உங்கள் இணைய தேடுதல்களை முகநூல் பின் தொடரலாம்: அமெரிக்க நீதிமன்றத்தின் அதிர்ச்சி தீர்ப்பு! 

முகநூலிலிருந்து லாக் அவுட் செய்த பின்பு, இணையத்தில் நீங்கள் மேற்கொள்ளும் பிற தேடுதல்களை முகநூல் பின் தொடரலாம் என்று அமெரிக்க நீதிமன்றம் ஒன்று அதிர்ச்சி தீர்ப்பளித்துள்ளது.
உங்கள் இணைய தேடுதல்களை முகநூல் பின் தொடரலாம்: அமெரிக்க நீதிமன்றத்தின் அதிர்ச்சி தீர்ப்பு! 
Published on
Updated on
1 min read

நியூயார்க்: முகநூலிலிருந்து லாக் அவுட் செய்த பின்பு, இணையத்தில் நீங்கள் மேற்கொள்ளும் பிற தேடுதல்களை முகநூல் பின் தொடரலாம் என்று அமெரிக்க நீதிமன்றம் ஒன்று அதிர்ச்சி தீர்ப்பளித்துள்ளது.

உலகின் மிகப் பிரபலமான சமூக வலைத்தளமாக இருந்தாலும், முகநூலினைச் சுற்றிச் சுழலும் சர்ச்சைகளுக்கு என்றுமே பஞ்சம் கிடையாது. அந்த வகையில் ஐந்து வருடங்களுக்கு முன்பாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஹோஸே  மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. அதில் முகநூல பயனாளர்கள், தங்களது கணக்குகளில் இருந்து 'லாக் அவு' செய்த பின்பும், அவர்களது இணைய தேடுதல்கள் தொடர்பான விபரங்களை முகநூல் பின்தொடர்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டது   

இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஒரு குறிப்பிட்ட பயனாளர் தனது முகநூல் கணக்கிலிருந்து 'லாக் அவுட்' செய்த பின்பு, இணையத்தில் அவர் என்ன மாதிரியான விஷயங்கள் குறித்து தேடுதலை மேற்கொள்கிறார் என்பது பற்றிய விபரங்கள் கணினியின் 'குக்கிகள்'  எனப்படும் தகவல் சேகரிப்புத் தொகுப்புகளிலிருந்து சேகரிக்கப்படுகிறது.

அதிலும் குறிப்பாக ஏதாவது ஒரு இணைய தளத்தில், குறிப்பிட்ட தளத்திற்கான முகநூல் பக்கத்திற்கு விருப்பக் குறி தெரிவிக்கும் வசதியினை நீங்கள் பயன்படுத்தி இருந்தால் அதன் மூலமாக நீங்கள் அங்கு பகிரும் தகவல்கள் அனைத்தும் முகநூலுடன் பகிரப்படும் என்றும், இதன் மூலம் முகநூல் கணக்கிலிருந்து 'லாக் அவுட்' செய்தாலே 'குக்கிகள்' அழிக்கப்பட்டு விடும் என்ற முகநூலின் உறுதிமொழி மீறப்பட்டுள்ளது என்றும் மனுவில் தெரிவிக்கபப்ட்டிருந்தது.

இத்தனை நாட்களாக தொடர்ந்த இந்த வழக்கில் தற்பொழுது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.   தனது தீர்ப்பில் நீதிபதி எட்வர்ட் டவில்லா கூறியுள்ளதாவது:

மனுதாரர்கள் தாங்கள் என்ன விதமான பாதுகாப்பு உத்திகளை முகநூலில் எதிர்ப்பார்க்கிறோம் என்பதை தெளிவாக எடுத்துரைக்கவில்லை.மேலும் இதன் மூலமாக தங்களுக்கு ஏதேனும் பொருளாதார இழப்பு உண்டாகியுள்ளது என்பதையும் நிரூபிக்கவில்லை.

பயனாளர்கள் தங்கள் இணையத் தேடுதல் தொடர்பான விஷயங்ககளை பாதுகாப்பாக வைக்க விரும்பினால் அதற்கு நிறைய வழிகள் உள்ளன. இணைய தகவல் பாதுகாப்பு தொடர்பாக நடைமுறையில் உள்ள  அமெரிக்க சட்டங்கள் எதனையும் முகநூல் மீறவில்லை.எனவே இந்த மனுவினை தள்ளுபடி செய்கிறேன்.

இவ்வாறு நீதிபதி தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பின் காரணமாக நிறைய முகநூல் பயனாளர்களுக்கு பாதிப்பு உண்டாகுமென்று தெரிகிறது. அதே நேரத்தில் இந்த தீர்ப்பை முகநூல் வரவேற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com