பள்ளிகொண்டா ரங்கநாதர்!

பிரம்மாவின் யாகத்தை காத்த ரங்கநாதர்: பள்ளிகொண்டா திருக்கோயிலின் வரலாறு
பள்ளிகொண்டா ரங்கநாதர்!
Published on
Updated on
2 min read

தென்தமிழகத்தில் திருவரங்கம் போல, வடதமிழகத்தில் புகழ்பெற்று விளங்குகிறது, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் திருக்கோயில்.

இத்தலம் பற்றி பிரம்மாண்ட புராணத்திலும், காஞ்சி மகாத்மியத்திலும், ஹஸ்தகிரி மகாத்மியத்திலும் சொல்லப்பட்டுள்ளது.

ஒருசமயம் பள்ளிகொண்டா ரங்கநாதரை தரிசித்து மகிழ்ந்த பிரம்மா, யாகம் செய்ய விரும்பினார். முடிவில் வேறு இடங்களில் நூறு யாகங்கள் செய்வதைவிட, சத்யவிரத úக்ஷத்திரம் எனும் காஞ்சிபுரத்தில் செய்வதே சிறந்தது எனத் தீர்மானித்தார்.

இந்நிலையில், சரஸ்வதிக்கும் லட்சுமிக்கும் தங்களுள் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. இதற்கான பஞ்சாயத்து பிரம்மாவிடம் வந்தது. பிரம்மா தன் மனைவி என்றும் பாராமல், லட்சுமியே உயர்ந்தவர் என்று கூறினார்.

இதனால் கோபம் கொண்ட சரஸ்வதி அங்கிருந்து அகன்று, மேற்கேயுள்ள நந்தி துர்க்க மலைக்குச் சென்றார். காஞ்சிபுரத்தில் யாகம் செய்ய பிரம்மா தம்பதி சமேதராய் வரவேண்டியிருந்தது. ஆனால், சரஸ்வதி அதற்குச் சம்மதிக்கவில்லை. எனவே, சாவித்திரி என்ற ஒரு பெண்ணை உருவாக்கி, அவளை பிரம்மா மணம்புரிந்து, யாகத்தினைத் தொடங்கினார். இதைக் கேள்வியுற்ற சரஸ்வதி, பெரும் வெள்ளமாகப் பெருக்கெடுத்து, ஷீரநதி எனும் பாலாற்றில் பாய்ந்து, யாகத்தை அழிக்க முற்பட்டார். இதையறிந்த பிரம்மா ஸ்ரீமன் நாராயணனிடம் தஞ்சம் புகுந்தார். அதற்குச் செவிசாய்த்த எம்பெருமாள் பள்ளிகொண்டா, திருப்பாற்கடல், காஞ்சிபுரம் என மூன்று இடங்களில் பாலாற்றை வழிமறித்து, வெள்ளத்தைத் தடுத்துக் காத்தார்.

அந்த வகையில் முதல் இடமாகத் திகழ்வது பள்ளிகொண்டா. இறைவன் இங்கே பள்ளிகொண்டதால், இவ்விடம் பள்ளிகொண்டான் என வழங்கப்பட்டு, இன்று பள்ளிகொண்டாவாக அழைக்கப்படுகின்றது.

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாளை ஸ்ரீவில்லிபுத்தூரில் மணம் புரிந்ததுபோல, பள்ளிகொண்டாவில் சம்பாதி முனிவர் விருப்பப்படி, செண்பகவல்லி என்ற பக்தையை பங்குனி உத்திர நாளன்று ரங்கநாதர் மணம்புரிந்து அருளியதாக தலபுராணம் கூறுகின்றது.

இதுபோல, திரேதாயுகத்தில் தேவேந்திரன் தன் மனைவி இந்திராணியோடு வனத்தில் உலாவிக் கொண்டிருந்தபோது, கிளி வடிவில் கூடியிருந்த ரிஷிகளைக் கொன்ற பாவத்தால், இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. ஓராண்டுக்காலம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதரை தரிசித்து, தனது

பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்றதாக தலபுராணம் கூறுகிறது.

பாலாற்றின் தென்கரையில், கிழக்கு முகமாய் கோயில் அமைந்துள்ளது. ஐந்து நிலை ராஜகோபுரம், அதன் எதிரில் நான்குகால் ஊஞ்சல் மண்டபம், இடதுபுறம் வியாசர் புஷ்கரணி என அனைத்தும் ஒருங்கே அமைந்துள்ளன.

வடக்கே பள்ளிகொண்டுள்ள இந்த பெருமாளை, உத்திர (வடக்கு) ரங்கநாதர் என்றும், இவர் சின்னஞ்சிறு வடிவில் சயனித்துள்ளதால் பாலரங்கநாதன் என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர். மகாமண்டபத்தில் கஸ்தூரிரங்கன் எனும் சோட்டா ரங்கநாதர் வடிவமும் தனியே அமைந்துள்ளது. இவரே அன்னியப் படையெடுப்பின் போது மூலவரைக் காத்தவர் என்பது வரலாறு. தாயார் ரங்கநாயகி தனிசந்நிதியில் நான்கு கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் அழகுற அருளாசி வழங்குகிறார்.

இத்தலம் பதினாறு செல்வங்களையும் அள்ளித் தரும் தலமாகப் போற்றப்படுகிறது. அதிலும் குறிப்பாக திருமணப்பேறு வழங்கும் தலமாகத் திகழ்வதால், இங்கே திருமண வைபவங்கள் அதிகளவில் நடைபெறுகின்றன.

தலமரம் பாதிரி மற்றும் பாரிஜாதமாகும். தீர்த்தம், வியாசர் புஷ்கரணி எனும் திருக்குளமாகும். கோயிலின் அருகே ஓடும் நதி, ஷீர நதி எனும் பாலாறாகும்.

சித்திரையில் பத்து நாள் பிரம்மோற்சவப் பெருவிழா நடைபெறுகிறது. இது தவிர, வைணவ ஆலய விழாக்கள் அனைத்தும் வெகுவிமரிசையாக நடைபெறுகின்றன.

வேலூருக்கு மேற்கே 23 கி.மீ. தொலைவிலும் குடியாத்தத்திற்குத் தென்கிழக்கே 9 கி.மீ. தொலைவிலும் பாலாற்றின் தென்கரையில் பள்ளிகொண்டா அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com