
நொய்யல் ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ள திருத்தலம், பேரூர். மேலைச் சிதம்பரம், காஞ்சிவாய்ப் பேரூர், இனாம் பேரூர், அரசம்பலம் எனப் பெயர்கள் கொண்ட இத்தலம் கோவை மாநகரிலிருந்து தென்மேற்கே, சிறுவாணி}வெள்ளியங்கிரி செல்லும் நெடுஞ்சாலையில் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
1970-71 ஆம் ஆண்டில் அகழாய்வுப் பணி மேற்கொண்டு, பல்வேறு வகையான தொல்லியல் சான்றுகளையும்; பேரூர் நாகரிகம், பண்பாடு கி.பி. முதலாம் நூற்றாண்டிலிருந்து 9}ஆம் நூற்றாண்டு வரை தொடர்ச்சியாக இருந்துள்ளதையும் கண்டுபிடித்துள்ளனர். பல்வேறு காலகட்டங்களில் ஆட்சிபுரிந்த மன்னர்களின் கல்வெட்டுகள் இங்குள்ளன.
பல்வேறு சிறப்புகள் கொண்ட இவ்வூரில் பச்சைநாயகி சமேத ஸ்ரீபட்டீசுவரசுவாமி திருக்கோயில் புகழ்பெற்று விளங்குகிறது. இது தேவார வைப்புத் தலமாகும். அருணகிரிநாதரும் இங்குள்ள முருகனைப் போற்றிப் பாடியுள்ளார்.
நான்முகனைப் போலப் படைப்புத் தொழிலை மேற்கொள்ள வேண்டும் என விரும்பிய காமதேனு, இத்தலத்திற்கு வந்து தவமிருந்து, புற்றுவடிவில் இங்கிருந்த சிவலிங்கத் திருமேனி மீது தினமும் பாலைச் சொரிந்து வழிபட்டது. முழுமதி நாள் ஒன்றில் அதன் கன்றான "பட்டி' , புற்றில் துள்ளிக் குதித்து விளையாடும் போது, அதன் கால் சிக்கிக் கொண்டது. உடனே காமதேனு தனது கொம்பினால் புற்றை உடைக்க, அங்கே குருதி வெளிப்பட்டது. அப்போது இறைவன் உமாதேவியோடு இடப வாகனத்தில் காட்சி தந்து, ""காமதேனுவே! இளங்கன்றின் செயலையும் உமது செயலையும் யாம் குற்றமாகக் கருதவில்லை. கொம்புச் சுவடும், குளம்புச் சுவடும் மகிழ்ச்சியோடு ஏற்போம். இனி இத்தலம் காமதேனுபுரி, பட்டிபுரி என்று அழைக்கப்படும்; யாம் "பட்டிநாதர்' என்ற திருநாமம் கொள்வோம்!'' என்று கூறி அருள் செய்தார்.
கிழக்கில் ஐந்து நிலை ராஜகோபுரம் உயர்ந்து நிற்க, இரண்டு பிரகாரங்களை கொண்டு கோயில் விளங்குகிறது. கோமுனி, பட்டிமுனிக்காக இங்குள்ள கனக சபையில் எம்பெருமான் ஆனந்த தாண்டவம் ஆடியுள்ளார். பட்டீசுவரர் சந்நிதியை நோக்கிச் சென்றால் கொடிமரம், பலிபீடம், நந்தி
தேவரை தரிசிக்கலாம்.
இரண்டாம் சுற்று நுழைவாயில் மேலே மூன்று நிலை கோபுரம் உள்ளது. நுழைவாயிலின் இருபுறமும் விநாயகரும், சண்முகரும் எழுந்தருளியுள்ளனர். அர்த்த மண்டபத்தின் வடமேற்குப் பகுதியில் கருவறையையொட்டி மனோன்மணி அம்மையின் செப்புத் திருமேனி உள்ளது. காமதேனுவின் கொம்புப்பகுதியால் உருவான சிருங்கி தீர்த்தம் வலதுபுறம் உள்ளது.
கருவறையில் அருள்மிகு பட்டீசுவரர் உளிபடாத திருமேனியராக எழுந்தருளியுள்ளார். சிவலிங்கத் திருமேனியின் முடியில் குளம்புச் சுவடையும், கொம்புச் சுவடையும் திருமஞ்சனம் நடைபெறும் போது தெளிவாகக் காணமுடிகிறது. அம்மன் பச்சை
நாயகி என அழைக்கப்படுகிறார். கோயிலின் எதிரே திருக்குளம் உள்ளது.
17-ஆம் நூற்றாண்டில், மதுரை திருமலை நாயக்கரின் சகோதரர் அழகாத்திரி நாயக்கரால் இங்கு கட்டப்பட்ட கனகசபை ஒரு சிற்பக் கருவூலமாகும். மேலைச் சிதம்பரம் என்று அழைக்கப் பொருத்தமாக 28 தூண்களில் அழகிய சிற்பங்கள் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.