
இராஜராஜ விண்ணகரம், ஜெயங்கொண்ட சோழமண்டலத்து இராஜராஜ சதுர்வேதி மங்கலம் என்றெல்லாம் அக்காலத்தில் அழைக்கப்பட்ட தலம், எண்ணாயிரம். முதலாம் இராஜேந்திரன், முதலாம் இராஜாதி ராஜன், முதலாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜன், மூன்றாம் குலோத்துங்கன் என சோழமன்னர்கள் போற்றிப் பாதுகாத்த ஊர். இங்குள்ள அழகிய நரசிம்மர் கோயில் சிறப்பு வாய்ந்தது. வேதமும் உயர்கல்வியும் பயில அக்காலத்திலேயே சோழ மன்னர்கள் இங்கு கல்லூரிகளை அமைத்துள்ளனர். கவி காளமேகப் புலவர் பிறந்த ஊர்.
சோழர்கால கட்டடக் கலைப்பாணியில் மிளிரும் நரசிம்மர் கோயில் தூண்களில் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதற்கும் மேலாக, மழைநீர் வடிகால்கள், மழைநீர் சேமிப்பு உள்ளிட்ட சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.
சோழப் பேரரசில் எண்ணற்ற கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வந்துள்ளன. குறிப்பாக, எண்ணாயிரத்தில் உயர்கல்வி பயிலவும், வேதம் கற்கவும் கல்லூரிகள் பல இருந்துள்ளதை கல்வெட்டுச் சான்றுகள் கூறுகின்றன. முதலாம் இராஜேந்திர சோழன் காலத்திய கல்வெட்டு இதனை விரிவாகக் கூறுகிறது.
கல்லூரிக்கு 300 காணி நிலம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கு உதவித்தொகை, பயிற்றுவிக்கும் பேராசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அவர்கள் கற்பிக்கும் பாடத்திற்கு ஏற்றபடி ஊதியமும் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு திருப்பதிகம், திருவாய்மொழி முதலானவை கற்பிக்கப்பட்டன. 270 இளநிலை மாணவர்கள், 70 முதுநிலை மாணவர்கள், 14 ஆசிரியர்கள் இருந்ததாகக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. வேத பேராசிரியர்களுக்கு கூடுதல் ஊதியமாக நாளொன்றுக்கு ஒன்றரைக் கலம் நெல் வழங்கப்பட்டது.
சமணம் கோலோச்சிய காலத்தில், ஏராளமான சமணர்கள் இவ்வூரில் வாழ்ந்துள்ளனர். இதே போல, எட்டாயிரம் சமணர்கள் ஓலைச்சுவடியில் எழுதிய பாடல்களைக் கைப்பற்றிய மன்னன், அவற்றை ஆற்றில் எறிந்த போது, நானூறு மட்டுமே எதிர்நீச்சல் போட்டு நிற்க, அதுவே நானூறு பாடல்கள் கொண்ட நாலடியார் ஆனதாகக் கூறப்படுகிறது.
ஊரின் மையப்பகுதியில் பிரம்மாண்டமான கருங்கல் கட்டுமானமாகக் கோயில் உயர்ந்து நிற்கின்றது. எதிரே பலிபீடம், கொடிமரத்திற்கான கருங்கல் பீடங்கள் காட்சி தருகின்றன. முன்மண்டபத்தில் புடைப்புச் சிற்பங்கள் அமைந்துள்ளன. கருவறைக்கு முன்பு தெற்கு நோக்கிய வராகர் பிரம்மாண்ட வடிவில் காட்சிதர, அவரின் அருகே லஷ்மி காட்சி தருகின்றார்.
கருவறையில் கேட்ட வரத்தைக் கேட்டவுடனே அருளும் அழகிய ஸ்ரீநரசிம்மர், மடியில் மகாலஷ்மியைத் தாங்கி புன்னகையுடன் காட்சியருளுவது நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது. இவருக்கு பால் அபிஷேகம் செய்து, பானகம் நிவேதனம் செய்தால் தீராத கடன் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை. அருகே வரதராஜப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் அருள் வழங்குகின்றார். கருவறை விமானம் மிகவும் உயரமாக அமைந்துள்ளது. சோழர், விஜயநகர மன்னர்கள் போற்றி வணங்கிய கோயில்.
காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணியிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும் இக்கோயிலை இந்தியத் தொல்லியல் துறை நிர்வகித்து வருகிறது.
விழுப்புரம் }செஞ்சி நெடுஞ்சாலையில் உள்ளது நேமூர். அங்கிருந்து 7 கி.மீ. தொலைவில் எண்ணாயிரம் திருத்தலம் அமைந்துள்ளது.
}பனையபுரம் அதியமான்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.