
தக்கன் என்னும் கொடியவன் தனது 27 மகள்களை அழகிய சோமன் எனப்படும் சந்திரனுக்குத் திருமணம் செய்துவைத்தார். அப்போது தக்கன் தனது மகள்களை சந்திரனிடம் ஒப்படைத்து, "27 மகள்களிடமும் சமமாக அன்பைச் செலுத்தி வாழவேண்டும்'' என்று நிபந்தனை விதித்தார். ஆனால் சோமனோ, மிகுந்த அழகியான ரோகிணியிடம் மட்டும் அதிகப்படியான காதல் கொண்டு வாழ்ந்து வந்தார். இதனால் ஏனைய 26 பேரும் தக்கனிடம் முறையிட்டனர்.
இதைக் கேட்ட தக்கன் பெரும் சீற்றம் கொண்டு, சோமனுக்கு நாளும் ஒரு கலை குறைந்துவர சாபம் அளித்தார். அதுவே தேய்பிறையானது. சாபம் பலித்தது. எச்சமாக ஒரே ஒரு கலை மிஞ்சியிருந்த வேளையில், திருவாரூர் வந்து புற்றிடம் கொண்ட பெருமானை வழிபட்டார். தேவதீர்த்தத்தில் நீராடி, ஐந்தெழுத்து மந்திரத்தை நாளெல்லாம் நெஞ்சுருக ஓதியவாறு மடப்புரத்தில் சிவலிங்கம் ஸ்தாபித்து முறையாக வழிபட்டார். சிவனும் விடை மீது அமர்ந்து காட்சி அளித்து அருளினார்.
சோமனும் தனக்கு நேர்ந்த சாபத்தை மனங்கசிந்து கண்ணீர் சிந்திக் கூறிப் பணிந்து நின்றார். வேண்டியோருக்கு வேண்டியதை அளிக்கும் சிவனும், ""தக்கன் சாபத்தால் நீ தேய்ந்தாலும் பின்னர் நாளொரு கலையாக வளர்வாய்!'' என்று அருளினார். அதுவே வளர்பிறையானது. சோமனின் குறையைத் தீர்த்து அருள்புரிந்ததால், இத்தல இறைவன் சோமநாதப் பெருமான் என்று அழைக்கப் பெறுகிறார்.
வரம் பெற்ற சோமன், ""பக்தர்கள் வந்து வழிபட்டு குறைகளைக் களையும் வகையில் நீங்கள் அருள்புரிய வேண்டும்'' என்றார்.
சோமன் ஸ்தாபித்த சிவலிங்கமே "சோமநாதர்' .
சைவ சமயத்தின் தலைமைப் பீடமாகவும், விராட புருஷஸ்தலமாகவும், பிறந்தாலே முக்தி தருவதும், உலகத்தில் முதலில் தோன்றிய மூர்த்திதலமாகவும், நால்வரால் பாடல் பெற்றதாகவும் விளங்குவது தியாகேசர் உறையும் திருவாரூர் ஆகும். அருணகிரிநாதரால் திருப்புகழ் பாட பெற்ற தலமாகவும் மடப்புரம் தலம் உள்ளது. மேற்கு நோக்கி அமையப் பெற்ற அற்புத சிவன் கோயில்.
ஞானத்தையும் யோகங்களையும் அளிக்க வல்ல அன்னையாக ஸ்ரீஞானசித்தி யோகாம்பிகை அருள்கிறார்.
"சோமநாதரை வேண்டுவோரின் துன்பங்கள் நீங்கும். மருந்துகள் முதலியவற்றால் தீராத நோய்களில் விடுபட்டு நலம் பெறுவர். கல்வி, செல்வம், புகழ், சித்தி, முக்தி உள்ளிட்ட பேறுகளை எளிதில் எய்துவர்' என்பது ஐதீகம். திங்கள்கிழமை வழிபட்டால் பக்தர்கள் கூடுதல் பலன்களைப் பெறலாம்.
இங்குள்ள சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடுவோருக்கு தோல் நோய் உள்பட அனைத்து விதமான நோய்களும் விலகுகின்றன என்பதை பக்தர்கள் உணர்கின்றனர்.
திருவாரூர் அருள்மிகு ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயிலில் அபிஷேக கட்டளை சேர்ந்த இந்த மடப்புரம் அருள்மிகு ஞான சித்தி யோகாம்பிகை சமேத அருள்மிகு சோமநாத சுவாமி கோயிலில், ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மகாதேவ தேசிக பராமாச்சார்ய சுவாமிகள் மேற்பார்வையால் திருப்பணிகள் அண்மைக்காலமாக நடைபெற்று வந்தது. கும்பாபிஷேகம் செப். 14}ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் நடைபெறுகிறது.
- தமிழ்ச்செல்வி விசுவநாதன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.