இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிடம் ஒப்படைப்பு

இலங்கையின் தென் பகுதியில் அமைந்துள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிடம் சனிக்கிழமை முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.
இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிடம் ஒப்படைப்பு
Updated on
1 min read

இலங்கையின் தென் பகுதியில் அமைந்துள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிடம் சனிக்கிழமை முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.
அந்தத் துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகை விட்டதன் மூலம், சிறீசேனா தலைமையிலான அரசு இலங்கையின் வளங்களை சீனாவிடம் விற்றுவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவின் ஆட்சிக் காலத்தில், அவரது சொந்த மாவட்டத்தில் அமைந்துள்ள அம்பாந்தோட்டை நகரில் மிகப் பெரிய துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு கடனுதவி அளிக்க சீனா ஒப்புக் கொண்டது.
அதையடுத்து, கடந்த 2008}ஆம் ஆண்டு அந்தத் துறைமுகம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, பிறகு துறைமுகத்தின் கொள்திறன் மேலும் அதிகரிக்கப்பட்டது. எனினும், அந்தத் துறைமுகத்தால் இலங்கை துறைமுக பொறுப்புக் கழகத்துக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு, சீனாவுக்குத் திருப்பித் தர வேண்டிய கடன் சுமை அதிகரித்தது.
துறைமுகம் அமைத்ததில் சீனாவுக்கு 800 கோடி டாலர் (சுமார் ரூ.51,000 கோடி) கடன் பாக்கி இருப்பதாக அப்போதைய நிதியமைச்சர் ரவி கருணாநாயகே கடந்த ஆண்டு தெரிவித்தார்.
இந்த நிலையில், தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த ஏப்ரல் மாதம் சீனா சென்றபோது கடன் தொகைக்குப் பதிலாக அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 சதவீத பங்குகளைத் திருப்பித் தருவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில், துறைமுகத்தை சீன நிறுவனங்களுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகை விட இலங்கை அரசு ஒப்புக் கொண்டது.
இதன் மூலம், துறைமுகத்தின் உரிமை இலங்கை துறைமுக பொறுப்புக் கழகத்திடம் இருந்தாலும், அதன் மீதான முழு கட்டுப்பாடும் சீன நிறுவனங்களிடம் வரும் நிலை ஏற்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன.
இந்தச் சூழலில், 99 ஆண்டு குத்தகை ஒப்பந்தத்தின் கீழ் சீனாவின் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகக் குழு (ஹெச்ஐபிஜி) மற்றும் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகச் சேவை (ஹெச்ஐபிஎஸ்) நிறுவனங்களிடம் அந்தத் துறைமுகத்தை இலங்கை துறைமுக பொறுப்புக் கழகம் சனிக்கிழமை முறைப்படி ஒப்படைத்தது.
இதையடுத்து, அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வர்த்தக மண்டலங்கள் அந்த நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் வந்தன.
இந்த நடவடிக்கை மூலம், துறைமுகத்துக்காக வாங்கிய கடனை சீனாவுக்குத் திருப்பியளிக்கத் தொடங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மேலும், அந்தத் துறைமுகத்தால் பொருளாதார மேம்பாடும், சுற்றுலா வளர்ச்சியும் ஏற்படும் என்று அவர் கூறினார்.
இந்தியா கவலை: அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் கட்டுப்பாட்டில் வருவதால், இந்தியக் கடல் பகுதியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இந்தியா கவலை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
எனினும், அந்தத் துறைமுகம் வர்த்தகப் பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்று ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com