

ஆண்மை மிக்க வீரர்கள் இருந்ததால் "ஆண்மை ஊர்' என அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் "ஆமையூராக' மாறிய தலம், தற்போது ஆம்பூர் என அழைக்கப்படுகிறது. இங்குள்ளது சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில்.
அக்காலத்தில் இப்பகுதியை ஆண்ட அரசன் ஒருவரின் கனவில் தோன்றிய இறைவன், பசு ஒன்று தானாகவே பால் சொரிந்த புற்றில் சுயம்பு லிங்கமாக தாம் இருப்பதாகவும், தனக்கு தனிக்கோயில் எழுப்புமாறும் கூற, அதன்படி அதே இடத்தில் கட்டப்பட்டதுதான் இந்தக் கோயில்.
ராஜகோபுர நுழைவு வாசலைக் கடந்ததும் எதிரே கொடிமரம், பலிபீடம், நந்தி காட்சி தர, மண்டப முகப்பில் எம்பெருமானின் திருமணக் கோலமும், தெய்வ வடிவங்களும் சுதைச் சிற்பங்களாக அழகுற காட்சி தருகின்றன. நந்திதேவர் நவதுவாரக் கல் ஜன்னல் வழியே நாகநாத சுவாமியை தரிசிக்கின்றார். பிரகாரத்தில் மார்க்கபந்தீசுவரர், மரகதாம்பிகை, விநாயகர், சப்தமாதர், அறுபத்துமூவர், வள்ளி} தெய்வானை சமேத முருகப் பெருமான் சந்நிதியும், அருகே தலமரமான வில்வமும் காட்சி தருகிறது.
துவாரபாலகர்கள் காவல் நிற்க, கோயிலின் நடுநாயகமாக நாகநாத சுவாமி சதுர வடிவ ஆவுடையாரில் சுயம்பு மூர்த்தியாக எளிய வடிவில், ஒளி வீசும் தோற்றத்துடன் அருளாசி வழங்குகின்றார். கருவறைச் சுற்றில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்கை, சண்டிகேஸ்வரர் உள்ளிட்டோரை தரிசிக்கலாம். தட்சிணாமூர்த்தியின் பின்புறம் ஆஞ்சனேயர் சிவலிங்கத் திருமேனியை வழிபடும் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. ஈசான்ய பகுதியில் காளத்தீசுவரர், ஞான பிரசன்னாம்பிகை, நந்தி தேவர் ஆகியோர் சிவப்பு கருங்கல் மேனியராக அமர்ந்து திருமண வரம் தருவது குறிப்பிடத்தக்கது.
வடமேற்கு பிரகாரத்தில் அன்னை சமயவல்லி சந்நிதி அமைந்துள்ளது. அன்னை கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரையோடு, மேல் இரு கரங்களில் பாச, அங்குசம் தாங்கி, கிழக்கு முகமாய் காட்சிதருகிறாள். இங்கு சுக்ர வார அம்மன் பள்ளியறை அமைந்திருக்க, அன்னையை தரிசித்தபடி சிம்ம வாகனம் காணப்படுகிறது. அன்னை, சுவாமியின் உயரத்தை விட ஒரு படி மேலாகக் காட்சியளிப்பது, வழக்கத்திற்கு மாறான அமைப்பாக உள்ளது.
கன்னி மூலையில் நவகிரக சந்நிதி அமைந்துள்ளது விசேஷம். இதன் மூலம் ராஜகோபுரத்தைக் கடந்து கோயிலுக்குள் நுழையும்பொழுதே குருவின் பார்வை கிடைக்கிறது. அதேபோல, சனிபகவானின் இடது
புறம் காக வாகனம் இருப்பதும், இக்கோயிலில் இரண்டு பைரவர்கள் அமைந்துள்ளதும் சிறப்பு. கிருஷ்ணன், ஐயப்பனுக்கும் தனி சந்நிதிகள் அமைந்துள்ளன.
இத்தலம் ராகு } கேது தோஷ பரிகாரத்துக்கும்; திருமணம், குழந்தைப்பேறுக்கும் மட்டுமல்லாமல்; குடும்பப் பிரச்னைகள் விலகவும், நோய்கள் தீரவும் உகந்தத் தலமாகக் கருதப்படுகிறது. திங்கள்கிழமைகளில் உண்ணா நோன்பிருந்து வழிபடுவது கூடுதல் பலன் தரும்.
பங்குனி உத்திர பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. அதுதவிர, தமிழ்ப் புத்தாண்டு லட்சதீபம், சித்ரா பௌர்ணமி, சித்திரை விஷு, நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், கார்த்திகை கடைசி சோமவார சங்காபிஷேகம், மார்கழி ஆருத்ரா, தைப்பொங்கல், கிருத்திகை, மகா சிவராத்திரி, பிரதோஷம் உள்ளிட்ட அனைத்து சிவாலய வழிபாடுகளும் விமர்சையாக நடைபெறுகின்றன.
இவ்வூர் பல்லவர், சோழர், விஜயநகர மன்னர், ஹொய்சாளர் எனப் பல்வேறு மன்னர்கள் காலங்களிலும் முக்கியத்துவம் பெற்ற ஊராக விளங்கியதை இவ்வூரில் கிடைத்த கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ரயில் நிலையத்தில் இருந்தும், பேருந்து நிறுத்தத்தில் இருந்தும் சுமார் ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலில் வரும் நவம்பர் 3}ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 6 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. திருப்பணிக்குழுத் தலைவர் எம்.ஆர். ஆறுமுகம் தலைமையில் விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மேலும் விவரங்களுக்கு : 98943 79440.
எம்.அருண்குமார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.