குரங்குகளுக்கு காதணி அணிவித்த கோதண்டராமர்

கல்யாண கோதண்டராமர் ஆலயத்தில் ராமநாம ஜபத்தின் மகிமை..
குரங்குகளுக்கு காதணி அணிவித்த கோதண்டராமர்
Updated on
2 min read

நம்மில் பலருக்கும் சுற்றத்தார் போற்றும்படி வாழவில்லையே என்கிற மனக்குறை இருக்கும். இப்படி ஊர்மெச்ச வாழவேண்டும் என்கிற விழைவு உள்ளவர்கள் சென்று வழிபடவேண்டிய தலம், தஞ்சாவூர் மாவட்டத்தில், திருப்பனந்தாளுக்கு அருகிலுள்ள குறிச்சி ஸ்ரீ கல்யாண கோதண்ட ராமஸ்வாமி கோயில்.

ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட இக்கோயில் நாயக்கமன்னரின் ஆட்சிக்காலத்தில் விரிவாகக் கட்டப்பட்டது.

சீதை, லட்சுமணருடன் கல்யாண ராமராக நெடிதுயர்ந்த கோலத்தில் தெற்கு நோக்கியவராய்க் காட்சிதரும் கோதண்டராமரைக் காண்பதே பரவசம். அருகில் வணங்கிடும் நிலையில் பெரிய அனுமார் மற்றும் வசிஷ்டர் ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர். இவர் சுயம்புவாகத் தோன்றியவர்.

வசிஷ்ட முனிவரின் தவத்துக்கு ஆட்பட்ட திருமாலே இங்கு திருக்கல்யாண ரூபத்துடன், மானுடக்கோலத்தில், ராமராகக் காட்சியளித்து அருளினார் என்கிறது தலபுராணம்.

முற்காலத்தில் இது ராமருக்காக எடுப்பிக்கப்பெற்ற கோயிலாகவே இருந்துள்ளது. ஆயினும், பின்னர் ஏதோ காரணங்களுக்காக மூலஸ்தானத்தில் ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாளை எழுந்தருளச் செய்திருக்கிறார்கள். கல்யாணராம பரிவாரங்களுக்கு நேரெதிராக அவரை வணங்கிடும்படி உள்ள பிறிதொரு அனுமார் மகாமண்டபத்தில் சந்நிதி கொண்டுள்ளார்.

தசரதரின் குல குருவான வசிஷ்டர் தவமிருந்த தலமிது. இதன் காரணமாகத்தான் தசரதர் மனக்குறையைப் போக்கிடும் வண்ணம், அவரது குலம் விளங்கிட ராமர் தோன்றினார் என்கிறது தலபுராணத் தகவல்.

இன்றளவும் இக்கோயிலில் அகண்டராமநாம ஜபம் செய்பவர்களுக்கு சத்புத்திர பிராப்தி ஏற்பட்டு சந்ததி விருத்தி ஆவது கண்கூடு என்கிறார்கள்.

ராமாவதாரத்துக்கு முன்னமேயே இத்தலத்தில் ஏழு தங்க மந்தாரைக் கொக்குகள் ராமநாம ஜபத்தினை செய்திருப்பதாகவும், சூரியபகவானின் ஏழு ஒளிக்கிரணங்கள்தான் இந்த ஏழு தங்க மந்தாரைக் கொக்குகளாக பூமியில் பிரவேசித்ததாக கெüதம முனிவர் கூறியுள்ளார் என்கிறது தலபுராணம்.

இன்றளவும் சப்தமியும் புனர்பூசமும் இணைந்து அமைகின்ற தினத்தில் இந்த ஏழு கொக்குகளும் சகல முனிவர் கூட்டத்துடன் இவ்வாலயத்தில் ராமநாம ஜபம் செய்வதாக நம்பிக்கை.

சுற்றாலையில் பாமா, ருக்மிணி சமேதரராக எழுந்தருளியிருக்கும் கிருஷ்ணருக்கும் தனி சந்நிதி உள்ளது. அருகில் உள்ள ஆண்டாள் கல்திருமேனி கலையழகு மிக்கது. அதேபோல வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி ஆகிய நான்கு மாதங்களையும் விஷ்ணுபதி புண்ணியகாலம் என்பார்கள். ஆயுள் விருத்தி, நோய் நிவர்த்தி, சத்புத்திரபிராப்தி, விவாகபிராப்தி ஆகியனவற்றைத் தரக்கூடிய இப்புண்ணிய காலத்தில் இவ்வாலயத்தில் வழிபட்டுப் பலனடைகிறவர்கள் ஏராளம்.

தம்முடைய அவதாரத்துக்கு முன்பிருந்தே தம்மை ராமநாமஜபத்தினால் வழிபட்டுக் கொண்டிருந்த தங்க மந்தாரைக் கொக்குகளுக்கு ராமர் இத்தலத்தில்தான் பெயர் சூட்டி அருளியிருக்கிறார். தவிர, அனுமார் வேண்டியதற்கிணங்க ராமபிரான் வானரங்களுக்கு தனது திருக்கரங்களால் காதணிகளை அணிவித்து அருளியதும் இத்தலத்தில்தான்.

எனவே இத்தலத்தில் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுதல், காது குத்துதல் முதலான வைபவங்களை நிகழ்த்தினால், அவர்களின் வாழ்வு வளம் பெறும் என்கிற நம்பிக்கையும் நிலவுகிறது.

இவ்வாலயத்தினைப் பற்றிய ஏராளமான செய்திகள் அடங்கிய சுவடிச்செய்திகள் தொகுக்கப்பெற்று லட்சுமிபுர மகாத்மியம் என்ற நூலாக வெளியிடப்பட்டிருந்ததாம். மிகப் பழைமையான அந்நூலினை அண்மையில்தான் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

முழுக்க முழுக்க செங்கல் திருப்பணியால் ஆக்கப்பட்ட மிகப்பிரம்மாண்டமான கோயில். விதானங்களில் உள்ள நாயக்கர் கால ஓவியங்கள் பெரும் கலைப் பொக்கிஷங்கள்.

பெரிய ராஜகோபுரம், உயர்ந்த மதில் சுவர் மற்றும் இரண்டு திருச்சுற்றுகளுடன் கூடிய பாரம்பரியமான கோயில். கிருஷ்ணர், அனுமார், தனித்த தாயார் சந்நிதி என பெரும்பரப்பளவில் விரிந்து இருக்கின்ற இவ்வாலயம் தற்பொழுது பராமரிப்பு குன்றி மிகவும் பொலி

விழந்து காணப்படுகிறது. இவ்வூர் அன்பர்கள் ஒன்றுகூடி திருப்பணிகளைச் செய்து குடமுழுக்குக்காக ஆயத்தம் செய்து வருகிறார்கள்.

மயிலாடுதுறை } திருப்பனந்தாள் பிரதான சாலையில் குறிச்சி ஸ்ரீ கல்யாண கோதண்டராமர் ஆலயம் அமைந்துள்ளது.

- சுஜாதா மாலி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com