
பொதுவாக யாராவது ஒரு விஷயத்தை உறுதிபடப் பேசினால், அதை சத்தியவாக்கு என்போம். அப்படிப்பட்ட சத்தியவாக்கினை சத்தியவாசகம் என்று சொல்வதும்; அதனைப் பேணுபவரை சத்தியவாசகர் என்று சொல்வதும் வழக்கு.
மனிதர்கள் மட்டும் அல்ல; சில சமயங்களில் கடவுள்கூட தமது பக்தர்களுக்காக சத்திய வாசகராக நின்று அருளுகிற கதைகளும் உண்டு. அப்படிப்பட்ட சத்தியமூர்த்தி அருளுகிற காவிரிக்கரைத் தலம்தான் மாட்டூர் என்கிற திருமாத்தூர். மயிலாடு
துறையிலிருந்து திருக்கடவூர் செல்லும் வழியில் ஆக்கூருக்கு அருகில் திருமாத்தூர் அமைந்துள்ளது.
சத்தியவாசகமாகத் தன் வாக்கினை உரைத்ததால்
சத்தியவாசகர் என்று சிவபெருமான் அழைக்கப்பட்ட தலம். புராணகாலத்தில் இப்பகுதி வில்வாரண்யம் என்றும்; இத்தலத்து லிங்கபிரான் வில்வாரண்யேஸ்வரர் என்றும் குறிக்கப்பெற்றதாக வரலாறு.
மார்க்கண்டேயரின் ஆயுள் நிறைவடைகிற தருணத்தில் காலன் அவரை விரட்டிக்கொண்டு நெருங்க, தாம் பயணித்த வழிநெடுகிலும் பல தலங்களில் உள்ள சிவபெருமானை வழிபட்ட வண்ணம் வந்த மார்க்கண்டேயர், இந்த வில்வாரண்ய தலத்திலும் சிவபூஜை செய்திருக்கிறார். அப்பொழுது திருக்கடையூரில் அபய விமோசனம் கிடைத்திடும் என்பதனை திருக்குறிப்பால் மார்க்கண்டேயருக்கு சத்தியவாக்காக ஈசன் உணர்த்தியது இங்குதான். இக்காரணத்தினால் சத்தியவாசகர் என்கிற திருநாமத்தினாலேயே இறைவன் வழங்கப்படுகிறார்.
செல்வத்திற்கு அதிபதியான திருமகள் சிவபூஜை செய்து வழிபட்ட தலம். இதற்காக திருமகள் உண்டாக்கிய புனிதத் தீர்த்தம் அவரது பெயரினாலேயே மகாலட்சுமி தீர்த்தம் எனவழங்கப்படுகிறது. தற்பொழுது இது கோயிலுக்கு அருகிலேயே பெரிய குளமாகக் காட்சியளிக்கிறது.
தவிர கண்வ மகரிஷியும் இத்தலத்தில் பூஜித்துள்ளார். அம்முனிவர் தமது சிவதரிசனத்திற்காக கயிலையிலிருந்து தில்லையம்பதிக்கு வான்வழியாகச் சென்று கொண்டிருந்த சமயத்தில், சந்தியாகால அனுஷ்டானங்களைச் செய்ய வேண்டிய நேரம் நெருங்கியது. இந்த வில்வ வனத்தினைக் கண்டு ஈர்க்கப்பட்டு தரையிறங்கியவர், மகோன்னதமான சாநித்யம் இங்கு நிலவுவதை உணர்ந்து, இங்கேயே புனித நீராடி சிவபூஜை செய்திருக்கிறார். கண்வமகரிஷிக்கான சிறு சந்நிதியும் இங்குள்ளது.
சப்தமாதர் இத்தலத்து மூலவரை வழிபட்டு பேறு அடைந்துள்ளனர். அன்னையர் எழுவரும் அருகிலேயே தனித்த ஆலயத்தில் சந்நிதி கொண்டுள்ளனர். இவர்களின் சிவசிந்தனைக்கு எவராலும் இடையூறு நேராதவண்ணம் காவல் காத்திடும் மதுரை வீரன் சுவாமி அன்னையருக்கு அருகிலேயே தனது சக்திகளுடன் நிலைபெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொடக்கத்தில் கோயிலின் வெளி பிரகாரத்தில் சந்நிதி கொண்டிருந்தனர் இந்த சப்தமாதர். காலவெள்ளத்தில் கோயில் சிதைவடைந்ததால், அவர்கள் இருந்த கோட்டம் இன்று தனித்த கோயிலாகவே ஆகிவிட்டது.
சோழமன்னன் ஒருவர் இத்தலத்தில் புண்ணிய தீர்த்தமாடிய பின், ஈசனைத் தொழுது தனது கடுமையான தோல்
வியாதி நீங்கப்பெற்று மகிழ்ந்தார்.
ஆக்கூர், திருக்கடையூர் முதலான தலங்களுடன் புராணத்தொடர்பு கொண்டுள்ள தலம். இம்மூன்று தலங்களையும் வரைகோட்டினால் இணைத்தால் அது ஒரு முக்கோண வடிவில் அமைவது ஆச்சரியம். இதனை மெய்ப்பிப்பது போல, இக்கோயில் வாசலில் நின்று கொண்டு பார்த்தால் கீழ்த்திசையில் திருக்கடவூர் ஆலயத்தின் விமானங்களில் இரவு நேரத்தில் ஒளிரும் விளக்குகளின் வெளிச்சத்தினைக் காணவியலும்.
தேவாரப்பாடல்களில் வைப்புத்தலமாகக் குறிக்கப்பெற்றுள்ள தலம். அம்பிகை ஸ்ரீ செüந்தர்ய
நாயகி இறைவனுக்கு இடதுபுறத்தில் உறைந்தருளுகின்றாள்.
அண்மையில் குடமுழுக்கு கண்டுள்ள ஆலயம். கொடுத்த வாக்கினை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்கிற நிலைப்பாடுடையவர்கள் இத்தலத்து சத்தியவாசகரைத் தொழுதிட, அவர் தவறாது அருளிடுவார் என்பது உறுதி!
சுஜாதா மாலி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.