பொன், பொருள் அருளும் பொங்கு சனி பகவான்

சனி தோஷம் நீக்கும் திருக்கொள்ளிக்காடு கோயிலின் மகிமை..
பொன், பொருள் அருளும் பொங்கு சனி பகவான்
Updated on
2 min read

முற்பிறவி கர்மாக்களுக்கு ஏற்ப இன்ப, துன்பங்களை அனுபவிக்கச் செய்பவர் சனிபகவான். நள மகராசனை சனி விட்டது திருநள்ளாற்றில். ஆனால், அவருக்கு சகல செல்வங்களையும் கொடுத்தது திருக்கொள்ளிக்காட்டில்.

திருத்துறைப்பூண்டி அருகே திருக்கொள்ளிக்காடு என்ற இடத்தில் உள்ள அருள்மிகு பஞ்சினும் மெல்லடியாள் உடனுறை அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில் எனப்படும் பொங்கு சனீஸ்வரர் திருக்கோயிலில் அருள்பாலிக்கும் சனிபகவான் பொன், பொருள், கல்வி, போகத்துடன் நீண்ட ஆயுளையும் தரும் சிறப்புடையவர்.

இறைவன் கொள்ளிடக்காடர் என்றும், இறைவி மிருதுபாதநாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

இங்கு அருள்பாலிக்கும் இறைவனை திருஞானசம்பந்தர் தேவாரத்தில் "ஓங்குபுகழ் கொள்ளிக்காடரே' என்றும், இத்தலத்தில் தரிசித்தால் அனைத்துப் புகழும் கிடைக்கும் என்றும் போற்றுகிறார்.

சோழ மன்னன் ஒருவருக்கு மிகக் கடுமையான சனி தோஷம் ஏற்பட்டதால், அமைதி கிடைக்காமல் திருக்கொள்ளிக்காட்டுக்கு வந்தான். இங்கு சனிபகவானை தரிசித்துவிட்டு அக்னீஸ்வரரையும் பஞ்சினும் மெல்லடியாளையும் வழிபட்டபோது சனி தோஷம் நீங்கி மனம் மகிழ்ந்தாராம்.

கோயிலின் தலவிருட்சம் வன்னிமரம். பிரகாரத்தில் முருகப்பெருமான் வில்லேந்தியவராகக் காட்சி தருகிறார். மகாலட்சுமி, சனிபகவான் தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

பொங்கு சனி பகவானுக்கு நேரெதிரே பைரவர் சந்நிதியும், நவகிரக சந்நிதியும் உள்ளது. நவகிரகங்கள் ஒன்றையொன்று பார்க்காமல் "ப' வடிவில் அமைந்துள்ளன. அக்னீஸ்வரர் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். அவருக்கு இடப்புறம் பஞ்சினும் மெல்லடியாள் அருள்பாலிக்கிறார்.

திருக்கொள்ளிக்காட்டில் சனிபகவான் சிவபூஜை செய்து ஈஸ்வர பட்டம் பெற்ற தலமாகும். இங்குள்ள பொங்கு சனீஸ்வரர் கையில் கலப்பை ஏந்தியவராகக் காட்சி தருகிறார்.

மனிதர்கள் செய்யும் பாவங்களை ஏழரை ஆண்டு சனிதோஷம் வரும்போது தண்டனை அனுபவிக்கச் செய்து புண்ணியவனாக்குகிறார் பொங்கு சனீஸ்வரர்.

எள் சாதம், உளுந்து வடை, நாவல் பழம், திராட்சை, தேங்காய், எள் தீபம், கருப்புப் பட்டு, கருநீலப்பட்டு, கரு நீல புஷ்பங்கள், நீலக்கற்கள், இரும்பு சம்பந்தப்பட்ட பொருள்கள் சனிபகவானுக்குப் பிரியமானவை. இவற்றைக் கொண்டு சனி பகவானை வழிபட்டால் பக்தர்களின் விருப்பத்துக்கிணங்க நற்புத்தி, தனம், தானியம், ராஜிய, வெள்ளி, ஆயுள் சம்பத்துகளை வழங்குவார்.

கொன்றை மலரைக் கொண்டு அக்னீஸ்வரரையும் பஞ்சினும் மெல்லடியாளையும் ஏழு வாரங்கள் அர்ச்சித்தால், பிரிந்த குடும்பங்கள் ஒன்றுபடுகிறது. அவ்வாறு ஒற்றுமையுடன் வழிபடும் குடும்பங்களுக்கு செல்வம், பதவி, கெüரவம், அந்தஸ்து, மன அமைதி, நீண்ட ஆயுள், பலவிதமான சுகங்கள், குபேர சம்பத்து, உத்தியோகம், பதவி உயர்வு மற்றும் சுபகாரியங்களை பொங்கு சனீஸ்வரர் அருள்வார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

புத்தி சுவாதீனமில்லாதவர்கள் கோயிலில் உள்ள சனி தீர்த்தத்தில் நீராடி, ஆடைகளை விடுத்து, புத்தாடை உடுத்தி ஊமத்தம் பூ மாலையணிந்து, அர்ச்சனை செய்து கோயிலை ஏழு முறை ஐந்து வாரம் வந்து சனி பகவானை தரிசித்தால் நல்ல மனநிலை பெறுகின்றனர்.

சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட செங்கற்கோயிலாக இருந்த இக்கோயிலை முதலாம் ராஜராஜ சோழன் புதுப்பித்தான். ராஜராஜ சோழன் கல்வெட்டுகள் 3, கங்கை கொண்ட சோழபுரம் கோயிலை எடுப்பித்த முதலாம் ராஜேந்திர சோழனின் கல்வெட்டுகள் 2, முதலாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டுகள் 5, பிற சோழ மன்னர்கள் கல்வெட்டுகள் 5 உள்ளன. சோழர்களின் காலத்தில் இக்கோயில் மிக முக்கியத்துவம் பெற்று விளங்கியது. இக்கோயிலுக்கு நிலம், பொற்காசுகள் அளித்தோர் குறித்த விவரங்கள் கல்வெட்டுகளில் இருந்து தெரிகிறது.

திருவாரூர் } திருத்துறைப்பூண்டி வழித்தடத்தில் திருநெல்லிக்காவல் திருத்தங்கூர் வழியாக திருக்கொள்ளிக்காடு செல்லலாம்.

வரும் மார்ச் 6-ஆம் தேதி இத்தலத்தில் சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற உள்ளது. அதையொட்டி பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் மார்ச் 15, 16-ஆம் தேதிகளில் நடைபெறும் லட்சார்ச்சனையில் பங்கேற்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com