பிரச்னைகளை தீர்க்கும் பெருமாள்

திருமணத் தடைகள் நீங்கி, மன அமைதி தரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தலம்..
பிரச்னைகளை தீர்க்கும் பெருமாள்
Updated on
1 min read

சோழர் கால கோட்டத்தில் ஒன்றான, வெண்குன்றக் கோட்டத்து மருதாடு நாட்டு கொடுங்காலூருக்கு உள்பட்டது கீழ்க்கொடுங்காலூர். கொடுங்காலூருக்குக் கிழக்குத் திசையில் இருப்பதாலும், அடர்ந்த கால்வாய்களை உடைய ஊர் என்பதாலும், இதைக் கீழ்க்கொடுங்காலூர் என்று குறிப்பிடுகிறார்கள். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வந்தவாசிக்கு அருகே இந்தக் கிராமம் உள்ளது.

கிராமத்தின் நடுநாயகமாக கரியமாணிக்கப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இது 600 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

விஜயநகர ஆட்சிக் காலத்தில் வைணவர்களுக்கு அதிக செல்வாக்கு இருந்ததாகவும், அவர்கள் அதிக அளவில் வாழ்ந்த பகுதியாக இது இருந்திருக்கலாம் என்றும், இக்கோயில் பாண்டியர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டு இருக்கலாம் என்றும், பின்னர் பல்லவர்கள், சோழர்கள் ஆட்சியில் கோயில் புனரமைப்பு செய்யப்பட்டிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

மூலவர் கரியமாணிக்கப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காட்சியளிக்கிறார். உற்சவர் வரதராஜ பெருமாள். லட்சுமி ஹயக்ரீவர், கல்யாண சீனிவாசப் பெருமாள், யோக நரசிம்மர், விஷ்வக்சேனர், அனுமன், ராமானுஜருக்கும் சந்நிதிகள் உள்ளன.

சிறந்த பரிகாரத் தலம். இக்கோயில் வழிபாட்டால் திருமணத் தடை அகலும், குழந்தைப் பாக்கியம் கிட்டும், சொத்து } வீடு பிரச்னை முடிவுக்கு வரும், மனக் குழப்பம் நீங்கும். மலைபோன்ற பிரச்னைகளும், சூரியனைக் கண்ட பனிபோல் விலகும் என்கின்றனர். நெய் தீபம் ஏற்றி இத்தலத்தில் பிரார்த்தனை செய்தாலே போதும், உடல் ஆரோக்கியம் மேம்படும்.

பக்தர்கள் நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் இப்பெருமாள் நிறைவேற்றுகிறார். "கருதியதை முடிப்பார் கரியமாணிக்கப்பெருமாள்' என்பதே பக்தர்களின் நம்பிக்கை. பெருமாளுக்கு இரு தேங்காய்களை உடைப்பதாக பக்தர்கள் வேண்டிக் கொள்வர். வேண்டுதல் நிறைவேறியதும் தேங்காய்களை உடைத்து நன்றியைக் காணிக்கையாகச் செலுத்துகிறார்கள்.

2007}இல் சம்ப்ரோக்ஷணம் நடைபெற்ற இந்தக் கோயிலில் தேசிகர் சந்நிதியும், முகப்பு மண்டபமும் புதியதாக நிர்மாணிக்கப்பட்டு, டிச. 1 (திங்கள்கிழமை) காலை 8.30 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற இருக்கிறது.

ஜி.கணேஷ்கிரி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com