கதவே கடவுள்!

கோயில் என்றால் சுவாமி, அம்மன் கல் சிலையோ, உலோக விக்ரகமோ, சுதை உருவமோ, படமோ இருக்கும்.
கதவே கடவுள்!
Published on
Updated on
2 min read

கோயில் என்றால் சுவாமி, அம்மன் கல் சிலையோ, உலோக விக்ரகமோ, சுதை உருவமோ, படமோ இருக்கும். ஆனால், ஓர் ஊரில் அமைந்துள்ள கோயிலில் இது எதுவும் இல்லை. கதவே காமாட்சி அம்மனாக வழிபடப்படுகிறாள். அந்தத் தலம், தேனி மாவட்டத்திலுள்ள தேவதானப்பட்டி.

இப்பகுதியில் கொடுங்கோல் ஆட்சிசெய்து வந்த வஜ்ஜிர தத்தன் என்ற அசுரனை துர்கையம்மனாக மாறி, வதம் செய்து, நாட்டு மக்களைக் காப்பாற்றினாள் காஞ்சி காமாட்சியம்மன். பின்னர் அசுரனைக் கொன்ற பாவம்தீர மஞ்சள் நீராடி, மூங்கில் புதருக்குள் தவமிருந்து வந்தாள்.

நாள்கள் நகர்ந்தன. வங்கீசபுரி என அழைக்கப்பட்ட இப்பகுதி ராஜ கம்பள நாயக்கர் ஜமீன் ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. ஜமீனைச் சேர்ந்த மாடுகள் மேய்ச்சலுக்குச் சென்ற போது, கன்று ஈனாத பசு ஒன்று தினமும் மந்தையைவிட்டு விலகி, வேறிடம் சென்று திரும்பி வருவதை அறிந்த இடையன், மறுநாள் பின்தொடர்ந்தான். அங்கே மூங்கில் புதரில் இருந்த பெண் ஒருத்தி பசுவிடம் பால் அருந்திக்கொண்டிருந்தாள். இக்காட்சியைக் கண்ட இடையனின் கண்கள் குருடாயின. தட்டுத் தடுமாறி ஜமீனிடம் சென்ற அவன், நடந்ததை எடுத்துக் கூறினான்.

அங்கு விரைந்து சென்றான் ஜமீன். அப்போது அம்மன் வாக்காக அசரீரி ஒலித்தது. "இன்னும் ஒரு வாரத்தில் பெருத்த வெள்ளம் ஏற்படும். அதில் மூங்கில் பெட்டியில் அமர்ந்து நான் மிதந்து வருவேன். எந்த இடத்தில் மூங்கில் புதர் அணையிட்டுப் பெட்டி நிற்கின்றதோ, அந்த இடத்தில் அப்பெட்டியை எடுத்து வைத்து வழிபட்டால், அந்த இடையனுக்குப் பார்வை கிடைக்கும். அதே இடத்தில் என்னை வைத்து வழிபாடு செய்யுங்கள். நெய் விளக்கு தீபம் மட்டும் ஏற்றுங்கள். தேங்காய், பழங்களை படையல் செய்யுங்கள். அன்னப்படையல் வேண்டாம்' என்று கூறியது.

அம்மன் வாக்குப்படியே அனைத்தும் நடந்தன. மூங்கில் பெட்டியில் இருந்த அம்மனை காமாட்சி என்ற ஒருவகைப் புல்லால் வேயப்பட்ட குச்சு வீட்டில் வைத்து வழிபட்டனர். மூங்கில் புதர்களில் அணைத்து நின்றதால் அது முதல் அன்னை மூங்கிலணை காமாட்சி என்று அழைக்கப்பட்டாள். பெட்டியைத் தூக்கிய இடையனுக்கும் பார்வை கிடைத்தது. மகிழ்ச்சியில் திளைத்த மக்கள் பழம், பூ, தேங்காய் என எதையும் உரிக்காமல் வைத்து பூஜை செய்தனர். இதையே இன்று வரை வழக்கமாகக் கொண்டு வருகின்றனர்.

இக்கோயிலுக்கு பூஜை செய்யும் பணி, மலை மீது குடியிருக்கும் மன்னாடியார்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒரு சமயம் தண்ணீர் பாய்ச்சும் தகராறில் ஜமீன்தாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. மன்னாடியார் கோபத்தில் ஆலயக் கதவைப் பூட்டி விட்டு இதை யாரும் திறக்கக் கூடாது என்று கூறிச்சென்றுவிட்டார். அதுமுதல் கதவு திறக்கப்படாமல், பூட்டிய கதவிற்கே பூஜைகள் நடைபெறுகின்றன.

ஆண்டுதோறும் தைமாதம் ரத சப்தமியன்று ஜமீன் பூசாரி நாயக்கர் பரம்பரையில் வந்த தம் பக்தையான ஜமீன் மனைவியான காமாக்காளுக்கு திவசம் தரப்பட்டு, அன்றே பிரம்மோற்சவ முகூர்த்தக் கால் நடப்படுகிறது. மகா சிவராத்திரியை முன்னிட்டு, எட்டு நாள்கள் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது இந்த மாவட்டத்தில் பெரிய விழா என்பது இக்கோயிலுக்குப் பெருமை சேர்ப்பதாக உள்ளது.

ஆண்டுதோறும் அம்மன் கருவறைக்கு மேலுள்ள காமாட்சி புல் கூரையை வேய பிரம்மோற்சவத்திற்கு ஒரு மாதம் முன்பிருந்தே விரதமிருந்து உத்தரவு கேட்பார்கள். மேற்குத் தொடர்ச்சி மலையில் விளையும் புற்களை பறித்துக் கொண்டு இருவர் தங்கள் கண்களையும், வாயையும் துணியால் கட்டிக் கொண்டு புதிய கூரை வேய்வார்கள். உத்தரவு கிடைக்கவில்லை என்றால் புதிய கூரை வேயப்படாது.

மகா சிவராத்திரி விழாவின் போது பல்வேறு பகுதிகளி

லிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப் படுகின்றன. ஆடி மாதம் முதல் மூன்று நாள்கள் ஆடிப்பள்ளயம் விழா நடைபெறுகிறது. பூஜை வழிபாடுகளை லிங்காயத்தார் எனப்படும் வீர சைவ கன்னடிய பரம்பரையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com