பிரெக்ஸிட் நடவடிக்கைக்கு இழப்பீடு: ஐரோப்பிய யூனியனுக்கு ரூ.3 லட்சம் கோடி வழங்குகிறது பிரிட்டன்

ஐரோப்பிய யூனியன் அமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு இழப்பீடாக 4000 கோடி யூரோ (சுமார் ரூ. 3 லட்சம் கோடி) வழங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிரெக்ஸிட் நடவடிக்கைக்கு இழப்பீடு: ஐரோப்பிய யூனியனுக்கு ரூ.3 லட்சம் கோடி வழங்குகிறது பிரிட்டன்

ஐரோப்பிய யூனியன் அமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு இழப்பீடாக 4000 கோடி யூரோ (சுமார் ரூ. 3 லட்சம் கோடி) வழங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டனில் வெளியிடப்படும் தி ஸண்டே டெலிகிராஃப் செய்தித் தாளில் இது குறித்துத் தெரிவித்திருப்பது: பிரெக்ஸிட் நடவடிக்கையால் ஐரோப்பிய யூனியனுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை ஈடு செய்ய பெருந்தொகை அளிக்க வேண்டும் என்று அந்த அமைப்பு நிபந்தனை விதித்தது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
ஐரோப்பிய யூனியன் அமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேறியதும், பிரிட்டனில் வசித்து வரும் பிற ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்களின் உரிமைகள், யூரோ - பிரிட்டன் பவுண்ட் நாணய மாற்றம், பிரிட்டனில் உள்ள ஐரோப்பிய யூனியன் அலுவலகங்களுக்கு மாற்று, உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து முக்கியப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், உடனடியான பொருளாதார இழப்புக்கு 10,000 கோடி யூரோ நஷ்ட ஈடுத் தொகையை பிரிட்டன் வழங்க வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் கோரி வந்தது.
ஆனால் அந்தத் தொகையை அளிக்க முடியாது என்று பிரிட்டன் திட்டவட்டமாகக் கூறிவிட்டது. ஐயாயிரம் கோடி யூரோ வரை இறங்கி வர ஐரோப்பிய யூனியன் தயாராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் மூவாயிரம் கோடி யூரோவில் தொடங்கிய பிரிட்டனின் பேரம், தற்போது 4,000 கோடி யூரோவில் (சுமார் ரூ. 3 லட்சம் கோடி) முடிந்துள்ளது. இந்தத் தொகையை மூன்று ஆண்டுகளில் தவணை முறையில் பிரிட்டன் அளிக்கும். இது தொடர்பான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
இழப்பீட்டுத் தொகையில் உடன்பாடு ஏற்பட்டுள்ள போதிலும், வர்த்தக விவகாரங்களில் பேச்சு வார்த்தை இன்னும் தொடங்கவில்லை. இழப்பீட்டுத் தொகை முடிவான பிறகுதான் மற்ற விவகாரங்கள் குறித்து பேச முடியும் என்று ஐரோப்பிய யூனியன் திட்டவட்டமாகக் கூறிவிட்டது. இவ்வளவு பெரிய தொகை எவ்வாறு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற விவகாரம் பிரிட்டன் உள்நாட்டு அரசியலில் பெரும் சர்ச்சையைக் கிளப்பும் என்று கூறப்படுகிறது. முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி இதனைக் கடுமையாக ஆட்சேபிக்கும் என்று தெரிகிறது.
மிகச் சிறிய பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள பிரதமர் தெரசா மேயின் இரண்டாம் பதவிக் காலம் முழுவதும் இந்த விவகாரம் பெரும் தலைவலியாகத் தொடரும் வாய்ப்பு உள்ளது.
ஆனால், ஆட்சி அமைப்புக்கும் பிரெக்ஸிட் நடவடிக்கைக்கும் தொடர்பில்லை என்று தெரசா மே கூறி வருகிறார். பிரெக்ஸிட் நடவடிக்கை என்பது பொது வாக்கெடுப்புக்குப் பிறகு எடுக்கப்பட்ட முடிவு என்றும் அதற்கு பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதல் உள்ளது என்றும் தெரசா மே கூறியுள்ளார்.
பிரெக்ஸிட்டுக்கு தொழிலாளர் கட்சியினரின் எதிர்ப்புக்கு எந்த அங்கீகாரமும் கிடையாது என்று அவர் கூறியுள்ளார். இவ்வாறு தி ஸண்டே டெலிகிராஃப் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com