிசனம் செய்வதால் அனைத்து தோஷங்களும் நீங்கி விடும். ஏவல், திருஷ்டி போன்ற எதிர்மறை வினைகள் அழிந்து, சகல நன்மைகளும் உண்டாகும்; இவரை தரிசித்த கணத்திலேயே சகல பாவங்களும், நோய்களும் நீங்கும்.
"வெள்ளிக்கிழமைகளில் இவ்வன்னைக்கு செவ்வரளி மாலை சாத்தி, குங்குமத்தால் அர்ச்சனை செய்து வணங்கினால் நினைத்த காரியம் நிறைவேறிடும்' என்கிறார்கள். கிரக தோஷத்துக்கு ஆட்பட்டவர்கள் இந்த அன்னையை வழிபட்டால், தோஷம் நீங்கப்பெறுவர்.
பிற சிறப்புகள்: இந்திரன், அஷ்டதிக்பாலகர்கள், காமதேனு, கார்த்தவீர்யார்ஜுனன், அகத்தியர், காச்யபர் உள்ளிட்ட பலர் இங்கு பூசித்து பேறு பெற்றுள்ளனர். இவ்வாலயத்தில் பல சந்நிதிகள் கோவிந்த தீட்சிதர் காலத்தில் கட்டப்பெற்றவை. மகா சித்தரான அகத்தியர் இங்கு ஐக்கியமாகி இருப்பதால்தான் அதீதமான சூட்சும அதிர்வுகளை இங்கு உணர முடிகிறது. இந்த கும்பேஸ்வரர் ஆலயத்தில் கூடுதலாக பைரவர், மூன்று திரு வடிவங்களுடன் கூடிய ஜ்வரஹரேஸ்வரர், சாஸ்தா முதலான திருவடிவங்கள் பிரசித்தி பெற்றவை.
இவ்வாலயத்தை மையமாகக் கொண்டு சப்த ஸ்தான விழா நடத்தப் பெறுவது குறிப்பிடத்தக்கது. அப்பர், திருஞான சம்பந்தர் இருவராலும் தேவாரப் பாடல் பெற்ற சிறப்புடைய 89}ஆவது காவிரிக்கரைத் தலம். இங்கு எழுந்தருளியிருக்கும் விசேஷமான கார்த்திகேய சுவாமியை அருணகிரிநாதர் பாடிப் பரவியுள்ளார். வன்னியும் வில்வமும் தல விருட்சங்கள்.
நவ நதிகளும் நீராடிடும் சிறப்புடைய மாசிமக புனித நீராடலுக்குப் பெயர் பெற்ற தலம். கோயில் நகரமான கும்பகோணத்தின் தலைமை சிவராஜ தானியாக விளங்கிடும் இந்த கும்பேஸ்வரர் கோயிலின் ராஜகோபுரம் 128 அடி உயரமுடையது. இவ்வாலயத்தை மாசி மாதத்தில் வழிபட்டால் அஸ்வமேத யாகம் செய்த புண்ணியமும் , ஆவணி மாதத்தில் வழிபட்டால் தீர்க்க செüமாங்கல்யமும் கிடைக்கும் என்கின்றன தெய்வநூல்கள். சோழர்கள் காலத்தில் பல சிறப்புகளுடன் ஏற்றம் பெற்று விளங்கியிருந்த கோயில்.
பல சிறப்புகள் கொண்ட இக்கோயிலுக்குத் திருப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில், டிசம்பர் 1ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
சுஜாதா மாலி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.