பிரம்மன் முடிவு செய்த சரஸ்வதி சிலை!

பெரும்பாலான கோயில்களில் துர்கை, லட்சுமி, சரஸ்வதி என்று முப்பெரும் தேவியரும் கொலுவிருக்கும் தனி சந்நிதிகளைப் பார்த்திருப்போம்.
பிரம்மன் முடிவு செய்த சரஸ்வதி சிலை!
Published on
Updated on
1 min read

பெரும்பாலான கோயில்களில் துர்கை, லட்சுமி, சரஸ்வதி என்று முப்பெரும் தேவியரும் கொலுவிருக்கும் தனி சந்நிதிகளைப் பார்த்திருப்போம். அவை, பிரதான தெய்வத்தின் கருவறைக்குப் பின்னே கோஷ்டத்தில் அமைந்திருக்கும். இந்நிலையில், சென்னை பெசன்ட்நகர் பேருந்து நிலையத்துக்கு அருகே உள்ள

ஸ்ரீவரசித்தி வல்லப விநாயகர் கோயிலில் சரஸ்வதி

தேவிக்கென பிரத்யேகமாக தனி சந்நிதி அமைக்கப்பட்டிருக்கிறது. அண்மையில்தான் இதற்கான கும்பாபிஷேக விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.

கோயிலுக்குள் நுழைந்ததுமே வலது பக்கமாக கிழக்குப் பார்த்தபடி அமைக்கப்பட்டுள்ள இந்தச் சந்நிதி, தனிக் கோயில் போன்றே கம்பீரத் தோற்றத்தில் மிளிர்கிறது. ""சரஸ்வதிதேவிக்கென இப்படிப்பட்டதொரு தனி சந்நிதியை அமைக்கும் எண்ணம் எப்படி வந்தது?'' என்று ஆலயத்தின் அறங்காவலர்களிடம் கேட்டோம்.

""இந்த ஆலயத்தில் வரசித்தி விநாயகரின் தேர் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் வராஹிதேவிக்கென சிலை அமைக்க விரும்பி, சிருங்கேரி சாரதாபீட மகாசுவாமிகளிடம் நேரில் சென்று ஆலோசனை கேட்டோம். அவர் அந்த இடத்தில் சரஸ்வதி சிலையை பிரதிஷ்டை செய்ய அறிவுறுத்தினார். தேர் நிறுத்துவதற்கான இடத்தை, கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் மேடையருகே மாற்றினோம். முன்பு தேர் நிறுத்தி இருந்த இடத்தில் சரஸ்வதி சிலையை நிறுவ முடிவுசெய்தோம். என்னுடைய கல்குவாரியிலிருந்தே தரமான கல்லைத் தேர்ந்தெடுத்து சரஸ்வதி சிலை வடிக்கக் கொடுத்தோம். இதில் ஒரு

சிறப்பு என்னவென்றால், சரஸ்வதி சிலை அமைக்க முடிவுசெய்தவுடன், அந்த இடத்தின் மேலே தகரத்தால் மூடப்பட்டிருந்த மேற்கூரையை நீக்கி செப்பனிட முடிவுசெய்தோம். அதை நீக்கியவுடன், எங்களுக்கு ஏற்பட்ட ஆச்சரியத்தை விவரிக்க வார்த்தைகளே கிடையாது. மேற்கூரையில் இரண்டு குதிரைகள் பூட்டிய தேரை பிரம்மா ஓட்டுவது போன்ற சிற்பம் இருக்கக் கண்டு சிலிர்த்துப்போனோம். தன் மனைவியான சரஸ்வதிதேவியின் சிலை, தனக்குக் கீழே அமையவேண்டும் என்பதை பிரம்மதேவனே முடிவுசெய்துவிட்டாரோ என்றுதான் நினைக்கத்தோன்றியது'' என்று மெய்சிலிர்க்கக் கூறினர் ஸ்ரீவரசித்தி விநாயகர் சத்சங்கக் குழுத்

தலைவர் என்.வி.எஸ்.ராமகிருஷ்ணன், செயலர் ஜெ.வி.கே.ஸ்ரீதர் மற்றும் உறுப்பினர் கே.நாராயணன்.

அதற்குப் பிறகு ஏற்பாடுகள் துரிதமாக நடந்து, பத்தே மாதங்களில் சரஸ்வதி சிலை தயாராகி, ஆலயத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. கையில் வீணையுடன்

அமர்ந்த நிலையில், கருணை பொங்கும் முகத்துடன் காட்சியளிக்கிறார் சரஸ்வதிதேவி. மற்ற இரண்டு கரங்களிலும் ஜபமாலையும், புத்தகமும் இடம்பெற்றுள்ளன. அன்னையின் இதழ்களில் தவழும் புன்னகை பக்தர்களின் நெஞ்சங்களை நெகிழச் செய்கிறது.

சரஸ்வதிக்கென தனி சந்நிதி அமைக்க முடிவுசெய்தவுடன், ஆலய அறங்காவலர்களும், வரசித்தி விநாயகரை தம் உள்ளத்தில் வைத்து பூஜிக்கும் பக்தர்களும் தங்களால் இயன்ற நன்கொடைகளை அளித்திருக்கிறார்கள். அதனால் உடனடியாகப் பணிகள் நடந்தேறி, கும்பாபிஷேகமும் சிறப்பாக நிறைவடைந்திருக்கிறது. வரவிருக்கும் நவராத்திரி,

சரஸ்வதிபூஜையின்போது சரஸ்வதிதேவிக்கு சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெறவுள்ளன.

""கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெறவிரும்பும் பக்தர்களும், மாணவர்களும் இந்த சரஸ்வதி

தேவியை வணங்கி வழிபட்டு, வாழ்வில் அனைத்து நலன்களையும் பெறவேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்!'' என்றார்,

கே.நாராயணன்.

ஜி.மீனாட்சி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com