
சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருத்தலங்களுள் ஒன்று, திருவூர்.
திரு என்பது செல்வத்தைக் குறிக்கும். ஊர்ப்பெயரின் முன் திரு என்ற அடைமொழி அமைந்திருப்பதைப் பல இடங்களில் காணலாம். இங்கோ செல்வமே ஊரின் பெயராக இருப்பதால், ஒரு காலத்தில் செல்வச்செழிப்போடு இவ்வூர் திகழ்ந்திருப்பதை அறிய முடிகிறது.
இங்குள்ள லிங்கத்தை ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மகரிஷி ரிஷ்ய சிருங்கர் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்பதால், அவர் ரிஷ்ய சிருங்கேசுவரர் என்று வழங்கப்பட்டு நாளடைவில் சிங்காண்டீசுவரர் என்று மருவி அழைக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைமையான இக்கோயில் சோழ, பல்லவ, பிற்காலப் பாண்டிய மற்றும் விஜயநகர மன்னர்களால் பராமரிக்கப்பட்ட பெருமையுடையது.
தெற்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரம் வழியாக நுழைந்து கருவறையை அடைகிறோம்.
அங்கே மூலவர் சிங்காண்டீசுவரர் லிங்க ரூபமாய் அருள்கிறார். ஆவுடையார் சதுர வடிவமாகவும், பாணலிங்கம் எப்பொழுதும் குளிர்ச்சிப் பொருந்திய தன்மையுடையதாகவும் விளங்குகிறது. மூலவருக்கு வலப்புறம் பாலவிநாயகரும் இடப்புறம் பாலமுருகனும் அர்த்தமண்டபத்தில் வீற்றிருக்கின்றனர்.
அவர்களை தரிசித்து விட்டு தெற்கு நோக்கிய கருவறையில் அருள்பாலிக்கும் உத்பலாம்பாளை தரிசிக்கிறோம். சோழர் காலப் பாணியில் கலை அம்சத்துடன் அகிலாண்ட நாயகியாக அனுதினமும் நம்மை நாடிவரும் பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் தேவியாகக் காட்சி தருகிறாள் அன்னை.
மூலவர் சந்நிதிக்கு வெளியே மகாமண்டபத்தில் நடராஜர் } சிவகாமி அம்மை, நந்தீஸ்வரர் } சுயசாம்பிகை ஆகியோர் சுதைச்சிற்பங்களாகவும், அருகில் லிங்க வடிவில் ஆதி சிங்காண்டீசுவரரும் அருள்கிறார்கள். மகாமண்டபத்தின் மேற்புறத்தில் எண் கோண வடிவத்தை நான்குத் தூண்கள் தாங்கிக் கொண்டிருக்கின்றன.
ராமர் வழிபட்ட ராமேசுவரம், நாகர் வழிபட்ட திருநாகேஸ்வரம், யானை வழிபட்ட ஜம்புகேஸ்வரம் மற்றும் ஜம்பு மாமுனிவர் வழிபட்ட ஜம்புகேஸ்வரம் இவை அனைத்தும் ஒரே தூணில் புடைப்புச் சிற்பங்களாக நிறுத்தியும், மற்ற தூண்களில் மாணிக்கவாசகர், புத்தி பலம் தரும் ஆஞ்சநேயர், வீரஆஞ்சநேயர், மகாலட்சுமி, காமாட்சி அம்மை, விஷ்ணு முதலான தெய்வங்கள் சிவனை வணங்கும் காட்சிகளையும் படைத்துள்ளனர்.
இந்த நான்குத் தூண்களையும் வலம் வந்து வழிபட்டு மகாமண்டபத்தில் அமர்ந்து சிவனையும் சக்தியும் ஒருசேர தரிசித்து தியானித்தால் ஞானம் பெருகும், வாழ்வில் வளம் அனைத்தும் தேடி வரும், எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் என்கின்றனர். மணிமண்டபத் தூண்களில் நர்த்தன விநாயகர், முருகன், துர்கை, துவாரபாலர்கள் காணப்படுகின்றனர்.
பிரகார வலம் வரும்போது அத்திமுக விநாயகரை தனி சந்நிதியில் தரிசிக்கிறோம். அடுத்து வள்ளி, தெய்வானை சமேத வள்ளல் குமரன் தனியாகக் கோயில் கொண்டுள்ளார். அர்த்தமண்டபத்தில் வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் கண்ணாடியில் ஆறுமுகக் கடவுளை தரிசித்த காட்சி அழகுற அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலைச் சுற்றியுள்ள மாடங்களில் அறுபடை வீடுகளில் அமைந்திருக்கும் மூலவர்களின் உருவங்கள் நிறுத்தப்பட்டு ஒரே நேரத்தில் அறுபடை வீடுகளையும் தரிசிக்கும் அற்புதமான காட்சியை நம் கண் முன்னே கொண்டு வந்துள்ளனர்.
கோயிலின் காவல் தெய்வம் சண்டிகேஸ்வரர். மூர்த்தி சிறியவர் என்றாலும், இவருடைய கீர்த்தி பெரியது. வடமேற்கு மூலையில் தலவிருட்சமான வில்வ மரத்தின் கீழ் விசேஷமாக அமைந்துள்ளார் நாகேஸ்வரர். அடுத்து சப்தகன்னியர், காலபைரவர், சூரியன், சந்திரன் ஆகியோரையும் தரிசிக்கலாம்.
மகா சிவராத்திரி உள்பட சிவாலயத்தில் நடைபெறும் அனைத்து விழாக்களும் இங்கு நடைபெறுகின்றன. பிரதோஷம் வெகு பிரசித்தம். திருமணம் கூடி வராத பெண்கள் பிரதோஷ நாளன்று கோயிலில் தரப்படும் கலசத்தை ஏந்தியவாறு மூன்று முறை ஆலய வலம் வந்து, அதை பிரதோஷ நந்திக்கு அபிஷேகம் செய்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடி வருகிறதாம். மேலும் குழந்தை பாக்கியம், கல்வி, வேலைவாய்ப்பு, செல்வ வளம், உடல் நலம் போன்றவற்றிற்காகவும் இந்த பிரார்த்தனை செய்யப்படுகிறது.
சென்னை பூந்தமல்லியில் இருந்து திருத்தணி செல்லும் பேருந்து மூலமாக அரன்வாயல் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, திருவூரை அடையலாம். சென்னை } அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் செவ்வாய்பேட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் இத்தலம் உள்ளது.
மு. வெங்கடேசன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.