

முருகப்பெருமானைக் காண பாதயாத்திரை மூலமாகவும் மலை ஏறியும் வியர்க்க வியர்க்க வரும் பக்தர்களை எல்லா ஊர்களிலும் பார்க்கலாம். ஆனால், தன் திருமேனி எங்கும் வியர்வை வழியக் காட்சி தரும் முருகனை சிக்கல் திருத்தலத்தில்தான் தரிசிக்கமுடியும்.
"சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்' என்பது சொலவடை. கந்த சஷ்டி திரு
நாளில் சூரசம்ஹார நிகழ்வுக்கு முதல் நாள் பஞ்சமி அன்று சிக்கல் திருத்தலத்தில் அன்னையிடம் வேல் வாங்குவார் சிங்காரவேலவர். தன் சக்தியையெல்லாம் உருவேற்றி வேலாயுதமாக நெடுங்கண்ணி அம்மை தர, அந்தப் பரவசத்தில் முருகப்பெருமானுக்கு உடல் எங்கும் வியர்த்துக் கொட்டும்.
இந்தப் பேரதிசயம் இவ்வருடம் அக்டோபர் 26} ஆம் தேதி (ஞாயிறு) நிகழ இருக்கிறது. வருடா வருடம் வேல் வாங்கியவுடன் கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்கு வியர்வை வடியும் வேலனாக அருள்புரிகிறார் சிக்கலைத் தீர்க்கும் சிங்கார வேலவர்!
நாகப்பட்டினத்தில் இருந்து திருவாரூர் செல்லும் மார்க்கத்தில் ஐந்தாவது கிலோமீட்டரில் இருக்கிறது இந்த ஊர். "அழகிய சிக்கல் சிங்காரவேலவா' என்று அருணகிரிநாதரால் திருப்புகழில் புகழப் பெற்ற ஊர். திருஞானசம்பந்தர், சுந்தரரால் தேவாரப் பாடல் பெற்ற ஊர்.
26 }ஆம் தேதி அன்று காலை 7 மணியளவில் வள்ளி, தெய்வானையுடன் திருத்தேரோட்டம் துவங்குவார் ஸ்ரீ சிங்காரவேலவர். நான்கு வீதிகளும் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் மழை பொழிந்து மாலை வரை தேரிலேயே இருப்பார். இரவு சுமார் எட்டு மணி அளவில் ஆனந்த நடனத்துடன் ஆலயத்துக்கு வந்தருள்வார்.
சகோதரரான சுந்தர கணபதியின் முன்னிலையில் தகப்பனாரான நவநீதேஸ்வரர் நல்லாசியுடன், தாயாரான சத்தியாயதாக்ஷியிடம் வேல் பெறுவார் வேலவர். வேல் வாங்கிய பின் தியாகராஜர் சந்நிதியில் நிலை பெறுவார். அங்குதான் பக்தர்களுக்கு அந்த அற்புதத்தை வியர்வை பொங்கப் பொங்கிக் காட்சி தரும் விந்தையை அருள்பாலிக்கிறார் சிங்காரவேலவர். அன்று மட்டும் அனைத்து பக்தர்களும் கருவறைக்கு உள்ளே சென்று மிக அருகில் முத்து முத்தாக வியர்வை அரும்பிக் கொண்டே இருக்கும் முத்துக்குமரனை வலம் வந்து வணங்கலாம்; நம் வினை எல்லாம் களையலாம். இரவு 12 மணிக்கு மகாபிஷேகம் தொடங்கும் வரை பக்தர்கள் பரவசமாக, கூட்டம் கூட்டமாக, மிக மிக அருகில் சென்று ஆண்டவனை தரிசிப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.
தலவரலாறு: காமதேனு தன் பாலால் உண்டாக்கிய பாற்குளமே சிக்கல் தல தீர்த்தம். அந்தப் பாலில் திரண்ட வெண்ணெயால் பிரம்மரிஷி வசிஷ்டர் உருவாக்கிய லிங்கமே நவ
நீதேஸ்வரர் எனப்படும் வெண்ணெய் பிரான்.
அகத்தியர், விசுவாமித்திரர் எனப் பலராலும் வழிபடப் பெற்ற இப்பிரான் முசுகுந்த சக்கரவர்த்தியின் பிரம்ம
ஹத்தி தோஷத்தை நீக்கியருளியதால், அவரால் கட்டப்பட்டது இக்கோயில். பின் நாயன்மார்களில் ஒருவரான கோச்செங்கட் சோழனால் கற்றளியாக்கப்பட்டது வரலாறு. இவ்வாலயத்தில் கோல வாமனராக கோமளவல்லித் தாயாருடன் பெருமாளுக்கும் தனி சந்நிதி, கோபுரம் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு.
ஏழு நிலை ராஜகோபுரத்துடன் கம்பீர அழகுடன் மாடக்கோயிலாக அமைந்திருக்கும் இத்தலத்தை தரிசிப்பவருக்கு சிக்கல் எல்லாம் நீக்கி, வளமான வாழ்வு தருவான் சிக்கல் சிங்கார
வேலன். "வேல் வாங்கிய தலத்தில் அவன் கால் பணிந்தால் ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடும் நம் வம்சம்.' சிங்காரவேலன் சிவசக்தி அம்சம். வரும் 27}ஆம் தேதி சூரசம்ஹாரம், 28 }ஆம் தேதி தெய்வானை கல்யாணம், 29 }ஆம் தேதி வள்ளித் திருமணம் என்று களைகட்ட இருக்கிறது கந்த சஷ்டி திருவிழா.
சிக்கல் க.கணேசன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.