அணுகுண்டை வெடிப்போம் என்று மிரட்டிய அல் காய்தா!

வாஷிங்டன், ஏப்.25: அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி நிகழ்த்திய இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பதிலடியாக தங்களுடைய இயக்கத் தலைவர் பின் லேடனை உயிருடனோ பிணமாகவோ பிடிக்க முற்பட்டால் ஐரோப்
அணுகுண்டை வெடிப்போம் என்று மிரட்டிய அல் காய்தா!
Published on
Updated on
2 min read

வாஷிங்டன், ஏப்.25: அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி நிகழ்த்திய இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பதிலடியாக தங்களுடைய இயக்கத் தலைவர் பின் லேடனை உயிருடனோ பிணமாகவோ பிடிக்க முற்பட்டால் ஐரோப்பியக் கண்டம் முழுவதையும் அணுகுண்டு வெடித்து தகர்த்துவிடுவோம் என்று அல் காய்தா பயங்கரவாதிகள் எச்சரித்துள்ளனர்.

 அமெரிக்க வெளியுறவுத்துறையின் ரகசியக் கோப்புகளை அம்பலப்படுத்திவரும் விக்கி-லீக்ஸ் இணையதளம் இந்தத் தகவலை இப்போது தெரிவிக்கிறது.

 கியூபா நாட்டில் அமெரிக்கா பராமரித்துவரும் குவாந்தநாமோ சிறை முகாமில் உள்ள 780 ரகசியக் கைதிகள் பற்றிய குறிப்புகளத் திரட்டியபோது இந்த மிரட்டல் பற்றிய குறிப்புகள் விக்கி-லீக்ஸ் இணைய தளத்திடம் சிக்கியுள்ளன.

 இந்த மிரட்டலுக்கு அஞ்சித்தான் அமெரிக்காவும் பிற மேலை நாடுகளும் பின் லேடனை நெருங்கியபோதிலும் பிடிக்காமல் விட்டுவிட்டார்களா அல்லது உண்மையிலேயே அவர் இருக்கும் இடம் தெரியாமல் நழுவவிட்டுவிட்டார்களா என்று தெரியவில்லை.

 ஆனால் அல் காய்தா பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும்தான் தளங்களாக அப்போதும் இப்போதும் விளங்குகின்றன என்பதையும் பின் லேடன் சாகவில்லை, இன்னும் இவ்விரு நாடுகளில் மறைந்து வாழ்கிறார் என்பதையும் இந்த இணையதளம் தெரிவிக்கும் ரகசியத் தகவல் உணர்த்துகிறது.

 அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தில் அல் கொய்தா பயங்கரவாதிகள் விமானத்தைச் செலுத்தி வெடிக்க வைத்தபோது பின் லேடனும் அவருடைய சகாக்களும் கராச்சி நகரில் பாதுகாப்பான ஓரு வீட்டில் இருந்துகொண்டு தொலைக்காட்சியில் பார்த்து திருப்திப்பட்டிருக்கிறார்கள்.

 அதே நேரத்தில், ஏமன் நாட்டில் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க போர்க்கப்பல் யு.எஸ்.எஸ். கோலில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கு மூளையாகச் செயல்பட்டவர் கராச்சி நகரிலேயே பின் லேடன் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். 2001-க்குப் பிறகே அந்தச் சம்பவம் நடந்தது.

 இந்தோனேசியாவின் பாலி தீவில் 2002-ல் நடந்த மிகப்பெரிய குண்டுவெடிப்புக்கு மூளையாகச் செயல்பட்டவர், 2001-ல் இந்தச் சம்பவம் நடந்த அன்றே உயிரி வேதியியல் வெடிகுண்டுகளைத் தயாரிப்பதற்கான ரசாயனக் கொள்முதலில் கராச்சி கடை வீதியில் இறங்கினார்.

 செப்டம்பர் 11-ல் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட மறுநாளே அல் காய்தாவின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் கராச்சியைவிட்டு வெளியேறி ஆப்கானிஸ்தான் நாட்டில் ஓரிடத்தில் கூடினர். அமெரிக்காவுக்கும் பிற மேலை நாடுகளுக்கும் எதிராக இதே பாணியில் நீண்டகாலத்துக்கு நாச வேலைகள் மூலம் எப்படி தாக்குதல் நடத்துவது என்று தங்களுக்குள் நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டனர்.

 பின் லேடன் மட்டும் அல்லாது அவருடைய தளபதி அய்மான் அல் ஜவாஹிரியும் இந்த சதிக் கூட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டார்.

 குவாந்தநாமோ சிறையில் இருக்கும் அல் கொய்தா பயங்கரவாதிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதத்தில் முக்கியமானவர்களாக இருக்கின்றனர்.

 சிலர் முக்கிய சதி திட்டங்களைத் தீட்டியவர்களாக இருக்கின்றனர், சிலர் அத்தகைய திட்டங்களைச் செயல்படுத்தியவர்களாக இருக்கின்றனர். சிலரிடம் உள்ள தகவல்கள் நடந்தது என்ன என்பதை முழுமையாக உணர உதவுகிறது. சிலர் தரும் தகவல்கள் அல் காய்தா என்பது எப்படிப்பட்ட நாசகார சதி கும்பல் என்பதை உணரவைக்கிறது.

 செப்டம்பர் 11 தாக்குதல் நடந்த 4 நாள்களுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் நாட்டின் காந்தஹார் மாநிலம் சென்று தன்னுடைய தளபதிகளை அழைத்துப் பேசினார் பின் லேடன்.

 அல்லா மீது நம்பிக்கை இல்லாத மேலை நாட்டு ராணுவத்துக்கு எதிராக கடைசிச் சொட்டு ரத்தம் இருக்கும்வரை நாம் போராடியே தீர வேண்டும், அல்லாவின் திருப்பெயரால் போரிட்டு வெற்றி பெறுவோம் என்றார்.

 அதன் பிறகு 3 வாரங்களுக்கு பின் லேடனும் அவருடைய தளபதிகளும் ஆப்கானிஸ்தானின் குறுக்கும் நெடுக்குமாகப் பயணம் செய்து தங்களுடைய தளபதிகளையெல்லாம் எச்சரிக்கைப்படுத்தி அடுத்தடுத்து எப்படி தாக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தனர்.

 அமெரிக்கப்படைகள் தங்களை நெருங்கிவிட்டதால் கைது செய்யப்படுவோம் அல்லது கொலை செய்யப்படுவோம் என்று அஞ்சிய பின் லேடனும் மூத்த நிர்வாகிகளும் ஷூரா என்று அழைக்கப்படும் பழங்குடி தலைக்கட்டுகளை அழைத்து அல் காய்தா பயங்கரவாதிகளுக்கு வழிகாட்டும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.

 ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் விருந்தினர் இல்லத்துக்கு அருகிலேயே துணிகரமாக ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டார் பின் லேடன். தன்னுடைய அமைப்பைச் சேர்ந்த வீரர்களைப் பயிற்சி முகாம்களிலிருந்து உடனே வெளியேறி மேற்கத்திய ராணுவத்தையும் அவர்களுடைய தளங்களையும் கிடைக்கும் எந்த ஆயுதம் மூலமாவது தாக்கி அழிக்குமாறு கட்டளை இட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com