கடன் பிரச்னை தீர்க்கும் தலம்!

பொதுவாக சிவாலயங்களை தரிசிப்பவர்கள் சிவலோகம் போல இருக்கிறது என்று மகிழ்வுடன் கூறுவது இயல்பு.
கடன் பிரச்னை தீர்க்கும் தலம்!
Published on
Updated on
2 min read

பொதுவாக சிவாலயங்களை தரிசிப்பவர்கள் சிவலோகம் போல இருக்கிறது என்று மகிழ்வுடன் கூறுவது இயல்பு. உண்மையிலேயே அப்படிப்பட்ட சிவலோகத்தை தரிசித்து புண்ணியம் பெற வேண்டுபவர்கள் அவசியம் செல்லவேண்டிய தலம், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருமால்குடி. திருக்கடையூர் ஆயுள்நலன் பிரார்த்தனைக்காகச் செல்பவர்கள் அருகிலேயே உள்ள இந்த சிவலோகநாதரை தரிசிக்கக் கூடுதல் பலன் கிடைத்திடும் என்பது பலரும் அறிந்திராத ஒன்று.

பொதுவாக ஆயுள்தோஷ நிவர்த்தி பிரார்த்தனைகளுக்காக பலரும் திருக்கடையூர் செல்வது வழமை. அழியாத ஆயுளை வழங்கிடும் அமிர்தகடேஸ்வர சுவாமியையும், அமிர்தகெளரியாகிய அபிராமியையும் அனுக்கிரகிக்கும் காலசம்ஹார திருத்தலம் இது. அமிர்தத்தைப் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த புராண நிகழ்வு நடைபெற்ற பகுதியும் இதுதான் என்பது புராணத் தகவல். பாற்கடலைக் கடைந்தபோது அமிர்தத்திற்கு இணையான பல புனித வஸ்துக்களும் அதிலிருந்து கிடைத்தன. காமதேனு, கற்பகவிருட்சம், ஐராவதம், உச்சைசிரவஸ் முதலான பல உயர்வான விஷயங்களுடன் தன்வந்திரி பகவானும், செல்வத்திற்கு அதிபதியான திருமகளும் தோன்றினர். பின்னர் சகலரும் ஆங்காங்கு சுற்றியுள்ள தலங்களில் சிவபூஜை செய்து உய்வுற்றனர். அவ்விதத்தில் அலைமகளான மகாலக்ஷ்மி சிவபூஜை செய்திருந்த தலம்தான் இந்த திருமால்குடி.

இதன் பலனாக திருமாலைத் தன்னுடைய பதியாக ஏற்று மகிழ்ந்த தலமும் இதுதான் என்கிறது புராணம். இதனால் இத்தலமானது திரு + மால் + மா + குடி என்று வழங்கப்பெற்றது. முதலில் வருகிற மால் என்பது திருமாலையும், அதன்பின்னேயே வருகிற "மா'} ஆனது லட்சுமியையும் குறிக்கிறது. இவ்விருவரும் நிலைத்திட்ட ஊர் குடி எனப்பட்டது. பின்னர் காலப்போக்கில் திருமாமாகுடி என வழங்கப்பட்டு வந்த ஊர், தற்பொழுது மாமாகுடி என்றே அழைக்கப்படுகிறது.

திருமகளால் பூஜிக்கப்பட்ட லிங்கத்திருமேனியர்தான் இத்தலத்து மூலவரான சிவலோகநாதர் என்பது கூடுதல் சிறப்பு. சகலதேவராதிகளும் தங்கியிருந்தபடியால் இத்தலமே ஒரு சிவலோகம் போலக் காட்சியளித்ததாம். அதனாலேயே இத்தலத்து ஈசருக்கு சிவலோகநாதர் என்கிற திருநாமம் உண்டானது என்கிறார்கள்.

கிழக்கு நோக்கிய ஆலயத்தில் எழுந்தருளியிருக்கிறார் சிவலோகநாதர். பிரதோஷ காலமான அந்தி நேரத்தில் இவருடைய சந்நிதியில் விளக்கேற்றி வணங்கிட இல்லத்தில் லட்சுமி கடாட்சம் நீங்காது நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். மகாமண்டபத்தின் இடது பக்கத்தில் அம்பிகை சிவகாமசுந்தரியின் சந்நிதி. சிறிய திருமேனியினள். ஆயினும் மிகுந்த வரப்பிரசாதி. தலத்திற்கு உரிமை பூண்டவர்களான அம்மையப்பரை தரிசித்த நிறைவுடன் அருகிலேயே உள்ள ஆடல்வல்ல நாயகனின் சந்நிதியையும் தரிசித்து விடலாம். மிகுந்த கலையழகுடன் நேர்த்தியாக மிளிரும் உலோகத்திருமேனியினர் இந்த நடராஜர்.

தொன்மையான ஆலயம். சோழர்காலத்திய கட்டுமான அமைப்பு. ஆயினும் கால ஓட்டத்தின் வேகத்தில் சிக்குண்டு அழிந்திருக்கிறது. பின்வந்தவர்கள் சிற்சில மாற்றங்களுடன் மையக்கோயிலையும் சுற்றாலையையும் நேர்த்தியாகப் புதுப்பித்துள்ளனர். ஏனைய சிவபரிவாரங்கள் அவரவர்களுக்கு உரிய ஸ்தானங்களில் சிவாலய விதிப்படி நிலைப்படுத்தப்பட்டுள்ளனர். பெரும்பாலான சிவாலயங்களில் வடமேற்கில் கஜலட்சுமி நிலைப்படுத்தப் படுவது மரபு. ஆனால் இத்தலத்தில் இருகரங்களிலும் தாமரை ஏந்தியவளாய் ஆதிலட்சுமியாகக் காட்சியளிப்பது சிறப்பு.

குடி என்று முடிவுறும் பாடல்களில் அப்பர் சுவாமிகளின் தேவாரத்தில் இடம்பெற்றுள்ள வைப்புத்தலம். திருமகள் புண்ணிய நீராடிய தீர்த்தமானது லட்சுமி தீர்த்தம் என்கிற பெயரில் ஆலயத்திற்கு அருகிலேயே இருக்கிறது. தல விருட்சம் வில்வம். பொதுவாகத் திருமகள் வழிபட்ட தலங்களை தரிசிக்கும்போது வறுமை, கடன் முதலான தோஷங்கள் நீங்கி செல்வநிலை தழைத்திடும் என்பது சூட்சுமம். அதிலும் திருமகள் அவதானித்த இந்தத் தலத்தில் வழிபட்டால் நம் பின்வரும் பல தலைமுறைகளுக்கு இந்த புண்ணியப்பலன் கிடைத்திடும் என்பது நம்பிக்கை!

மயிலாடுதுறை - செம்பனார்கோயில் - ஆக்கூர் - திருக்கடையூர் வழித்தடத்தில், ஆக்கூர் முக்கூட்டு சாலையிலிருந்து 2 கி. மீ. தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. சீர்காழி புறவழிச்சாலை - பூந்தாழை வழியாகவும் செல்லலாம்.

சுஜாதா மாலி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com